PUBLISHED ON : செப் 09, 2016

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
ஸ்கொயர் தர்பூசணி வாங்கலயோ!
உலகின் கனவு தேசங்களில் ஒன்றாக மிக உயரத்தில் வீற்றிருக்கிறது ஜப்பான். இந்நாட்டை பற்றி அதிகம் அறிந்திராத சில சுவாரசியமான விஷயங்களை இங்கே காண்போம்.
* 'காங்கோ குமி' என்பது அந்த நிறுவனத்தின் பெயர். உலகிலேயே மிகப் பழமையான நிறுவனம் என்பது மட்டுமின்றி, நீண்ட காலமாக அதாவது கிட்டத்தட்ட ஆயிரத்து 400 ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது. கி.பி.,578ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2006ம் ஆண்டு, 'டாகாமாட்சு' என்பவரால் கவனிக்கப்பட்ட போது, இத்தகவல் அறியவந்தது குறிப்பிடத் தக்கது.
* முழுவதும் முயல்களைக் கொண்ட தீவு ஒன்று ஜப்பானில் உள்ளது. இதற்கு 'முயல்தீவு' என்று பெயர். சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது மற்றும் அதிகப்படியான வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த முயல்தீவு. இங்கு நுாற்றுக்கணக்கான முயல்பூங்காவில் பரவலாக உலாவி வருவதை தீவு முழுவதும் காணலாம். அத்துடன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்கிறது. இதை இவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* சதுர தர்பூசணி எதையெல்லாமோ காரணம் காட்டி, வித்தியாசமான வகைகளில் விவசாயம் செய்கின்றனர். ஆனால், இந்த ஜப்பானியர்கள் வைப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சதுர வடிவான தர்பூசணிப் பழங்களை பயிரிடுகின்றனர்.
* ஜப்பானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 24 பில்லியன் ஜோடி சாப் ஸ்டிக்குகளை உபயோகிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
* ஜப்பானிய மொபைல்கள் 90 சதவீதம் தண்ணீர் பட்டால் சேதமடையாதவை. ஏனென்றால், இளைய தலைமுறையினர் பலர் இதனை குளிக்கும் போது கூட பயன்படுத்துவர். (ஹையோடா...அங்கேயுமா?)
* குறிப்பிட்ட விஷயங்கள் தவிர பொதுவாக ஜப்பானில் இருக்கும் தெருக்களுக்கு பெயர்கள் என்பது கிடையாது.
வீட்டிற்கு எவ்வளவு பெயர்கள்!
தனி வீடு, பிளாட், வில்லா, பங்களா, மாளிகை 2BHK இப்படி எப்படியெல்லாம் வழங்கப்படுகிறது வீடுகளின் பெயர்கள்...
தனி வீட்டைக் குறிப்பிடும், 'வில்லா' என்கிற வார்த்தை லத்தின் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு தாவி, பின், உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. ரோமாபுரி சாம்ராஜ்யம் புகழோடு விளங்கிய காலத்தில் தலை நகரத்திற்கு அருகில் கோட்டைக்குள் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட மேல்தட்டு வர்க்கத்தின் வீடுகளை, 'வில்லா' என்று அழைத்தனர்.
சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்பும், வில்லா என்கிற வார்த்தையின் வசீகரம் குறையவில்லை.
பண்ணைகளுக்கு நடுவில் பாதுகாப்பாகக் கட்டப்பட்டு இருக்கும் அனைத்து வீடுகளையும், 'வில்லா' என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஐரோப்பிய நாடுகள், ௧௯ம் நுாற்றாண்டில் வில்லாவுக்கு மேலும் ஒரு புது விளக்கத்தை கொடுத்தன. அதன்படி மற்ற வீடுகளிலிருந்து பிரிந்து தனியாக கட்டப்பட்ட வீடுகள் அனைத்துமே 'வில்லா' என்ற பெயரைப் பெற்றுவிட்டன.
நம்மால் என்ன வெல்லாம் முடியும்!
மனிதனுக்கு அவன் செய்யும் செயல்களுக்கு மிக முக்கியமானது உடல் உறுப்புகள்.
கிரிக்கெட் விளையாடுகிறார் ஒருவர். அவருக்கு இரண்டு கைகள் இல்லை.- என்ன வியப்பாக உள்ளதா?
இரண்டு கைகளையும் இழந்த ஒருவர், கிரிக்கெட் விளையாடி அசத்துகிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அந்த நபர் கிரிக்கெட் ஆடுவது மட்டுமின்றி, அந்த மாநில பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
அவரது பெயர், அமிர் ஹீசைன் லோனே; வயது 26. இவரது தந்தை தெற்கு காஷ்மீரில் உள்ள, 'பிஜ்பெஹரா' நகரில் பேட்டுக்கு தேவையான மரங்களை செதுக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த தன் சகோதரருக்கு, அமிர் ஹீசைன் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றார்.
சாப்பாடு கொடுத்து விட்டு, விளையாட்டு வாக்கில் மரத்தை அறுக்கும் இயந்திரத்தை இயக்கிய போது பெல்ட்டில் இரண்டு கைகளும் சிக்கி நசுங்கி விட்டது. இந்த விபத்தில் இரண்டு கைகளும் துண்டாகி விட்டது. இந்த சம்பவம் நடந்த போது அவருக்கு வயது ஏழு. உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போதிலும், கைகளை பொருத்த முடியவில்லை.
வாழ்க்கையில் எவ்வளவோ சவால்களை சந்தித்த போதிலும், ஒரு போதும் நம்பிக்கையை இழக்கவில்லை என்று கூறும் இவர், இடது தோள்பட்டை மற்றும் தலையால் பேட்டை பிடித்து பேட் செய்கிறார்.
இதே போன்று சுழற்பந்தும் வீசுகிறார். பந்து வீசும்போது வலதுகாலை பிடிமானத்துக்கு பயன்படுத்துகிறார். நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். அவரை போன்று தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் தான் எனக்கு உந்து சக்தி என்கிறார் மனம் தளராமல்!
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
