தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கீறி கீறி, ரப்பர் சேகரி!

ரப்பர் மரங்களின் தண்டுகளில் இருந்து வடியும் பால்போன்ற திரவமே, ரப்பரின் மூலப்பொருளாகும்; இதை, 'லாடெக்ஸ்' என்பர்.

இப்படி சேகரிக்கப்படும் லாடெக்ஸ் மூலப்பொருள், தொழிற்சாலைகளில் பல வேதிவினைகளுக்கு பின், வித விதமான ரப்பர்களாக மாறுகின்றன.

சார்லஸ் குட் இயர், என்பவர் தான், லாடெக்ஸ்சை கொதிக்க வைத்து, அது இளகியதும், கந்தகத்தை சேர்த்தால், நீண்ட காலம் கெட்டியாக இருந்து, தேவைப்படும் போது, மாற்றி பயன்படுத்தும் திடமான ரப்பர் பொருளை கண்டறிந்தார். அதன்பின் தான், ரப்பரின் பயன்பாடு மிகுதியானது.

குட்இயரின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் டயர். இதுவும், ரப்பரின் ஒரு வகை. இன்றோ, ரப்பர் பொருட்களை பயன்படுத்தாத துறைகளே இல்லை எனலாம்.

ஏழாம் ஆண்டிலிருந்து ரப்பர் தர ஆரம்பிக்கும் ரப்பர் மரம். 30 ஆண்டுகளுக்கு பயன் தரும். மரத்தில், ஒரு அடி உயரத்திற்கு, 'லாடெக்ஸ்' சேகரிப்பதற்காக கீறி விடுவர். சிறிது நாட்களுக்கு ஒருமுறை, கீறிவிடும் இடத்தை மாற்றுவர். ஏழு முதல் 10 ஆண்டுகளில் அந்த வடுக்கள் மறைந்து, புதிய பட்டைகள் உருவாகிவிடும்.

ரப்பர் மரங்களின் தாயகம் தென் அமெரிக்கா. இதன் உபயோகத்தை முதலில் அறிந்திருந்தவர்களும் அவர்களே. ஆனால், புதையல் தேடி அலைந்த லத்தின் அமெரிக்கர்கள், ஸ்பானிஷ்காரர்களே ரப்பரின் பயன்பாடு வேறு இடங்களுக்கு பரவ காரணமாக இருந்தனர்.

கடந்த 1870ல், ஹென்றி விக்ஹாம் என்பவர், பிரேசிலில் இருந்து ரப்பர் விதைகளை திருடி, இங்கிலாந்தில் பயிரிட்டு பார்த்தார். இங்கிருந்தே இலங்கை மற்றும் மலேசியா நாடுகளுக்கு ரப்பர் பரவியது. தற்போது உலகில் சரிபாதி அளவுக்கு செயற்கை ரப்பர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

விஞ்ஞானியின் குப்பைக்கு நோபல்!

ரஷிய நாட்டின் புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர், லாண்டவ். காந்தவியல் துறைகளில் சிறந்து விளங்கியவர். கார்கோவ் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில், இயற்பியல் துறை தலைவராக பணியாற்றியபோது, ஒருநாள், அவருக்கு அவசர தந்தி ஒன்று வந்தது.

'நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனால், உங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள், சாதனைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கை தயாரித்து, இந்த தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டு கொள்கிறோம்' என்று தந்தியில் குறிப்பிட்டிருந்தது.

ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த லாண்டவுக்கு, இறுதி கெடுவின் சில நாட்களுக்கு முன், தந்தியின் நினைவு வர, அவசர அவசரமாக பட்டியலை தயாரிப்பதற்காக, தன் கண்டுபிடிப்பு கட்டுரைகளை, மேஜை மீது அள்ளி வைத்தார்.

அதை பார்த்து, அவருக்கே தலை சுற்றியது. 'இந்த குப்பைக்கு நோபல் பரிசு தருவார்களா!' என்று தனக்கு தானே புலம்பியபடியே, பட்டியலை தயார் செய்து அனுப்பி வைத்தார்.

கடந்த, 1962ல், இயற்பியலுக்கான நோபல் பரிசு லாண்டவ்விற்கு கிடைத்தது. பரிசு பெற்ற பின், இந்த தகவலை வெளியிட்டு பெருமிதம் கொண்டார் லாண்டவ்!

பிரிட்ஜ்ஜால் பிறந்தது டேப்!

இரண்டு பொருட்களை ஒட்ட வைக்க, பரிசுப் பொருட்களை அழகான பொட்டலமாக கட்டுதல் என, ஏராளமான ஒட்டுதல் வேலைகளுக்கு பயன்படும், 'செல்லோ டேப்'பை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால், இதை கண்டறிந்தவர் யாரென்று பலருக்கு தெரியாது.

இன்றைய நவீன, ஸெல்லோ டேப்பை உருவாக்கியவர் ஜோஸர் ஏ.பார்டன். ஆனால், இதற்கு முன்னோடியாக இருந்து, செல்லோ டேப்பை முதன் முதலில் உருவாக்கியவர், ரிச்சர்டுட்ரு; இவர் ஒரு அமெரிக்கர்.

இவர், 1929ல் மின்னிசோட்டா ஆய்வகத்தில் துணை உதவியாளராக இருந்தபோது, 'ஸ்காட்ச் பிராண்டு' எனும் ஒரு ஒட்டும் நாடாவை கண்டுபிடித்தார். ரப்பர் உருளையாக தயாரிக்கப்பட்ட இந்த ஒட்டும் நாடாவை, சுற்றி வைத்திருந்தபோது, ஒன்றொடொன்று ஒட்டி கொண்டதில்லை.

இந்த கண்டுபிடிப்பை அறிந்த, 'ரெபிரிஜி ரேட்டர்' தயாரிப்பாளர்கள், இதில் காப்பு பொருளாக பயன்படுத்துவதற்கு, ஒரு ஒட்டும் பசையை தயாரித்து வழங்க கேட்டனர். எனவே, அதுபற்றி ஆராய்ச்சி செய்த ரிச்சர்டு, ஓராண்டு முயற்சிக்கு பின், 'செலபன் டேப்' என்ற ஓட்டும் நாடாவை உருவாக்கினார்.

இதன் நவீன வடிவமே, இன்றைய செல்லோ டேப். ஜெல்மார் புராடக்ட்ஸ் என்ற நிறுவனம், இவரது கண்டுபிடிப்பை தயாரித்து விற்பனை செய்தது. இதை நவீனப்படுத்தியவர், பார்டன் ஆவார். இவர் உருவாக்கிய டேப், நன்கு ஒளி ஊடுருவக் கூடியதாகவும், எந்த பொருளிலும் எளிதாக ஒட்டும் வகையிலும் இருந்தது.

நல்ல காலம் நடிகனாகவில்லை!

லண்டனில் ஒரு சிற்றூரிலிருந்து தலைநகருக்கு பிழைப்பு தேடி வந்த அவனுக்கு, நாடக அரங்கம் ஒன்றில் வேலை கிடைத்தது. வேலை, அரங்கின் உள்ளே அல்ல, வெளியே. அக்காலத்தில், லண்டனில் நாடகக்கலை கொடிகட்டி பறந்தது. பலர், குதிரை வண்டிகளில் வருவர். அந்த குதிரை வண்டியை காவல் காக்கும் வேலை அவனுடையது.

அரங்கை ஒட்டியபடியே பார்க்கிங் ஏரியாவும் இருந்ததால், நாடக வசனங்களை கேட்டபடியே, தன் காவல் பணியை பார்த்து வந்தான். தொடர்ந்து கேட்டு கேட்டு, வசனங்கள் அவனுக்கு மனப்பாடம் ஆகிவிட்டன. அதில் சிலவற்றில், அவனுக்கு உடன்பாடு இருக்காது. 'அது அப்படி இருக்கலாம்... இது இப்படி இருக்கலாம்' என நினைத்து கொள்வான்.

ஒருநாள், அன்றைய நாடகத்தில் முக்கிய கதாபாரத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் வரவில்லை. அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என நாடக குழுவினர் தவித்த போது, வண்டிக்காவலன், 'நான் நடிக்கிறேன்' என தானாக முன் வந்தான்.

நாடக குழுவினருக்கு, அவன் மீது உடனே நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும், வேறு வழி இல்லாததால் நடிக்க சம்மதித்தனர். மேடையேறிய அவன், தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தில், சிறு பிசிறும் இல்லாமல், தொழில்துறை நாடக கலைஞன் போல, பிரமாதமாக நடித்து விட, நாடக குழுவினர் பிரமித்தனர். பின், அவனை தேடி பல அழைப்புகள் வந்தன.

ஆனால், அவனுக்கு நடிப்பை தன் தொழிலாக்க அவ்வளவாக ஆர்வமில்லை. நாடகங்களை படைக்க விரும்பினான். விரும்பியபடியே எழுதவும் செய்தான். அதன் மூலம் உலகப் புகழ் பெற்றான்.

அப்படி அவனால் எழுதப்பட்ட நாடகங்கள், பின்னாளில் உலகின் பல பல்கலைக் கழகங்களிலும், கல்லுாரி களிலும், பள்ளிக்கூடங் களிலும் பாடங்களாக இடம் பிடித்தன. நாடக ஆசிரியரான, அந்த குதிரை வண்டிக்காரன் வேறு யாருமில்லை. 37 நாடகங்களை எழுதி, அழியா புகழ் பெற்ற நாடக இலக்கியத்தின் மாமேதை, வில்லியம் ஷேக்ஸ்பியர் தான்.

முயன்றால் முடியாதது எதுவும் உண்டோ...

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us