
கண்களுக்கு வேலை!
இந்த யுகத்தில் கண்ணுக்கு தான் முழு வேலையும்... தொலைக்காட்சியும், கணினியும், புத்தக வாசிப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேலை அதிகமாக கொடுக்கும் போது கண் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.
கண்களைக் காக்க சில ஆலோசனைகள்...
* ஒரு பொருளை பார்க்க கண்களை குவிக்கும்போது, மங்கலாக தெரிந்தால் அல்லது முழுக்க தெரியாவிட்டால் பார்வைத்திறனில் கோளாறு என பொருள்
* கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை, 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள்தான் செய்ய வேண்டும். அதே போல, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நல்லதல்ல
* குறைந்தது 10 அடி துார இடைவெளியில் 'டிவி' பெட்டியைப் பார்ப்பதுதான் நல்லது. அறையில் சிறு வெளிச்சம் இருக்க வேண்டும்
* குழந்தைகள் புத்தகத்தைக் கண்ணுக்கு அருகில் வைத்துப் படித்தாலோ, 'டிவி-' க்கு மிக நெருக்கமாக அமர்ந்து பார்த்தாலோ, கிட்டப் பார்வைக்கான அறிகுறி. உடனே உஷார் ஆகவும்
* 'வைட்டமின் - ஏ' கண்களுக்கு நல்லது. அதே நேரம், அயோடின் சத்தும் குறைவு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! இவை தான் கண் நலனை கவனிக்கின்றன
* சாலையோரம் கிடைக்கும் மலிவு விலை குளிர் கண்ணாடிகளை அணிய வேண்டாம். இன்று சிக்கனம் என எண்ணுவது நாளை பெருஞ்செலவாக மாறி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு
* இறப்பு நிகழ்ந்த, ஆறு மணி நேரத்துக்குள் கண்களை மற்றொருவருக்கு பயன்படுத்தலாம்.
எனவே, தயங்காமல் கொடை அளியுங்கள். ஒருவரின் கண்கள், இருவருக்குப் பார்வை தரும் என்பதை கவனம் கொள்ளுங்கள். தானம் பெற்றவர் கூட, இறப்புக்குப் பின், அதே கண்களை கொடையாக தரலாம்!
கண்களை இமை போல காப்போம்.
மஞ்சள் மகிமை!
மஞ்சள், உடலைக் குளிர்ச்சியூட்டும். கிருமி நாசினியாக செயல்படும். கால் பாதங்களில் பித்தவெடிப்பு ஏற்பட்டால், மஞ்சள் பொடியுடன் வேப்பங்கொழுந்தை அரைத்து பற்றுப்போடவும். பித்த வெடிப்பு நீங்கி பாதம் பலம் பெறும். உண்ணும் உணவிலும் கவனம் கொள்ள வேண்டும்.
சளி, இருமலால் அவதி ஏற்பட்டால், சூடானப் பாலில், மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்கலாம். இனிப்பு தேவைப்படுவோர் நாட்டு சர்க்கரையைப் பயன்படுத்தலாம். மஞ்சள் பொடியை, தேனில் குழைத்தும் சாப்பிடலாம்.
மஞ்சள் பொடியுடன் சிறிது பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், சிறுநீர் முறையாகப் பிரியும். அன்றாடம் சாதாரணமாக இதை பயன்படுத்தலாம். உபாதை என, மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது.
இயற்கை முறையில் விளையும் மஞ்சளுக்கே மகிமை அதிகம். இது போல் விளைவிக்கும் விவசாயிகள் பலர் நேரடியாக விற்பனை செய்கின்றனர். அது போன்றவர்களிடம் மஞ்சள் வாங்கி பயன்படுத்துங்கள். முழு பலனும் கிடைக்கும்.
காபி தரும் சுகம்!
உற்சாகத்துடன், ஒரு நாளை துவங்க காலையில் காபி அவசியம் வேணும் என்பவரா... கண்டிப்பாக இதைப் படிக்கவும்.
காபி அருத்தியதும் உற்சாகம் ஏற்படுவது உண்மைதான். அது, 'காபீன்' என்ற வேதிப்பொருள் துாண்டுதலால் நடக்கிறது. அருந்தும்போது, அட்ரினல் சுரப்பிகளைத் தட்டி எழுப்பி, 'கார்ட்டிசோல்' என்ற ஹார்மோன் உற்பத்தி செய்ய வைக்கிறது காபீன். இதுதான் செயற்கையாக உற்சாகத்தைத் தருகிறது.
இது, நீடிப்பதில்லை. துாங்கும் போது, எட்டு மணி நேரம் உணவு கொள்வதில்லை உடல். அப்போது உடல் நன்றாக ஒய்வெடுக்கிறது. ஓய்வுக்குப் பின் உற்சாகமாக செயல்பட தேவைப்படுவது ஊட்டச்சத்துதான். அதுதான், 'மெட்டபாலிக் ஆக்ஷன்' என்ற உடல் செயல்பாட்டை துவங்க அவசியமாகிறது.
ஒரு கப் காபி, விழிப்பான உணர்வத் தரலாம். ஆனால் உடல் செயல்பாட்டை துவங்க உதவாது. 'சர்க்கேடியன்' என்ற உடல் கடிகாரத்தின் சமநிலையைச் சீர்குலைத்து விடும். காலையில் எழுந்ததும் காபி வேண்டுமா... சத்தான உணவு வேண்டுமா என்பதை இன்றே முடிவு செய்யுங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

