
அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 32; தனியார் நிறுவனத்தில் பொறுப்புள்ள பணியில் இருக்கும் தாய். இரு மகள்கள்; மூத்தவளுக்கு வயது, 16; பிளஸ் 1 படிக்கிறாள்; இளையவளுக்கு வயது, 12; 7ம் வகுப்பு படிக்கிறாள்.
மூத்தவள் வாயாடி; துடுக்குதனமாய் பேசுவாள். கோடை விடுமுறையில், இரண்டு மாதங்கள், என் மூத்த தங்கை வீட்டில் தங்கி இருந்தாள். அவளிடம் இருந்து கெட்ட குணங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டாள்.
தினமும், பள்ளிக்குச் சென்று வந்த பின், ஒரே பஞ்சாயத்து தான். வகுப்பு தோழி ஒருத்தியைப் பற்றி, இன்னொருத்தியிடம் கோள் மூட்டி, குடுமி பிடி சண்டையை ஏற்படுத்தி விடுகிறாள்.
அத்துடன், தெருவில் அக்கம் பக்கத்து பெண்களை பற்றி, சதா பொறணி பேச ஆரம்பித்தாள்.
'கோளும், பொறணியும் குடும்பத்துக்கு ஆகாது; தயவுசெய்து பேசாதே...' என கெஞ்சினால், கேட்க மறுக்கிறாள்.
'இரண்டும் பேசுறது கெத்தும்மா... அப்ப தான், மத்தவங்களுக்கு நம்ம மேல பயம் இருக்கும்...' என்கிறாள். இவளை எப்படி திருத்துவது... ஒரு வழி சொல்லுங்கள்.
அன்புள்ள அம்மாவுக்கு...
பொதுவாக, குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு நீண்ட நாள் தங்க அனுப்பும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒன்று குழந்தைகள், நம் வீட்டு பலவீனங்களை ஒன்று விடாமல் ஒப்பித்து வந்து விடுவர் அல்லது அவர்கள் வீட்டு கெட்டதுகளையும், ஈறு, பேனையும் எடுத்து வந்து விடுவர்.
ஆபத்தானது, 16 வயது; ஆரோக்கியமானவர்கள், மருத்துவமனைக்கு சென்று வந்தாலே, நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை, 'க்ராஸ் இன்பெக் ஷன்' என்பர்.
பலவீனமானவர்கள், மருத்துவமனைக்கு சென்று வந்தால், அனைத்து நோய் தொற்றுகளும் ஏற்பட்டு விடும். உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும், 'டீனேஜ்' பெண்கள் பொருந்தா காதலில் விழுந்து, வாழ்க்கையை கெடுத்துக் கொள்வதும் உண்டு.
ஒருவர், இன்னொரு தோழியை பற்றி அவதுாறு பேசினால், முதலிலேயே, 'யாரை பற்றியும் என்னிடம் அவதுாறு பேசாதே; எனக்கு பிடிக்காது...' என கூறி விட வேண்டும்.
அதையும் மீறி அவதுாறு பேசினால், ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் விட்டு விட வேண்டும். தோழி சொன்ன அவதுாறுகளுக்கு, கண், காது, மூக்கு வைத்து, இன்னொரு தோழியிடம் பற்ற வைப்பது மோசமான செயல்.
சண்டை மூண்டு விடும். பரம விரோதி ஆக்கி விடும். பொறணி பேசுவது திருப்பி வந்து தாக்கும்.
வாழைக்காய் பஜ்ஜி போட்டு, காபி தயாரித்து மகளுக்கு கொடுத்தவாறே, 'மகளே... கோள் பேசுவதும், பொறணி கூறுவதும் நம்பகத்தன்மையை முழுதும் சீர்குலைத்து விடும். தற்கொலை தாக்குதல் போல, பிறரையும் அழித்து, தாக்குதல் நடத்தியவரையும் அழித்து விடும்...
'நம் முதுகில், டன் கணக்கில் அழுக்கை வைத்து, பிறரின் அழுக்கை சுட்டி காட்டுதல் முறையா... பிறரை குற்றம் சுமத்தி, ஒரு விரலை நீட்டும் போது, மீதி, மூன்று விரல்கள் நம்மை சுட்டும் தெரியுமா...
'பிறரிடம், குறையை கண்டால், அவரிடமே அந்தரங்கத்தில் கூறி, அவரை திருத்தப் பார்; கோளும், பொறணியும் பேசிக் கொண்டிருந்தால், வாழ்கையில் மிகவும் பின்தங்கி விடுவாய்...
'படித்து பெரிய வேலைக்கு சென்று, சாதிக்க விரும்பினால், இந்த குட்டிசாத்தான்களை துாக்கி சுமக்காதே. கோள், பொறணி பேசுபவர் மீது, பிறருக்கு பயம் இருக்காது; பதிலாக, கரப்பான் பூச்சியை பார்த்தது போல அசூயையும், அருவெறுப்பும் ஏற்படும்.
'கோளும், பொறணியும் பேசாமல் இருந்து பார்! உன் நட்பு வட்டம் அதிகரிக்கும்; சக பெண்களால் தேவதையாய் உணரப்படுவாய்; உன் தலைக்குப் பின், ஒரு ஒளிவட்டம் மலரும்...
'டீனேஜ் சமயத்தில் என்ன நடத்தையை கை கொள்ளுகிறாயோ, அதுவே, உன் ஆயுளுக்கும் தொடரும். என் அன்புக்குரிய மகளே...' என பக்குவமாக அறிவுரை கூறவும்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

