தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகின் மகுடம்

குங்குமப்பூவை, தமிழில் ஞாழல் மலர் என்பர். ஆங்கிலத்தில், சாப்ரான். இது, லத்தீன் மொழியில் இருந்து பிறந்த சொல். ஒரு வித்திலையுள்ள தாவரம். இதன் தாவரவியல் பெயர், 'இருடேசியே' ஆகும். பைக்ரோகுரோசின், சாபிரானல் என்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளதால் கசப்பு சுவை அதிகமாக இருக்கும்.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பூ இது தான். ஐரோப்பா கண்ட பகுதியில் வாழ்ந்த கிரேக்கர்கள், 3000 ஆண்டுகளுக்கு முன்பே கும்குமப்பூ செடியை பயிரிட்டுள்ளனர். கி.மு., 7ம் நுாற்றாண்டில் பயன்படுத்தியதற்கு தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மேற்காசிய நாடான ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ள மலைகளில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில், குங்குமப் பூவின் வண்ணம் குழைத்து பூசப்பட்டுள்ளது. இவை, 50 ஆயிரம் ஆண்டு பழமையானதாக கருதப்படுகிறது.

குங்குமப்பூ வண்ணத்தில் தோய்த்த நுாலில், துணி நெசவு செய்த தகவலும் கிடைத்துள்ளது. கடும் துக்கத்தால் பாதிக்கப்பட்டவரை சீராக்க, சூடான தேநீரில், குங்குமப்பூவை கலந்து கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது குங்குமப்பூ.

அடிப்படையில் இது ஒரு மசாலா பொருள். சமையலில் சேர்த்தால் சுவையும், மணமும் வித்தியாசமாய் இருக்கும். சமைத்து முடித்தபின், உணவில் சிறிதளவு துாவினால் சுவை அதிகரிக்கும்.

வெறியூட்டியாகவும், மயக்க மருந்தாகவும், குங்குமப்பூவை பயன்படுத்தியுள்ளனர் பாரசீகர்கள். உலகப்புகழ் பெற்ற கிரேக்க அழகி கிளியோபாட்ரா உபயோகித்ததாக வரலாறு உண்டு.

போர்களின் போது, காயமடைந்த வீரர்களைக் குணப்படுத்த, மருந்தாக பயன்படுத்தியுள்ளார், மன்னர் அலெக்சாண்டர்.

பாரசீக பகுதியில் இருந்து தான், மங்கோலிய படைகள், குங்குமப்பூவை ஆசிய நாடான சீனாவுக்கு கொண்டு வந்தன. சீனாவில் புத்த மத சடங்கில் படைப்பதற்கு, இதை வளர்த்ததாக, சீன மருத்துவ நிபுணர் வான்ஜென் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி., 3ம் நுாற்றாண்டு முதல், குங்குமப்பூ சாகுபடி பரப்பாக மாறியது காஷ்மீர்.

தமிழர்கள், 2000 ஆண்டுகளாக குங்குமப்பூவை பயன்படுத்தி வருகின்றனர். தலைவலியை குணப்படுத்த, வலியில்லா பிரசவம் நடத்த என, பயன்பாடு பலவிதமாக உள்ளது.

குங்குமப்பூ தாவரம் மிக அழகானது; அதன் பூக்கள் சிவப்பு சூல் முடியுடன், அடர் ஊதா வண்ணத்தில் ஜொலிக்கும். பூவின் சூல்முடி மற்றும் தண்டுப்பகுதியைத்தான் குங்குமப்பூ என்பர். இரண்டு லட்சம் பூக்களில் சூல்முடியை சேகரித்தால், ஒரு கிலோ குங்குமப்பூ கிடைப்பதாக கூறப்படுகிறது. பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல் என, பல ரகங்கள் உள்ளன. இதில், ஆன்டிஆக்சிடன்ட், கரோட்டின் ஆகியவை அதிகம்.

குங்குமப்பூ, பார்வைத்திறனை அதிகரிப்பதுடன், விழித்திரையை சீரமைக்கவும் உதவும். இதிலுள்ள சத்துக்கள், கருவிழி தசைகளை வலுவடைய செய்யும். விழித்திரை சேதமடைவதை தடுக்கும். முதியோரின் பார்வை திறனை சீராக்குவதில் முக்கியப்பங்கு வகிப்பதாக, ஸ்பெயின் பல்கலைக் கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் அதிகம் சாகுபடி செய்வது ஐரோப்பிய நாடுகள் தான். ஸ்பெயின், முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம் இடத்தையும், கிரீஸ் நாடு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. குங்குமப்பூ உற்பத்தியில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது.

தரமான குங்குமப்பூ, 80 சதவீதம் சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சளாகவும் இருக்கும், தரமற்றது எனில், 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும். நம் நாட்டில், காஷ்மீர் குங்குமப்பூ ஒரு கிராம், தற்போது, 560 ரூபாய் வரை விற்கிறது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us