PUBLISHED ON : பிப் 26, 2016

அரசூரில் திவாகர், திவான், கார்த்திக், சந்துரு என்று நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது தந்தை இறக்கும்போது நால்வருக்கும் வீடு, நிலம், பணம், நகைகள் என அனைத்தையும் சமமாக பிரித்துக் கொடுத்திருந்தார்.
தம்பி சந்துரு, மூன்று அண்ணன்கள் மீதும் பொறாமைப்பட்டான்.
மற்ற மூவரும் செல்வத்தை இழந்து பிச்சைக்காரர்களாக தெருவில் திரிய வேண்டும் என்று எண்ணினான்.
அவனது எண்ணத்திற்கு மெருகூட்டுவது போன்று ஒரு கொள்ளைக் கும்பலை ஒருநாள் சந்தித்தான். அவர்களிடம் தன்னுடைய அண்ணன்களின் விலாசங்களை கொடுத்து கொள்ளையடிக்கச் சொன்னான்.
ஒவ்வொரு மாதத்திலும், ஒவ்வொரு அண்ணன் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டன.
மூன்று மாதங்கள் முடிந்தபின் நான்காவது மாதம் சந்துருவின் வீட்டிற்கு அக்கொள்ளையர்கள் வந்தனர்.
அவர்களைப் பார்த்து, ''என்னுடைய அண்ணன்கள் மூன்று பேருடைய வீடுகளிலும் கொள்ளையடித்ததற்கு நன்றி, உங்களுக்கு சன்மானம் தருகிறேன்,'' என்றான்.
''நீ என்ன எங்களுக்கு சன்மானம் தர்றது. நாங்களே உங்க வீட்டிலே எங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்கிறோம், பீரோ சாவியைக் கொடு,'' என்று மிரட்டினர்.
''இருந்த சொத்துக்களையெல்லாம் இழந்து பரம ஏழையாகயிருக்கும் என்னிடத்திலே ஏது பணம் நகையெல்லாம்?'' என்று கேட்டான்.
''உன்னுடைய பணம், நகைகளையெல்லாம் எங்கே மறைந்து வைத்திருக்கிறாய் என்ற விபரத்தை உன்னுடைய அண்ணன்கள் சொல்லி விட்டனர். அதனால் ஒழுங்காக சாவியைத் தரப் போறியா? இல்லை, எங்களுடைய கொள்ளை குணத்தோட, 'கொலை' குணத்தையும் காட்டவா?'' என்று மிரட்டினர்.
உயிரிருந்தால் பணம்-நகைளை சம்பாதித்துக் கொள்ளலாம். உயிர் போய்விட்டால்... என்று நினைத்தவன் பீரோ சாவியைக் கொடுத்தான்.
நகை, பணம் அனைத்தையும் எடுத்து சென்றனர் கொள்ளையர்கள்.
மற்றவர்களுக்கு கேடு நினைத்து செயல்பட்டதால் தன்னுடையது அனைத்தையும் இழக்க வேண்டி வந்துவிட்டதை எண்ணி மனம் நொந்தான் சந்துரு.
கெடுவான் கேடு நினைப்பான்.
