தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறட்டை!

துாங்கும்போது சிலர் குறட்டை விடுவர்; இந்த சத்தத்தால், அருகில் யாரும் துாங்க இயலாது. ஆனால், குறட்டை விடுபவர் எந்த சலனமும் இன்றி நிம்மதியாக துாங்குவார். இது எப்படி நடக்கிறது.

குறட்டை பற்றி பார்ப்போம்...

துாங்கும் போது, தொண்டை தசைகள் ஓய்வெடுக்கும்; மூச்சுப் பாதையின் அளவு குறுகி விடும். குறுகிய பாதையில் சுவாசக்காற்று செல்ல முற்படும் போது, அழுத்தத்தால் ஒலி ஏற்படும்.

மல்லாந்து படுத்தால், உடல் தளர்வு ஏற்படும்; நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கும். அப்போது, மூச்சுக் குழல் பாதையில் தடை ஏற்பட்டு, குறட்டை உருவாகும்.

துாங்கும் போது, சுற்றியுள்ள ஒலிகளை உள்வாங்குகிறது காது; அப்போது, தந்திரமாக ஒரு செயலைச் செய்யும் மூளை. அதாவது, தேவையற்ற ஒலியின், 'டெசிபல்' அளவைக் குறைத்து, மிக மென்மையாக காதுக்கு அனுப்பும்.

எந்த தொந்தரவும் இன்றி உறங்க, இயற்கை செய்துள்ள ஏற்பாடு இது.

குறட்டை விட்டுத் துாங்குபவர்களுக்கு இடை இடையே விழிப்பு வரும்; இது சில நிமிடங்கள் மட்டுமே தொடரும்.

இந்த விழிப்பு அவர்கள் அறியாமலே நடக்கும்.

உடல் பருமன், மூக்கில் இடைச்சுவர் வளைந்திருப்பது, தைராய்டு பிரச்சனை, கழுத்தைச்சுற்றி கொழுப்பு அதிகரிப்பு, சளியுடன் மூக்கடைப்பு, சைனஸ், ஒவ்வாமை, டான்சில் வளர்ச்சி உட்பட, பல காரணங்களால் குறட்டை ஏற்படும்.

மது பழக்கம், புகை பிடிப்பது, துாக்க மாத்திரை சாப்பிடுவதாலும் குறட்டை ஏற்படும்; உடல் நலத்தை முறையாக பேணாதவர்களுக்கும் குறட்டை அதிகமாக வாய்ப்பு உண்டு.

குறட்டையை தவிர்க்க...

இரவில் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும்; ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும்; தலைப்பகுதி சற்று உயர்ந்திருக்குமாறு, சிறிய தலையணை பயன்படுத்த வேண்டும். குறட்டை ஒலியை குறைப்பதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன.

தலைவலி எச்சரிக்கை!

'குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுச் சாப்பிடலாம்...'

'தொலைக்காட்சி தொடர் முடிந்த பின் சாப்பிடலாம்...'

- இதுபோல் எண்ணி பசியைப் புறக்கணிக்கும் பழக்கம், குடும்ப பெண்களிடம் அதிகரித்து வருகிறது. நேரத்துக்குச் சாப்பிடாமல், பசி, களைப்புடன் இருந்தால் ஒற்றைத்தலைவலி நோய் சுலபமாக எட்டிப் பார்க்கும்.

பணியிலிருப்போர், 'கையில் உள்ள வேலையை முடித்துவிட்டுத்தான் சாப்பிட போவேன்' என, நெருக்கடிக்குள் சிக்குவர். பசிக்கும் வயிறைக் கவனிக்காமல் காலம் கடத்தி, தேவைக்குச் சாப்பிடாமல் நழுவுவர். இதுபோன்ற நேரங்களில், மூளையின் ஒரு பகுதி, மவுனமாக அலறும். அதுதான், ஒற்றைத் தலைவலியாக வெளிப்படுகிறது.

இனிய இரவுகளை, இணையத்தில் தொலைத்து, பகலில் தள்ளாடுகிறது இளைய தலைமுறை. நாகரிக வாழ்வும், நவீன தொழில்நுட்பமும் உறக்க நேரத்தை விழுங்குகின்றன. இது போன்ற நிலையில், பூனை இல்லாத வீட்டில் எலி நுழைவது போல் ஒற்றைத் தலைவலி வரும்.

சில பூக்களின் வாசனை, நறுமணப் புகை போன்றவையும் தலைவலியைத் துாண்டும். மருந்துகளின் பக்க விளைவுகளாலும் வரக்கூடும். அதிக மாத்திரை, காதைக் கிழிக்கும் சத்தம், மினுங்கும் விளக்கு, பருவகால மாற்றம் என பலச்சூழலும் தலைவலியை உருவாக்கும்.

புதிதாக, 'வாரக் கடைசி ஒற்றைத் தலைவலி' என்ற நோய் பரவிவருகிறது. ஆறு நாட்கள், சுறுசுறுப்பாக பணியாற்றி, வார இறுதியில் ஓய்வெடுக்க விரும்பும் போது, வழக்கமான நடைமுறையை மாற்ற மூளை மறுப்பதால், இது ஏற்படுகிறது.

இளைஞர்களை குறி வைத்துத் தயாரிக்கப்படும், துரித உணவுகளில், அதிக அளவு சோடியம், நைட்ரேட் உப்புகள் கலக்கப்படுகிறது. இவை, ரத்தக் குழாயை விரிவடையச் செய்து தலைவலியை உண்டாக்கும்.

உடலுக்கு, உடைக்கு, படுக்கைக்கு என தனித்தனியாக வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளித்தால், அழையா விருந்தாளியாக வரும் ஒற்றைத்தலைவலி.

இந்தியாவில், 100 பேரில் ஒருவர் என்ற வீதத்தில், குழந்தைகளுக்கு ஒற்றைத் தலைவலி நோய் இருக்கிறது. இது வரும்போது, வயிற்று வலிதான் பிரதானமாக இருக்கும். இந்த அறிகுறியை தெரியாமல் திணறுகின்றனர் பெற்றோர்.

வயிற்று வலி என்றால் குடல்புழு மாத்திரை கொடுத்தால் போதும் என எண்ணுகின்றனர். குழந்தைக்கு வயிறு வலி வந்தால், மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற வேண்டும். சுய மருத்துவம் செய்ய வேண்டாம்!

ஆரோக்கியத்துக்குத் தேவை...

* முறையான உணவு பழக்கம்

* சரியான உறக்கம்

* திட்டமிட்ட உழைப்பு.

இவற்றை கடைபிடித்தால், எந்த நோயும் அண்டாது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us