PUBLISHED ON : செப் 19, 2020

கஞ்சத்தனம் இருப்பதை ஒப்புக் கொள்வதில்லை ராமசாமி. 'சிக்கனமாகச் செலவு செய்கிறேன்; மீதியைச் சேமிக்கிறேன்; சேமிப்பு எப்படி கஞ்சத்தனமாகும்' என்று, சமாதானம் சொல்லிக் கொள்வான்.
'தம்பி... உனக்கு நிறைய சொத்து இருக்கு; என் பேத்தியை திருமணம் செய்து கொள்ளேன்; நானே திருமண செலவை ஏற்கிறேன்...' என்று, ஒரு பெரியவர் சொன்னார்.
'அவளுக்குச் சோறு போடணும்; துணி, மணி எடுத்துக் கொடுக்கணும்; கூடுதலாகச் செலவாகுமே! அந்த பணத்தை வட்டிக்கு விட்டால், 10 ஆண்டில், பல லட்சம் சேருமே...' என மறுத்தான்.
இப்படியே நாட்கள் ஓடின...
மூன்று வேளை உணவை, இரண்டு வேளையாக்கினான்; பின் ஒருவேளையாக்கினான். இப்படியே சுருக்கி, 100 பருக்கை போதும்... 50 பருக்கை போதும்... 10 போதும், என, விரதம் இருக்க ஆரம்பித்தான்.
காசு சேர சேர, கஞ்சத்தனம் கூடியது!
உடல் துரும்பாக இளைத்தது; நோய் சேர்ந்து கொண்டது!
'ஆண்டவன் பாத்துக்குவான்' என்று பணத்தைச் சேர்த்தான்!
எல்லா அறிவும் பெற்றிருந்த அவனுக்கு, எதற்காக பணம் சேர்க்கிறோம் என்ற தெளிவு மட்டும் இல்லை.
பாவம் கஞ்சன்! நோயால் பாதிக்கப்பட்டு இறந்தான். உடலை ஈக்கள் மொய்த்தன!
குழந்தைகளே... அத்தியாவசிய தேவையை நிறைவேற்றத்தான் பணம் வேண்டும். சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சேமிக்க மறக்காதீங்க... கஞ்சத்தனம் செய்யாதீங்க.
