
மாரியம்மாளுக்கு அழுகை முட்டியது.
சாப்பாட்டை பார்த்தால், வெறுப்பாக இருந்தது. 
தயிர் சாதத்துடன் கொஞ்சம் கீரைப் பொரியல் மட்டுமே இருந்தது; மாணவியர் எல்லாம் வித விதமாக உணவு வகைகள் கொண்டு வந்து சாப்பிடுவதையும், ஆங்கிலத்தில் உரையாடுவதையும் கண்டு மிரண்டாள்.
உணவு பாத்திரத்தை திறந்தபடி வெறித்திருந்தாள்.
ரோந்து வந்த தலைமை ஆசிரியை, ''பொண்ணு இங்க வா... எந்த வகுப்பு படிக்கிற...'' என அழைத்தார்.
''மூன்றாம் வகுப்பு படிக்கிறேம்மா...'' 
வார்த்தைகள் தடுமாறி அழுகை வந்தது.
''ஏன் சாப்பிடாம இருக்க...'' 
'' எனக்கு ஒண்ணுமே புரியல...''
''புதுசா பள்ளியில சேர்ந்திருக்கிறாயா...''
''ஆமா... கிராமத்துல இரண்டாம் வகுப்பு வர படிச்சேன்...''
''அப்பா என்ன பண்ணுறாரு....''
''திடீர்ன்னு இறந்துட்டாரு... அம்மாவையும், என்னையும் உறவுக்காரங்க சென்னைக்கு கூட்டி வந்தாங்க...''
''அம்மா என்ன செய்றாங்க...''
''வீடுகளில் கூலி வேலை செய்றாங்க... என்னையும், ஒரு வீட்டுக்கு வேலை செய்ய கூட்டிட்டு போனாங்க. அந்த வீட்டு அம்மாதான் இந்த பள்ளியில் சேர்த்து விட்டாங்க...''
''பயப்படாதே... நல்லா படிக்கணும்...''
இந்த மந்திர வார்த்தைகள், சிறுமிக்கு துணிவை கொடுத்தது. பேச்சை கோர்வையாக்கியது.
''வகுப்புல எல்லாரும் கேலி பண்றாங்க...''
''எதுக்கு...''
''ஆங்கிலம் பேச வரல... வாய் திக்குது...''
''முயற்சி செய்... நல்லா வரும்... சிறப்பாக வாழலாம்; எதற்கும் கவலைப்படாதே...''
ஆறுதல் கூறிய தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியையிடம் விபரங்களை தெரிந்து கொண்டார்; சில ஆலோசனைகளையும் கூறி சென்றார்.
வகுப்புத்தேர்வு முடிந்தது.
விடைத்தாளுடன் வந்த வகுப்பு ஆசிரியை, ''மாரியம்மா...'' என்றார்.
குறைந்த மதிப்பெண் எடுத்தவளை, கண்டிக்கப் போகிறார் என ஏளனமாக பார்த்தனர் மாணவியர்.
நடந்தது வேறு. 
''எல்லா பாடத்துலயும் முதல் மதிப்பெண் எடுத்திருக்கே... குறிப்பா கணக்குப் பாடத்துல நுாற்றுக்கு நுாறு. வேற யாருமே முழு மதிப்பெண் பெறல... கையெழுத்தும் அருமை; எல்லாரும் எழுந்து பாராட்டி கை தட்டுங்க...''
அதிர்ச்சியுடன் கைதட்டினர் மாணவியர்.
பின், ''நீங்க எல்லாம் வீட்டுல ஆங்கிலத்துல பேசுறீங்க; அதனால, சரளமா வருது... மாரியம்மாவுக்கு அப்படி சூழ்நிலை இல்லை; அதுக்காக கிண்டல் செய்யலாமா... அவளுக்கு தெரியாததை சொல்லிக் கொடுங்க... அவகிட்டயிருந்தும் கத்துக்கோங்க... நம்பிக்கை வர்ற மாதிரி பழகுங்க...'' என அறிவுரைத்தார்.
நம்பிக்கையும், நல்லெண்ணமும் வகுப்பை நிறைத்தது.
குழந்தைகளே... தோற்றத்தையும், திறனையும் வைத்து யாரையும் ஏளனமாக எண்ணக் கூடாது. அன்பாக, தோழமையுடன் பழக வேண்டும்.
ர.கிருஷ்ணவேணி

