தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புரட்சி சிறுவன்! (6)

புரட்சி சிறுவன்! (6)

புரட்சி சிறுவன்! (6)


PUBLISHED ON : அக் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தந்தையரின் குடிப்பழக்கத்தால், ஏழை சிறுவர்களின் பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டது. குப்பை பொறுக்கிய சிறுவன் முருகன் கையில், நகைப்பை சிக்கியது. செருப்பு தைத்த மாணிக்கத்தின் தந்தை, நோயில் விழுந்ததால் மீண்டும் பள்ளி செல்லப்போவதாக அம்மாவிடம் வாக்குவாதம் செய்தான். இனி -

அம்மாவின் கண்களில் நீர் முட்டியது.

''அப்படியெல்லாம் தண்டித்துவிடாதே...''

''ஓடிப்போனாலும் தினமும் உங்களைப் பார்க்காமல் இருப்பேனா...''

''வாய்க்கு வந்தபடி பேசாதே; நடக்கிற காரியத்தைப் பார்...''

மாணிக்கம் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.

அந்த பேச்சு அசட்டுத்தனமானது என புரிந்தது. இருந்தாலும் ஒப்புக்கொள்ள மறுத்தது மனம்.

சற்று பொறுமையாக, ''படிப்பு ஆசையால் கண்டபடி யோசிக்கிறாய். வீட்டிலேயே தங்கி ஒப்பேறுகிற வழியைப் பார்; அப்பா பிழைத்து எழுந்த பின் மனமாற்றம் ஏற்படலாம். நீ பள்ளிக்கூடத்தில் சேர்ந்துக்கொள்; சமாளிக்கலாம்; வேறு எதையாவது உளறிக்கொண்டிருக்காதே...'' என்றாள் அம்மா.

''நல்லவராக மாறுவார் என்றால் அப்பா பிழைக்கட்டும்... இதுதான் என் வேண்டுதலாக இருக்கும்...''

''தவறான எண்ணத்தில் பேசக்கூடாதப்பா...''

''தப்புதான்; தகப்பன் ஒழுங்காக இருக்க வேண்டும் அல்லவா... அம்மாவை அடித்து உதைக்கிறவரை எப்படி நேசிக்க முடியும்...''

''பேச்சை விடு... சாப்பிடலாம்...''

அடுத்த கணம், குடிசைக்குள் வெங்காயக் குழம்பின் மணம் பரவியது. தண்ணீர் குவளையை தரையில் வைத்து திரும்பினான் மாணிக்கம். அவனை நோக்கி வந்த முருகன், ''கொஞ்சம் என்னோடு வர முடியமா... ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...'' என்றான்.

இருவரும் வெளியில் நடந்தனர்.

தெருமுனையைக் கடந்தனர்.

''ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்...'' என்றான் முருகன்.

''என்ன...''

குப்பை தொட்டியில் நகைப்பை கிடைத்த விவரத்தை தெரிவித்து, ''மறைவாக வைத்திருக்கும்படி அம்மாவிடம் கொடுத்திருக்கிறேன். காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாமா...'' என்றான்

''கண்டிப்பாக... நானும் உடன் வருகிறேன்... சரி... எப்படி மறைத்தாய்...''

''குப்பை தொட்டியில் கிடைத்த நகைப்பையை அம்மாவிடம் கொடுத்த பின், குப்பைக் கம்பெனிக்குப் போய்க் கொண்டிருந்தேன். வழியில், இரண்டு முரடர்கள் மடக்கி விசாரித்தனர். ஒரு யோசனை வந்தது; போலீசார், அதை எடுத்து சென்றதாக ஒரு போடுபோட்டேன்...''

''சமயோசிதமாக சொல்லியிருக்கிறாய்... நாளை அப்பாவை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வருகிறேன்... நேரமானாலும் காத்துக் கொண்டிரு. காவல் நிலையத்துக்கு யாரேனும் பெரியவரை உடன் அழைத்து செல்வது நன்றாக இருக்கும்...''

''சரிதான்; படிப்பும், செல்வாக்கும் மிக்கவராக இருந்தால் நல்லது...''

சில நொடிகள் யோசித்தான் மாணிக்கம்; பின் விரல் சொடுக்கி, ''என் ஆசிரியர் ரங்கமணி ஐயாவை அழைத்து செல்வோமா...'' என்றான்.

''நல்ல யோசனை...''

''நாளை சந்திப்போம்...''

விடைபெற்று குடிசைக்குத் திரும்பினான் மாணிக்கம்.

விசாரித்த அம்மாவிடம் விவரத்தை கூறியபின், சாப்பிட்டு முடித்தான்.

இரவில் காலாற நடக்க விரும்பி வெளியே வந்தான். சாலையில் எதிர்ப்பட்டார் ஆசிரியர் ரங்கமணி. நகைப்பை விவரத்தை கூறி, காவல் நிலையத்துக்கு துணையாக அழைத்தான்.

''நிச்சயம் வருகிறேன்...''

பள்ளி படிப்பை தொடரும் எண்ணத்தையும் கூறினான்.

இயன்ற உதவிகளை செய்வதாக வாக்களித்தார்.

நம்பிக்கையுடன் நன்றி கூறி, குடிசை நோக்கி நடந்தான். சிந்தனைகள் அலைக்கழித்தன.

'உடல்நிலை சரியாகி எழுந்தால், பள்ளி போவதை நிறுத்திவிடுவாரே அப்பா' என, எண்ணம் வர கவலையில் தவித்தான். 'படிப்பது தான் இப்போதைய முதல் வேலை. பின், குடிசையில் வசிக்கும் பெண்களை திரட்டி, குடிகாரர்களை திருத்த முயற்சிக்க வேண்டும்...'

யோசித்தபடி உறங்கிப்போனான் மாணிக்கம்.

மறுநாள் காலை -

அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அப்பாவை சேர்த்தான் மாணிக்கம். அடுத்து, முருகன் வீட்டை அடைந்தான். நகைப்பையுடன் இருவரும், ஆசிரியர் ரங்கமணியை சந்தித்து, காவல் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

அங்கு, முந்தையநாள் வழிமறித்த குண்டர்களைக் கண்டான் முருகன். நடுங்கியபடி ஆசிரியரிடம் விவரத்தை சொன்னான்.

காவல்துறை ஆய்வாளரிடம், சம்பவத்தை விவரித்து ஒப்படைத்தார் ஆசிரியர். நகைகள், அவற்றின் எடை விவரம் அடங்கிய ரசீதை காவல்துறை கொடுத்தது.

முருகனை மிரட்டிய முரடர்கள் பற்றியும் தெரிவித்தார் ஆசிரியர்.

''அட அப்படியா... வழக்கமான குற்றவாளிகள் தான்; சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். தினமும் இங்கு வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்பது விதி. அதற்காக தான் வந்து போகின்றனர். கவலைப்பட வேண்டாம்... இந்த சிறுவனுக்கு உரிய சன்மானம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்...'' என்றார் ஆய்வாளர்.

பயந்தபடி, ''அதெல்லாம் வேண்டாம் ஐயா... ஆபத்து ஏற்படாமல் இருந்தால் சரி...'' என்றான் முருகன்.

''உனக்கு உரிய பாதுகாப்பு தருவோம்; காட்டிக் கொடுக்க மாட்டோம்... காவல்துறை தலைவர் பாராட்டி பரிசு தருவார்...''

தயங்கியபடி சம்மதித்து தலையாட்டினான் முருகன்.

காவல் நிலையத்தில் பணி முடிந்ததும் சிறுவர்களிடம் விடைபெற்று, பள்ளி சென்றார் ஆசிரியர்.

மாணிக்கமும், முருகனும் வீட்டுக்கு நடந்தனர்.

வழியில், ''மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேரப்போகிறேன்; நீயும் முரண்டுபிடித்து பள்ளியில் சேரப் பார்...'' என்றான் மாணிக்கம்.

பதில் சொல்லவில்லை முருகன்.

''என்னடா ஒன்றும் சொல்லாமல் வருகிறாய்...''

''என்ன சொல்ல... முதுகு தோலை உரித்து மிளகாய்பொடி தடவி விடுவார் அப்பா...''

''இதை தடுக்க ஏதாவது வழி செய்தாக வேண்டும்; இவர்கள் குடித்து பணத்தை எல்லாம் தொலைப்பதற்கு நாம் ஏன் சம்பாதிக்க வேண்டும்... இந்த விஷயத்தை தட்டி கேட்க வேண்டும்...'' என்ற மாணிக்கம், ஆந்திர பெண்கள் குடிக்கு எதிராக கிளர்ந்து போராடியது பற்றி விளக்கினான்.

''பரவாயில்லையே... அங்கே நடத்தியதை இங்கே செய்ய முடியாதா...''

நம்பிக்கை தரும் வகையில் சொன்னான் முருகன்.

- தொடரும்...

ஜோதிர்லதா கிரிஜா


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us