PUBLISHED ON : பிப் 26, 2016

ஒரு ஊரில் துமிலன் என்ற பெரியவர் இருந்தார். அவர் பெரிய செல்வந்தர். தன்னால் எதுவும் முடியும்; யார் உதவியுமின்றித் தன்னால் எந்தச் செயலையும் சாதிக்க முடியும் என்ற பெருமையில் யாரையும் மதிக்க மாட்டார். அவர் மகன் துஷாருக்கு இவரது பெருமை குணம் பிடிக்காது. அவரை எப்படி திருத்துவது என்று யோசித்தபடியே தோட்டத்திற்குள் நுழைந்தான்.
அவன் தந்தை தோட்டத்தில் தொரட்டியைக் கொண்டு மிக உயர்ந்த முருங்கை மரத்திலிருந்து முருங்கைக்காயைப் பறிக்க முயன்றார். எவ்வளவோ முயன்றும் அவரால் பறிக்க முடியவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன், ''அப்பா உங்களுக்கு உதவுகிறேன்,'' என்றான்.
''இவ்வளவு வயதும், உயரமும் உள்ள என்னாலேயே பறிக்க முடியவில்லை. நீ நாலடி இருந்து கொண்டு சாதித்து விடுவாயா?'' என்று கேட்டார்.
''நான் முயற்சிக்கிறேன்; எனக்கு நம்பிக்கை இருக்கிறது,'' என்றான் மகன்.
கேலிச் சிரிப்போடும், அலட்சியத்தோடும் தொரட்டியை மகனிடம் கொடுத்தார் தந்தை.
''அப்பா கொஞ்சம் குனியுங்கள். உங்கள் தோளில் நான் ஏறிக் கொள்ள வேண்டும்,'' என்றான்.
அவன் யோசனை அவருக்கு வியப்பைத் தந்தது. உடனே குனிந்து அவனைத் தோளில் ஏற்றிக் கொண்டார். தந்தையின் தோளில் இறுக்கமாக விழாதவாறு நின்று தொரட்டியைக் கையில் வாங்கி முருங்கை மரத்தின் காயை வெகு லாவகமாகத் தட்டிவிட்டான். நிமிடத்தில் மளமளவெனக் காய்கள் அவன் தந்தையின் காலடியில் வந்து விழுந்தன.
''எப்படிடா இதையெல்லாம் கற்றுக் கொண்டாய்?'' என்றார் தந்தையார்.
''அப்பா, இதுவரை யாரையும் மதிக்காமல் நீங்கள் நிமிர்ந்திருந்தபோது உங்களை யாருமே மதிக்கவில்லை. உங்கள் நிலையிலிருந்து இறங்கி ஒரு நிமிடம் எனக்காக நீங்கள் குனிந்தீர்கள் அல்லவா? அந்தப் பணிவைப் பார்த்து முருங்கைக் காய்கள் இப்போது உங்கள் காலடியில் வந்து விழுந்துள்ளன,'' என்று கூறினான்.
அன்று முதல் அவரது கர்வம் குறைந்தது. அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனாகத் தன் மகன் விளங்கினான், என அனைவரிடமும் தன் மகனைப் பாராட்டி பெருமையடைந்தார் பெரியவர்.
