PUBLISHED ON : செப் 26, 2020

உப்பு உலகு உடல்!
கடலில் உப்புச்சுவை காணாமல் போய் விட்டால் எப்படி இருக்கும். 'ஆஹா.. அற்புதம்' என்று எண்ணினால் மாபெரும் தவறாக முடியும்.
கடலில் வளரும், ஆல்கை என்ற சிறுபாசிகள், உப்புத்தன்மை குறைந்தால் முதலில் அழியும். பூமியில், ஆக்சிஜன் என்ற பிராண வாயுவில், 50 சதவீதத்தை உருவாக்குவது ஆல்கை பாசியினம் தான். பிராணவாயு அளவு குறைந்தால், தட்ப வெப்ப நிலையில் குளறுபடி ஏற்படும். உயிரினங்கள் மடிய அதிக நேரம் தேவைப்படாது.
மனித உடலில் மூளையின் கட்டளை, நரம்பு மண்டலம் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் போய்ச்சேர்கிறது. இதற்கு உதவுவது சோடியம் என்ற வித்தைக்காரன் தான். உப்பின் ரசாயனப்பெயர் சோடியம் குளோரைடு. உப்பில் உள்ள சோடியத்தை, உடல் பயன்படுத்தி செயல்படுகிறது.
ஒரு மனித உடலுக்கு, 1500 முதல், 2300 மி.கி., வரை உப்பு தேவை. உடலில் சராசரியாக, 40 ஸ்பூன் உப்பு உள்ளது. சிறுநீர், வியர்வை, கண்ணீராக அது வெளியேறிக்கொண்டே இருக்கும். உணவின் மூலம் சமநிலையில் பேணுகிறது உடல் இயக்கம்.
உப்பின் அளவு அதிகரித்தால், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அளவு குறையும்போது, 'ஹைப்பனோடிரெமியா' என்ற நோய் ஏற்படும். இதனால், ரத்த நாளங்கள் விரிந்து, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.
ரத்த நாளங்களுக்கு, தேவையான நீரின் அளவை முடிவு செய்வதில், சோடியத்திற்கு பெரும் பங்கு உள்ளது. இதயம், ரத்தத்தை பம்ப் செய்யவும், வெட்டுக்காயம் ஏற்படும்போது ரத்தத்தை உறைய வைத்து, காப்பதும் சோடியம் தான்.
இமயமலைப் பகுதியில், பூமிக்கடியில் பாறையாக படிந்துள்ளது உப்பு. வெட்டி எடுத்து பயன்படுத்தும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. உலகம் முழுவதற்கும் தேவையான உப்பை வாரி வழங்கிக் கொண்டிருப்பது கடல்.
இந்தியாவில் உப்பு மீது ஆங்கிலேயேர் விதித்த வரியை எதிர்த்து, சத்தியாகிரகம் செய்தார் மகாத்மா. உப்பு விளையும் வயல் பகுதியை தமிழர்கள், 'அளம்' என்பர்; உப்பு விற்பவரை, 'உமணர்' என்கிறது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம்.
பேய்க்கப்பல்!
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில், கோர்க் கவுண்டி என்ற கடலோர நகரம் உள்ளது. கடந்த பிப்ரவரியில் அங்கு விருந்தாளி போல் வந்தது, எம்.வி.அல்டா என்ற சரக்குக்கப்பல். அதில், ஊழியர் யாரும் இல்லை. பயம், பரபரப்புடன் ஆராய்ந்தனர் அந்த நாட்டு அதிகாரிகள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில் புறப்பட்டிருந்தது அந்த கப்பல். நடுக்கடலில் பழுது ஏற்பட்டதால், காற்றில் அலைந்து கொண்டிருந்தது. கப்பலில் இருந்த ஊழியர்களை கடலோர காவல் படை மீட்டது.
பின், நடுக்கடலில் ஆதரவற்று அலைந்தது. எங்கு சென்றது என தெரியவில்லை.
காற்றின் திசையில், அலையின் சுழற்சியில் அலைக்கழிக்கப்பட்டு சுற்றியலைந்து, கவுண்டி கோர்க் கடற்கரைக்கு வந்திருக்கலாம் என யூகித்தனர் அதிகாரிகள்.
இந்த கப்பல், 1976ல் உருவாக்கப்பட்டது. நீளம், 77 மீட்டர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சான்யாவில் சரக்கை ஏற்றி, முதல் பயணத்தை துவங்கியது. தற்போது பழுதடைந்து தத்தளிக்கிறது. இந்த கப்பலின் உரிமையாளர் பற்றிய விவரம் மர்மமாக உள்ளது. கண்டறிய விரிவான விசாரணை நடந்து வருகிறது.
ம்...மா...!
துாரத்தில், அம்மாவின் குரலை கேட்ட உடனே, 'திட்ட போறாங்களா... அடிக்கப்போறாங்களா' என, கணித்து செயல்படும் குழந்தைகள் நம் நாட்டில் உண்டு. குரல் மாற்றத்தில் உணர்வை வெளிப்படுத்தும் திறன், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு.
வளர்ப்பு மிருகமான பசு, எழுப்பும் குரல் பற்றி, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, நாட்டிங்ஹாம் மற்றும் குயீன்மேரி பல்கலைக்கழக பேராசிரியர்கள், 2014ல் ஆய்வைத் துவங்கினர்.
இதற்காக, 10 மாதங்கள் பல சூழ்நிலைகளில் பசுக்களின் குரல்களை ஒலிப்பதிவு செய்தனர். சூழ்நிலைக்கு ஏற்ப, குரல்கள் மாறுபாட்டுடன் இருப்பதை கண்டனர். பசு மற்றும் காளைகள் வித்தியாசமாக குரல் கொடுப்பதும் புலப்பட்டது. அவை, பலவிதமாக தகவல் பரிமாற்றம் செய்வதும் தெரிந்தது.
பசுக்களின் குரலை வைத்தே, அவற்றின் வயதையும் துல்லியமாக அறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இந்த ஆய்வில், பசுக்குரல் பற்றி பல சுவாரசியங்கள் தெரியவந்தன.
அவை...
* கன்றுக்குட்டி அருகில் இருந்தால் மெல்லிய குரல் எழுப்பியது பசு
* துாரத்தில் இருந்தால் கடுமையாகி தடிமனாகியது பசுவின் குரல்
* பசி மற்றும் பரபரப்பாக இருந்தபோது வித்தியாசமாக எழுந்தது
* உணவுடன் எஜமானைக் கண்டவுடன் கனிவு, குழைவுடன் சத்தமிட்டது. நன்றியுடன் வாலை சுழற்றியபடி, தொழுவத்தில் இருந்த மாடுகளுக்கு தகவலை பரிமாறியது.
இந்த, உண்மைகள் விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்துள்ளது.
குழந்தைகளே... வீட்டில் பசு இருந்தால், குரலை உற்று கவனித்து ஆராயப் பழகுங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
