
ரயில் பயணம் இனிமையானது; அனைவருக்கும் வாய்த்திருக்கும். ரயில் பெட்டியில் உள்ள வண்ணம், வரைந்திருக்கும் குறிகள் எல்லாம், பலவித தகவல்களை தெரிவிக்கும். அவற்றை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ரயில் பெட்டிகளில் பூசப்படும் வண்ணங்கள் தரும் தகவல்களைப் பார்ப்போம்...
சென்னை, ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில் பயணத்துக்கு தேவையான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன; அவை, நீல வண்ணத்தில் இருக்கும். இது, இந்திய ரயில்வேயின் தரக்குறியீடாக, 1990ல் நிர்ணயிக்கப்பட்டது.
ரயில் பெட்டியில் கடைசி ஜன்னலுக்கு மேல், நான்கு மூலைகளிலும் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சாய்வு கோடுகள் இருந்தால், அவை முன் பதிவு இல்லாத பெட்டிகள் என பொருள். எளிதாக அடையாளம் கண்டு பயணிக்க வசதியாக இந்த வண்ணப்பூச்சு உதவுகிறது.
புறநகர் ரயில் பெட்டிகளில், சாம்பல் வண்ணத்தின் மீது, பச்சை வண்ணக்கோடுகள் இருந்தால், அதில் பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும். மஞ்சள் நிற, 'ஜிக்ஜாக்' கோடுகள் வரைந்திருந்தால், ஊனமுற்றோர் பயணிக்கும் பெட்டி.
சிவப்பு அல்லது செம்பழுப்பு வண்ணத்தில் கோடுகள் இருந்தால், முதல் வகுப்பு பெட்டி என அடையாளம் காணலாம்.
ரயிலின் கடைசிப்பெட்டியின் பின்புறம், மஞ்சள் வண்ணத்தில், 'எக்ஸ்' என்ற குறி வரைந்திருந்தால், அது அந்த ரயிலின் கடைசிப்பெட்டி என்பதை குறிக்கும். இந்த குறி, ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை எனில், பெட்டிகள் கழன்று இருப்பதை உறுதி செய்யமுடியும்.
ரயில் நிலையங்கள் பற்றி சில சுவாரசியங்கள்...
* உலகில் அதிக பணியாளர் கொண்ட நிறுவனங்களில் ஒன்று இந்திய ரயில்வே; இதில், 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்
* மிகவும் வேகம் குறைவானது, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - நீலகிரி மாவட்டம், ஊட்டி இடையே ஓடும் பயணியர் ரயில். மணிக்கு, 10 கி.மீ., வேகம் கொண்டது
* நீண்ட பாதையில் ஓடும் ரயில், அசாம் மாநிலம், திப்ரூகர் - கன்னியாகுமரி இடையேயான எக்ஸ்பிரஸ். இது, 4,219 கி.மீ., பயண துாரம் கொண்டது
* உத்தரபிரதேசம் மாநிலம், கோரக்பூர் ஜங்ஷன் ரயில் நிலையம் உலகின் நீண்ட நடைமேடை கொண்டது; இதன் நீளம் 1366.33 மீட்டர்
* நவாபுர் என்ற ரயில் நிலையத்தின் ஒரு பகுதி, மஹாராஷ்டிரா மாநிலத்திலும், மறுபகுதி குஜராத் மாநிலத்திலும் உள்ளது.
- ஜெயகுமார்

