PUBLISHED ON : நவ 07, 2020

ஆசிரமத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார் புத்தர்.
'எனக்கு ஒரு சால்வை தர வேண்டும் ஐயனே...' என்றார் சீடர் ஒருவர்.
'உன் சால்வை என்ன ஆயிற்று...'
'மிகவும் பழையதாகி விட்டது; படுக்கை விரிப்பாக பயன்படுத்துகிறேன்...'
'பழைய படுக்கை விரிப்பு இருக்குமே...'
'அது பல இடங்களில் கிழிந்து விட்டது... தலையணை உறைகளாக தைத்துவிட்டேன்...'
'அது சரி... முன்பிருந்த உறைகள் எங்கே...'
'மிகவும் தேய்ந்து விட்டன... மிதியடியாக பயன்படுத்துகிறேன்...'
'சரி... பழைய மிதியடிகள் என்னவாயிற்று...'
விடாமல் கேட்டார் புத்தர்.
'தேய்ந்து நுால் இழைகளாகவே பிரிந்து வந்து விட்டன; பந்தமாகவும்; மாட விளக்குகளுக்கு திரியாகவும் பயன்படுத்துகிறேன்...'
சலிப்படையாமல் பதில் கூறினார் சீடர்.
பொருள் உணர புன்னகை புரிந்தார் புத்தர்.
எந்த பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்பதை தான் உரையாடலில் உணர்த்தியுள்ளார் புத்தர்.
இதழ்களே... எந்த பொருளையும் வீணடிக்கக் கூடாது.
மல்லிகா குரு
