
அழகான கோழி ஒன்றை வளர்த்து வந்தாள், மங்களம். அது எதிர் வீட்டிற்குள் நுழைந்தது. வெளியே வந்து விடும் என்று காத்திருந்தாள்; நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
எதிர் வீட்டுக்குச் சென்று, 'என் கோழி, உன் வீட்டுக்குள் நுழைந்ததே...' என விசாரித்தாள் மங்களம்.
'நான் பார்க்கவே இல்லையே... அது வேறு வழியாக வெளியே சென்றியிருக்கும். நன்றாக தேடி பார்...'
அலட்சியமாக கூறினாள், எதிர்வீட்டு பெண்.
எங்கு தேடியும் கோழி கிடைக்கவில்லை.
எதிர் வீட்டு பெண் மீது சந்தேகம் கொண்டு, மரியாதை ராமனிடம் புகார் செய்தாள் மங்களம்.
அவர் விசாரித்த போது, 'ஒன்றும் தெரியாது...' என கூறி சத்தியம் செய்தாள், எதிர் வீட்டு பெண். போதுமான சாட்சி இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டார் மரியாதை ராமன்.
இருவரும், நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர்.
அப்போது -
உதவியாளரிடம், 'கோழியை அடித்து தின்று விட்டு, அதன் இறகு, கொண்டையில் ஒட்டி இருப்பதைக்கூட கவனிக்காமல், தைரியமாக பொய் சத்தியம் செய்கிறாள் பார்த்தாயா...' என, உரக்க கூறினார் மரியாதை ராமன்.
எதிர்வீட்டு பெண்ணின் மனம் குறுகுறுத்தது; திகைப்புடன் கொண்டையைத் தடவிப் பார்த்தாள்.
இதை கண்ட மரியாதை ராமன், 'எத்தனை பொய் சத்தியம் செய்தாலும், உன் செய்கையே கோழி திருடியதைக் காட்டி விட்டது; உண்மையை மறைக்காமல் கூறு; இல்லா விட்டால் கசையடிக்கு உட்படுத்துவேன்...' என்று மிரட்டினார்.
நடுங்கியபடி, உண்மையைக் கூறினாள் அந்த பெண்.
உரிய நிவாரணத்தை வாங்கிக் கொடுத்தார்; பொய் கூறியதற்காக, அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் மரியாதை ராமன்.
குழந்தைகளே... இது போல் உத்திகளை பயன்படுத்தி, உண்மை அறிந்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

