
அதிகாலை!
வாழ்க்கையில் வெற்றி பெற, தினமும் அதிகாலை எழ வேண்டும். இதுதான், நல்ல பழக்கங்களுக்கு எல்லாம் அம்மாவாக திகழ்கிறது. அதிகாலை எழும் பழக்கத்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்; மன அழுத்தம் ஏற்படாது.
தினமும், இரவு 10:30 மணிக்குள் துாங்கி விட வேண்டும். துாங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக, இரவு உணவை முடித்து விடுவது சிறந்தது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே இரவில் உண்ண வேண்டும்.
பெரியவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணி நேர துாக்கம் அவசியம். ௧௮ வயது வரை உள்ளவர்களுக்கு, எட்டு மணி நேர உறக்கம் தேவை. குழந்தைகளை, இரவு 10:00 மணிக்குள் தூங்கவைத்து, அதிகாலை 5:00 மணிக்கு விழிக்க வைக்க வேண்டும்.
இதன் மூலம் குழந்தைகளின் செயல்திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் பெருகும்; கற்றல் குறைபாடுகள் நீங்கும்; நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
படுக்கைக்கு செல்லும் முன் தொலைக்காட்சி, அலைபேசி திரைகளைப் பார்க்க வேண்டாம்; எளிய நடை பயிலலாம். புத்தகங்களை படிக்கலாம்.
இதன் மூலம் நல்ல துாக்கம் வரும்.
படித்தல் சிறந்த பயிற்சி. இதன் மூலம் செரிமானத் திறன் அதிகமாகும்.
மூவகை மவுனம்!
பகுதி வாரியாக பல மொழிகள் பேசப்படுகின்றன. ஓர் இடத்தில் பேசும் மொழி இன்னொரு இடத்தில் வசிப்பவருக்கு பெரும்பாலும் புரியாது.
ஆனால், மவுனம்...
உலகம் முழுவதுக்கும் பொதுவான மொழி. ஒலியே இல்லாத மொழி; இது, மூன்று வகைப்படும்.
சாதாரண மவுனம்: எதுவும் பேசாமல் அமைதி காப்பது. நாவசைவு இருக்காது. பேசக்கூடாத இடத்திலும், பேச தேவை இல்லாத இடத்திலும் இந்த வகையை கடைப்பிடிப்பது சிறப்பு தரும். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிப்பது இந்த வகையைதான்.
இதில் நாக்கு தான் அசையக் கூடாது. அதேவேளை, தலையசைத்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம். விரலசைவின் மூலம் புரிய வைக்கலாம். கண்ணசைவின் மூலம் காரியத்தை சாதிக்கலாம்.
பூரண மவுனம்: இதற்கு வாய் மட்டுமல்ல; மனமும் ஓய்வெடுக்க வேண்டும். சிந்தனை அலைபாயக் கூடாது. இது ஒரு வகை தியானம். ஆன்மிகத்தில் குரு கற்றுக் கொடுக்கும் வித்தை.
பரிபூரண மவுனம்: இதுதான் மிகவும் கடினமானது. நாக்கு மட்டுமல்ல, உடலில் எந்த ஒரு பகுதியும் அசையக் கூடாது. எந்த சைகையும் செய்யக் கூடாது. மரக்கட்டை போல் இருக்க வேண்டும், உடல். இதுதான் கடின மவுனம். ரொம்பவும் சிரமமானது.
அத்தனை சுலபத்தில் வசப்படாது. புலன்கள் அடங்கி ஒடுங்கினால் மட்டுமே சாத்தியப்படும்.
மவுனத்தால் வாக்கில் தெளிவும், புத்தியில் அமைதியும் ஏற்படும். மகான்களின் தீர்க்கமான முடிவுகளுக்கும், அவர்கள் வழங்குகிற அருள் வாக்குக்கும் மவுனமே காரணம். மனிதனைப் பண்படுத்துகிறது மவுனம்.
'பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மவுனம் காப்போம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு

