
கோல்கேட்டின் கதை!
அமெரிக்கா, நியூயார்க் நகரில், 'சோப்' பயன்பாடு கி.பி., 1800ல் அறிமுகமானது. அன்று, அதை தயாரிப்பது சிரமமான வேலை. ஒரு சோப் தயாரிப்பு கம்பெனியில் உதவியாளராக பணி செய்து வந்தான் சிறுவன் வில்லியம் கோல்கேட். சோப் தயாரிக்கும் நுட்பத்தை கூர்ந்து கவனித்து கொண்டிருப்பான்.
பணம் சம்பாதிக்கும் ஆசை அவன் மனதில் வேர்விட்டு வளர்ந்து கொண்டிருந்தது. சோப் விற்பனை பற்றியும் அறிந்து கொண்டான். 
வாலிப பருவத்தை அடைந்ததும், பாட்டியிடம் வாங்கிய பணத்தில், 1806ல் சொந்தமாக சோப் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை துவங்கினார் வில்லியம். அது, 'வில்லியம் கோல்கேட் அண்ட் கம்பெனி' என அழைக்கப்பட்டது. தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றிய விபரங்களை துல்லியமாக அறிந்திருந்த போதிலும், வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. 
இதற்கிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் வில்லியம். தொழிற்சாலையை நடத்த முடியவில்லை; அது மூடப்பட்டது. 
உடல் நலம் பெற்றதும் தீராத ஆர்வத்தில், 'எங்கே தவறு செய்தோம். அதை தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன' என, ஆலோசித்தார் வில்லியம்.
மீண்டும் சோப் தயாரிப்பு கம்பெனியை திறந்தார். இம்முறை வெற்றிக்காற்று அவரை நோக்கி வீசியது. ஒரே எடையில் தயாரித்த சோப்புகள் நன்கு விற்றன. அந்த வியாபாரத்தில் வெற்றிப் படியில் ஏறிய வில்லியம், 1857ல் இறந்தார். 
பின், அவரது மகன் சாமுவேல் கோல்கேட் அந்த நிறுவன நிர்வாக பொறுப்புக்கு வந்தார். தயாரிப்பில் புதுமைகள் செய்தார். அதில் ஒன்றுதான் நறுமணம் கலந்த சோப். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.
சற்றும் தாமதிக்காமல், அதே பிராண்ட்டில் புதிய பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தினார்; அது பற்பசை. முதலில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்பட்டது. 
பல் தேய்த்த போது நல்ல ருசியாக இருந்தது. வாய் கழுவினால் அகலாத நறுமணம் வீசியது. இவை அந்த பற்பசையின் சிறப்பம்சங்கள். சந்தையில் உயர்ந்த மதிப்பை பெற்றது.
வேதியியல் அறிஞர் மார்ட்டின் ஹில் இட்னர் உதவியுடன், பற்பசையை, டியூபில் அடைத்து விற்கும் முறையை அறிமுகம் செய்தார்.
அப்போது, பீர்ட் பிரதர்ஸ் என்ற சகோதரர்கள், இந்த நிறுவனத்தை வாங்கினர். பாமோலிவ், கோல்கேட் என்ற, 'பிராண்ட்' பெயர்களில் சோப், பற்பசை தயாரித்து விற்பனை செய்தனர். 
அதிவேகமாக உலகெங்கும் கடை பரப்பியது அந்த நிறுவனம். விளம்பரங்கள் வாயிலாக மக்களை கவரும் சூத்திரத்தையும் கண்டது. விளம்பரத்தில் தோன்றிய டாக்டர்கள், பற்பசையின் நன்மைகள் குறித்து உரையாடினர். இந்த யுக்தி கூடுதல் பலன் தந்தது. விற்பனையில் முதலிடம் பிடித்தது அந்த நிறுவன தயாரிப்புகள்.
இன்று, உலகம் முழுதும், கோல்கேட் பற்பசை அமோகமாக விற்பனையாகிறது. அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் பிராண்டாக உள்ளது.
குழந்தைகளே... முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு

