PUBLISHED ON : அக் 24, 2020

ஆக்கமும் அழிவும்!
கூட்டத்தில் பின்னால் நிற்கும் சிறுவர், சிறுமியரால் முன்னால் நடக்கும் நிகழ்வைப் பார்ப்பது சிரமம். ஆர்வம் மிகுந்தவர்கள் குதிக்காலை உயர்த்தி சிரமத்துடன் முயல்வர்.
இது போன்ற நெருக்கடியான நேரங்களை சமாளிக்கும் விதமாக, சந்தையில் உலா வருகிறது, கூட்டத்து முன் நிகழ்வை தெளிவாக காட்டும் கருவி. அதன் பெயர், பெரிஸ்கோப் கிளாசஸ்.
இதன் ஒரு பகுதியில், அலைபேசி கருவிக்கான, 'செல்பி ஸ்டிக்' போன்று இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை கண்ணாடியை அணிந்து கொண்டால், கூட்டத்தின் முன் நடக்கும் நிகழ்வுகளை, பின்னால் நின்றபடி சிரமமின்றி கண்டு ரசிக்கலாம்.
பெரிஸ்கோப் கண்ணாடிக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இரண்டாம் உலகப்போரில், இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சண்டையிட்டு மடிந்தன ஐரோப்பிய படைகள். பதுங்கு குழிகளில் மறைந்திருந்து, எதிரிப் படையை துல்லியமாக சுட்டு வீழ்த்தின. பயங்கர அழிவுக்கு வழிகாட்டியது, இந்த தொழில் நுட்பம்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த டொம்னிக் வில்காக்ஸ் இதையே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறார். பிரபல கலை இயக்குனரான இவர், அதே தொழில் நுட்பத்தில், பெரிஸ்கோப் கருவியை உருவாக்கியுள்ளார். இவரது தயாரிப்புகள் ஒவ்வொன்றும், 'அட' போடும் அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன.
அவற்றுள் சில:
* துல்லியமான பாதையில் வழிநடத்தும், ஜி.பி.எஸ்., தொழில் நுட்பத்துடன் காலணி
* பூந்தொட்டியுடன் கூடிய அழகிய குடை
* ஒரு காதில் பேசுவதை, மறு காது வழியாக கேட்க வகை செய்யும், நுண்ணுர்தல் கருவி என சொல்லிக்கொண்டே போகலாம்.
எளிய தொழில் நுட்பங்களை வித்தியாசமான எண்ணங்களால், மக்கள் நலனுக்கு பயன்படுத்தி வரும் இவர் புகழ் பரவி வருகிறது.
நகரும் படிக்கட்டு!
உலகின் மிக நீளமான, 'எஸ்கலேட்டர்' என்ற நகரும் படிக்கட்டு, ஆசியா கண்டத்தில் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங்கின் தெற்கு பகுதி தீவில் உள்ளது.
இது, 800 மீட்டர் துாரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. தினமும், 85 ஆயிரம் பேர் இதன் வழியாக பயணிக்கின்றனர். ஒரு முனையில் இருந்து மறுமனைக்கு செல்ல, 25 நிமிடங்கள் வரை பயணம் செய்ய வேண்டும். நின்றும், நடந்தும் பயணிக்கலாம்.
சூரிய பாண்டா!
துாரத்தில் நின்று பார்த்தால், ராட்சத உருவில் பாண்டா கரடியின் உருவம் தெரியும். நெருங்கி சென்றால் அதுவே சூரிய மின் உற்பத்தி நிலையமாக மாறும். இந்த கலகலப்பூட்டும் காட்சி பிழை, ஆசிய நாடான சீனாவில் உள்ளது. இங்குள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமாயதலை தடுக்க, உலக நாடுகள், சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிப்பதை தீவிரமாக்கி வருகின்றன. அனல், அணு மின் உற்பத்தியை குறைப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன.
அனல் மின்சாரம்:
நிலக்கரி பயன்படுத்துவதால் காற்றில் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. புவி வெப்பமடைவதற்கு காரணமாகிறது.
அணு மின்சாரம்:
உற்பத்திக்காக அணுவை பிளக்கும்போது கடும் வெப்பம் ஏற்படுகிறது. சூழலை கடுமையாக பாதிக்கிறது. புவி வெப்பம் அதிகரிக்கும் போது, சூழல் கடுமையாக பாதிக்கும். இதனால், பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
எனவே, இவற்றை தவிர்த்து மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
உலகில் அதிகம் மக்கள் தொகை கொண்ட சீனாவில், சூரியஒளி மூலம் மின் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. அதற்காக, மிகப்பெரிய மின் உற்பத்தி கூடங்களை வித்தியாசமாக வடிவமைத்து வருகிறது.
சீனா, டாடோங் பகுதியில், 250 ஏக்கரில், சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதை பருந்து பார்வையில் கண்டால், ராட்சத பாண்டா கரடி போல் தோன்றும்.
பெரும்பாலும், நீண்ட வரிசையில் தான் சோலார் பேனல்களை அமைப்பது வழக்கம். இந்த வித்தியாசமான வடிவமைப்பு, இடப்பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என கூறப்படுகிறது.
குறைந்த பரப்பில், அதிக உற்பத்திக்கான ஆய்வு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது பாண்டா சூரிய சக்தி மின் நிலையம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
