PUBLISHED ON : நவ 07, 2020

ஆரோக்கிய துாதர்!
சருமத்தை அழகுள்ளதாக பராமரிக்க, தனியாக மெனக்கெட வேண்டிய அவசியம் எதும் இல்லை. போதிய கவனம் செலுத்தி, 'வைட்டமின் - சி' சத்து நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டால், என்றும், 16 வயதுள்ளவர் போல் துடிப்படன் வாழலாம்.
இந்த சத்துள்ள உணவை அடிக்கடி உண்போர், நோயில் விழமாட்டார்கள். காரணம், அதில் அடங்கியுள்ள எதிர்ப்பு சக்தி. உடல் அழகுக்கும் இந்த சத்துள்ள உணவே அடிப்படையாக உள்ளது.
இந்த வகை சத்து...
* இதய ஆரோக்கியத்தைக் காக்கும்
* ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும்
* நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும்
* புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்
* பார்வைத் திறனை மேம்படுத்தும்
* பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
* ஈறுகளின் ஆரோக்கியம் காக்கும்
* வாய் வறட்சியைப் போக்கும்
* வைரஸ் தொற்று ஆபத்தை தடுக்கும்
* உடல் எடைக் குறைய உதவும்
* நல்ல மனநிலை ஏற்பட உதவும்
* சரும நோய்களை விரட்டும்
* சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்
* இளநரையைத் தடுத்து, பொடுகை விரட்டும்.
எவற்றிலிருந்து பெறலாம்...
குடமிளகாய், புரோகோலி, பப்பாளி, மாம்பழம், அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, நெல்லிக்காய் போன்றவற்றில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இவற்றை, உரிய முறையில் தினமும் சாப்பிடலாம். காலை உணவுடன் ஒரு பழச்சாறும் எடுத்துக்கொள்ளலாம்.
மனதில், நல்லெண்ணமும், அன்றாடம் ஆரோக்கிய உணவு முறையும், செயல்களில் நல்ல பழக்க வழக்கமும் இருந்தால், வாழ்வில் எல்லா சிறப்புகளும் சேரும்.
நுாடுல்ஸ் சிக்கல்!
சிக்கலை, இரண்டாக வகை படுத்தலாம்.
ஒன்று, இடியாப்ப சிக்கல்; மற்றொன்று நுாடுல்ஸ் சிக்கல்.
உடலை மேன்மைப்படுத்தும் சிக்கலற்ற உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.
தமிழர் சமையலறையிலும் நுாடுல்ஸ் உணவு உள்ளது. நீண்ட காலமாக அதை சாப்பிட்டு வருகிறோம். பெயர் தான் மாற்றம். அதை இடியாப்பம் என்று அழைக்கிறோம்.
இது...
* ஆவியில் வேகும் அற்புத உணவு
* மிக எளிதாக செரிக்கும்
* பச்சிளம் குழந்தை கூட சாப்பிடலாம்.
இடியாப்ப உணவில் நச்சு ரசாயனங்கள் எதுவும் இல்லை. ஆனால், துரித உணவாக அறிமுகமாகி உள்ள, நுாடுல்ஸ் ஆரேக்கியத்துக்கு உகந்தது அல்ல. நம் சூழலுக்கு ஏற்றதும் அல்ல. அதில், 'மோனோ சோடியம் குளுட்டமேட்' என்ற உப்பு, சுவையூட்டியாக சேர்க்கப்படுகிறது. இதுதான், திரும்பத் திரும்ப, அதைச் சாப்பிட துாண்டுகிறது.
குழந்தைகளைக் கவர, பல நிறங்களில் நுாடுல்ஸ் அறிமுகமாகியுள்ளது. அந்த நிறங்களுக்கு அடிப்படை, செயற்கையான ரசாயன மூலப் பொருட்கள். அவை ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல. இந்த உண்மை தெரியாமல், ருசிக்கு அடிமையாகி வருகிறது, இளம் தலைமுறையினரின் நாக்கு. அது உடல் நலத்தை கெடுக்கும் என்பதை உணர்ந்து விலக்க வேண்டும்.
தமிழகத்தில், கம்பு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் ஏராளமாக விளைகின்றன. இவை, சுவை, மணம் நிறைந்தவை. மனித உடலுக்கு ஏற்ற சத்துக்களை உள்ளடக்கியவை. பல வண்ணங்கள் கொண்டவை.
இவற்றின் மாவில், நுாடுல்ஸ் போன்ற வடிவத்திலே இடியாப்ப உணவுகள் அறிமுகமாகியுள்ளன. அவற்றை, சுவைத்து உடல் நலத்தை பேணுவோம். நாட்டின் வளத்தை காப்போம்.
கண்ணீர் பூக்கள்
வலது, இடது என இரண்டு கண்கள் உள்ளன. இதில், எந்த கண் முதலில் அழும். ஆண், பெண் கண்ணீரில் வேறுபாடுகள் உண்டா... இப்படி எல்லாம் கேள்விகள் எழும். எல்லாவற்றுக்கும் பதில் ஒன்றே தான். இவற்றில் எந்த வேறுபாடும் இல்லை.
சொட்டுக் கண்ணீரில்...
* புரோட்டீன்
* குளோரைடு
* குளுக்கோஸ்
* சோடியம்
* பொட்டாஷியம்
* லைஸோசைம் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
இதில், லைஸோசைம், கண்ணுக்குள் நுழைகிற தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும்! அடிக்கடி அழுதால் இதன் அளவு குறைந்துவிடும். எனவே தான், அழுபவரை ஆற்றுப்படுத்த ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறோம்.
அழும்போது மட்டும் தான் கண்களில் நீர் வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு. கண்கள் எப்போதும் நீரைச் சுரந்துக்கொண்டேதான் இருக்கும். அளவு மிக மிகக் குறைவாக இருக்கும் என்பதால் புலப்படுவதில்லை.
குறைவாக சுரப்பது, கண்களை சுத்தம் செய்யவே! கண்களைச் சுத்தம் செய்துகொள்ள வசதியாகத்தான் நிமிடத்துக்கு, மூன்று முறை இமைக்கின்றன இமைகள்.
ஆனந்தக் கண்ணீர், வலது கண்ணிலும், துன்பம்-, வலி காரணமாக உண்டாகும் கண்ணீர் இடது கண்ணிலும் முதலில் சுரப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. வடிக்கும் கண்ணீர், நீலியா, உண்மையா என்பதை இதன் மூலம் அறியலாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
