PUBLISHED ON : பிப் 24, 2017

தென்மேற்கு இங்கிலாந்தில், 'வைல்ட்ஷையர்' என்னுமிடத்தில் வசிப்பவர், டோனி ஹ்யூஜஸ்; இவர் ஒரு விமானி. இவர் நுண்ணிய, இலகுரக விமானம் ஒன்றை, சொந்தமாக வைத்திருந்தார்.
அங்குள்ள வயல்வெளியின் மேல், ஒரு முனையில் இருந்து, மறுமுனைக்கு, தன் விமானத்தில் பறந்து செல்வதை, வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படி ஒருநாள், மறுமுனைக்கு சென்றவர், மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வரும் போது, வயல்வெளியில் கண்ட காட்சி, அவரை திடுக்கிட வைத்தது.
பயிர்களை, சேதமில்லாமல் சாய்த்தும், மடித்தும், நிமிர்த்தியும் மிக பிரம்மாண்டமான சித்திரம் ஒன்று வரையப்பட்டிருந்தது. '10 நிமிடங்களுக்கு முன், இந்த வயல்வெளியின் மேலாக தான் பறந்து சென்றேன்.
'அப்போது, பயிர்கள் வழக்கம்போல நிமிர்ந்து காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தன. அதற்குள் எப்படி இவ்வாறு மிகப் பெரிய சித்திரம் வரையப்பட்டது; இதை யார் வரைந்திருப்பார்; இது எப்படி சாத்தியம்...' என்று தன், 'வயர்லெஸ்' கருவியில் அலறினார் டோனி.
திரும்பவும், அந்த வயல்வெளியை நன்றாக உற்று பார்த்தார். செழித்து வளர்ந்த பயிர்களை சிதைக்காமல், வரையப்பட்டிருந்தது. நிலத்தில் இருந்து பார்க்கும்போது, என்னவென்றே தெரியாமல் இருந்தது. ஆனால், வானத்தில் பறந்தால் மட்டுமே தெரியக்கூடிய வகையில் வரையப்பட்ட மிக பிரம்மாண்டமான சித்திரம் அது!
டோனி ஹ்யூஜஸினால் நம்பவே முடியவில்லை. பட்டப் பகலில், 10 நிமிட இடைவெளியில், இதை வரைவது அத்தனை எளிதானதா என்ன...
அந்த பகுதியில், எந்த ஒரு வாகனமும் வந்ததற்கான அல்லது நிறுத்தப்பட்டதற்கான அடையாளமோ, மனித நடமாட்டம் இருந்ததற்கான காலடி தடமோ இல்லை. எங்கு பார்த்தாலும், பரந்து விரிந்த வயல்வெளி பிரதேசம். காற்றில் ஆடும், கோதுமை பயிர்கள் அறுவடைக்கான நேரம்.
இதுபோன்ற சித்திரங்கள், அப்பகுதியில், ௮௦ இடங்களில், பல விதங்களில் உருவாகியிருந்தன. அவை அனைத்தும், கணித மேதைகளால் வரையப்பட்ட, மிக சிக்கலான கணிதங்களுக்கு ஒப்பான வகையில், மிக நேர்த்தியாக இருந்தது.
சாதாரணமாக காகிதத்தில் சித்திரம் வரைவதற்கே, பல மணி நேரம் ஆகும். ஆனால், வயல் வெளிகளில் சித்திரங்களை உருவாக்குவது என்பது நிச்சயமாக வியப்புக்குரியது!
அதுமட்டுமல்லாமல், இதை போன்ற பயிர் வட்டங்களை மனிதர்கள் உருவாக்க வேண்டும் என்றால், எத்தனை நாட்கள் ஆகும் என்று கணக்கிட விரும்பினார். அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில், ஒரு சாதாரண உருவத்தை, பகல் வெளிச்சத்தில் உருவாக்க, ஐந்து நாட்கள் பிடித்தன. அதே நேரத்தில், சித்திரம் வரைந்த போது, அங்கிருந்த பயிர்கள் நாசமடைந்தன.
இந்த பயிர் வட்டங்களுக்குள் செல்லும் விலங்குகள் மிரண்டு ஓடின. அதேபோல, இதற்குள் சென்றபோது, கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் முட்கள், படு வேகமாகவும், சில நேரங்களில் மிக மெதுவாகவும் சுற்றின. இவ்வாறு, மாறி மாறி சுற்றுவது ஆச்சர்யத்தை தந்தது.
சிலருக்கு, உள்ளே நுழைந்ததும், தலை சுற்றல், வாந்திக்கான அறிகுறி தோன்றின; சிலருக்கு, தங்கள் உடம்பிலுள்ள நோய்கள் குணமாகிவிட்டன. இப்படி, இந்த பயிர் வட்டத்தை பற்றி, பல பல கதைகள், அந்த பகுதியில் தொடர்ந்து உலவி வருகின்றன. ஆனால், இவை அனைத்தும், எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
பயிர் வட்டங்கள், 1970ல் தோன்றி, படிப்படியாக பல வட்டங்களாக மாறி, சித்திரங்களாக வடிவெடுத்து, சிக்கலான சித்திரங்களாக மாறி, உயிர் கணித குறியீடுகளை தாங்கிய சித்திரங்களாக வளர்ந்து, ஏதோ தகவல் சொல்கிற விதமாக மாறியது.
எனவே, உலகம் முழுவதுமுள்ள பல அறிஞர்களை, இந்த பயிர் வட்டங்கள் ஈர்க்க துவங்கின. அநேகமாக எல்லாரும் இதை நோக்கி படையெடுத்தனர். இதை பற்றிய ஆய்வுகளை, அதி தீவிரப்படுத்தினார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மனிதர்களிடம் இருந்து, ஒரு புதிய, ஆனால், நம்புவதற்கு சங்கடப்படுத்துகிற தகவல் ஒன்று கிடைத்தது.
'ஒரு உதைபந்து அளவிலான வெளிச்ச பந்து, வயல்வெளி மேல் பறந்து திரிவதை கண்டோம். அந்த வெளிச்ச பந்து, சில நிமிடங்களில், பயிர் வட்டங்களை உருவாக்கியதை கண்களால் கண்டோம்' என்று சிலர் கூறினர்.
அத்துடன், அந்த காட்சியை படம் பிடித்து வைத்திருந்ததை அவர்களிடம் காண்பித்தனர். இந்த விவரம் ஊடகங்களுக்கும் பரவியது. அவர்களுக்கு இதில் நம்பிக்கை ஏற்படவில்லை; நேரடியாக அதை பார்த்தால் மட்டுமே, செய்தி வெளியிட முடியும் என்று தீர்மானித்தனர். எனவே, கேமரா சகிதமாக இரவு நேரங்களில் அந்த பகுதியில், ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அந்த அற்புதத்தை நேரடியாக கண்ட, செய்தியாளர்களும் திகைத்தனர். அந்த வெளிச்ச பந்துகள் வானில் தோன்றி, அங்குமிங்கும் அலைந்ததை நேரில் கண்டு அதிர்ந்து, அதை வேகமாக படமெடுத்தனர்.
இரவில் மட்டுமல்லாமல், பகலிலும் இவ்வாறு வெளிச்ச பந்துகள் தோன்றுவதை கண்டு, சப்த நாடியும் ஒடுங்கி போயினர்.
ஒருநாள், அந்த வெளிச்சப் பந்துகள் தோன்றியபோது தயாராக காத்திருந்த, ராணுவ ஹெலிகாப்டர்கள் அதை நோக்கி, பறந்து சென்றன. அதன் அருகில் சென்றபோது, அந்த பந்துகள் மறைந்துவிட்டன.
இப்படி, ஒரு தடவையல்ல பல தடவைகள் நிகழ்ந்துள்ளன. இவையனைத்தும், வீடியோவாக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த வெளிச்ச பந்தை பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நிச்சயமாக இது விமானம் கிடையாது என்றும், நட்சத்திரமும் கிடையாது என்றும் உறுதியாக கூறினர். அப்படியானால்...
இந்த பயிர் வட்டத்தை முதன் முதலாக, 1678ல் இதே, இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள, 'ஹார்ட்போர்டுஷையர்' என்னுமிடத்தில், பேய் ஒன்று, விவசாயி ஒருவருக்கு அமைத்து கொடுத்தாக கூறப்படுகிறது.
அதன்பின், 1920ல் மீண்டும் பயிர் வட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. அப்புறம், 1970ல் இருந்து, இன்று வரை தோன்றி கொண்டே இருக்கிறது. முடிவாக, பேய்கள் தான் இவற்றை உருவாக்குகின்றன என்பதே முக்கால்வாசி பேரின் கருத்து.
