தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : மே 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

மானோட்டி!

மக்களுக்கான அரசின் உதவி, 'மானியம்' என்ற பெயரில் தற்போது, நடைமுறையில் உள்ளது. 'மானியம்' என்ற சொல், சில நுாற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழக பகுதியில் வழக்கத்தில் உள்ளது. 'பொதுப்பணிக்கான ஊதியம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்போதைய தமிழகம், சென்னை ராஜதானி என, அழைக்கப்பட்டது. இங்கு, 17ம் நுாற்றாண்டு முதல், 19ம் நுாற்றாண்டு வரை, பதிவான வருவாய் ஆவணங்களை முனைவர் சவுந்தரபாண்டியன் ஆய்வு செய்து, பல அரிய தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதன் விபரம்...

கிராம விழாக்களில், சுவாமி ஊர்வலம் நடத்துவது, பல நுாற்றாண்டுகளாகவே பழக்கத்தில் உள்ளது. ஊர்வலம் வரும் சுவாமிக்கு, குடை பிடிக்கும் பணியை பரம்பரையாக, சிலர் செய்து வந்தனர். அவர்களுக்கு, 'குடை விருத்தி மானியம்' என்ற பெயரில் சம்பளம் கொடுக்கப்பட்டது.

காட்டில் வசிக்கும் மான்கள், அவ்வப்போது, விளைநிலங்களுக்குள் புகுந்து விடும்; இதனால் பயிர்கள் நாசமாகி, விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை தடுக்க, 'மானோட்டி' என்ற பணியை அரசு உருவாக்கியிருந்தது. விளைநிலங்களுக்குள் வரும் மான்களை விரட்டும் பணியை பாரம்பரியமாக அவர்கள் செய்து வந்தனர். இந்த பணிக்காக மானியம் வழங்கியது அரசு.

அரசின் அறிவிப்புகளை, 'குடு குடுப்பை' அடித்து, மக்களுக்கு செய்தியாக சொல்ல, குடுகுடுப்பைக்காரர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு, 'குடு குடுப்பை மானியம்' வழங்கப்பட்டது.

காட்டில் வசிக்கும் புலிகள், கிராமங்களுக்கு வருவதை தடுக்க, வசிய மந்திரக்காரர்களை அரசு பணியமர்த்தியிருந்தது. புலிகளின் வாயைக் கட்டி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் திறமையான மந்திரவாதிகளுக்கு, 'புலிக்கட்டி மானியம்' தரப்பட்டது.

கோவில் விழாக்களின் போது, சுவாமி ஊர்வலம் நடத்துவர். அப்போது தெருக்களில், தோரணம் கட்டி வரவேற்பு கொடுப்பர். இது போல் தோரணம் கட்டும் பணிக்கு, பரம்பரையாக பணியாளர்களை நியமித்திருந்தது அரசு. அவர்களுக்கு, 'தோரணம் கட்டி' என்று பெயர். அந்த பணிக்காக, மானியம் அளிக்கப்பட்டது.

கிராம குளங்களைப் பழுது பார்த்து, பராமரிக்கும் பணியாளருக்கு, 'ஊருணி மானியம்' என்ற பெயரில் சம்பளம் வழங்கப்பட்டது.

சமயக்காரர் என்று, ஒரு பிரிவினர் உண்டு; விஷ்ணு கோவில் அர்ச்சகர்களின் கீழ் பணிபுரிந்தனர். அர்ச்சகர்கள் வந்து போவது பற்றிய விவரங்களை, ஊர் மக்களுக்கு தெரிவிப்பது தான் இவர்களது வேலை. இந்த பணிக்காக சமயக்காரருக்கு, மானியம் தரப்பட்டது.

ஜமீன்தார்களை புகழ்ந்து பாடி, கவிதை இயற்ற புலவர்கள் இருந்தனர். அவர்களுக்கு, 'புலவர் மானியம்' வழங்கப்பட்டது. தமிழில் சிற்றிலக்கியங்கள் பெருக, இந்த மானியமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

மானியம் என்றால், பணம் மட்டும் அல்ல; நிலம், தானியம் என்று, பல வகையாக வழங்கப்பட்டது. அந்த காலத்தில், புழக்கத்தில் இருந்த வருவாய் ஆவணச் சொற்களை விளங்கிக் கொண்டால், இலக்கியம், வரலாறு போன்றவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us