PUBLISHED ON : பிப் 24, 2017

களத்து மேட்டில், இரண்டு காளை மாடுகள் வைக்கோலை சாப்பிட்டு கொண்டிருந்தன. அந்த வைக்கோல் அந்த அளவுக்கு சுவையில்லாததால், இரண்டும் ஒன்றையொன்று பார்த்து, முகம் சுளித்துக் கொண்டன.
“நண்பா! நம் எஜமானர் நாளுக்கு நாள் நமக்கு நல்ல இரையை தர மறுக்கிறார். ஏதோ கையில் கிடைத்த இரையை கொடுத்து, நமக்கு இரை போட வேண்டும் என்ற கடமையை முடித்து கொள்கிறார். நாமும் வேறு வழியில்லாமல், அவர் கொடுக்கிற இரையை சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இப்படியே நாம் இருந்தால் நம் நிலைமை என்னாகும்?” என்று வருத்தத்துடன் கூறியது ஒரு காளை.
“நண்பா! நம் எஜமானர் நல்லவர் தான். திடீரென இப்படி மாறிட்டார். இதற்கு முன் ஒருபோதும் இந்த மாதிரியான துரோகம் செய்ததில்லை. இப்போது திடீரென அவரிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அது என்னவென்று நாம் கண்டுபிடிப்போம்,” என்றது.
“நீ சொல்வதை கேட்கிறபோது, எனக்கு சற்று வியப்பாக தானிருக்கிறது. அதை என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. நீ சொல்கிறபடி அதற்கான காரணத்தை நாம் முதலில் கண்டு பிடிப்போம்,” என்றது மற்றொரு காளை.
மறுநாள், ஒரு காளை மாடு மட்டும் தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருந்தது. அதை கவனித்த மற்றொரு காளை மாடு, “நண்பா... நீ இன்று எதிலுமே நாட்டம் இல்லாமல், தீவிரமாக சிந்தனை செய்து கொண்டிருக்கிறாயே... அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டது.
“நண்பா! எல்லாவற்றிகும் நாம் தான் காரணம். நாம், முன்போல் கடினமாக உழைக்கவில்லை. நாம், ஒவ்வொரு நாளும் ஏனோ தானோ வென்று கால நேரத்தை வீணாக்குகிறோம். அதனால் தான் நம் எஜமானர் நம்மீது கோபமாக இருக்கிறார்.
''நாம் பொறுப்பு இல்லாமல் நடக்கிறோம் என்பதை, அவர் தெரிந்து கொண்டார். அதன் காரணமாக அவர் நமக்கு சரியாக உணவளிப்பதில்லை; சரியாக கவனிப்பதில்லை; அவர் நம்மீது சற்று கோபமாக இருக்கிறார்.
“எனவே, நாம் அவர் மனதை குளிர வைக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக உழைத்திட வேண்டும். நம்மாலும் மிகப் பெரிய அளவுக்கு உழைத்திட முடியும் என்பதை, அவருக்கு காட்ட வேண்டும்,” என்றது.
“நன்றாக சொன்னாய் நண்பா! நம்முடைய தவறினை நாம் உடனடியாக திருத்தி கொள்ள வேண்டும். இனிமேல், நாம் இருவரும் ஒன்று சேர்ந்து முழு மூச்சுடன் உழைப்போம்,” என்று கூறியது மற்றொரு காளை மாடு.
இரண்டு காளைகளும் நன்றாக உழைத்தன. இதை பார்த்த முதலாளி மகிழ்ச்சியடைந்தார். காளைகளுக்கு நல்ல இரையை வழங்கி நல்ல முறையில் கவனித்தார்.
என்ன செல்லூஸ்... நீங்கள் இந்த காளை அண்ணாச்சிகளை போல கஷ்டப்பட்டு படிச்சீங்கன்னா நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உங்க பெற்றோரும் நீங்க விரும்பின பரிசு பொருட்களை வாங்கித்தருவாங்க! எப்புடி?
