
அன்பு பிளாரன்ஸ்...
இல்லத்தரசியாக இருக்கிறேன். திருமணமாகி, 10 ஆண்டுகளுக்குப் பின் மகன் பிறந்தான்; கருப்பாக இருந்தாலும், மிக லட்சணமாய் இருப்பான். சுருள் தலை முடி; அவனுக்கு இப்போது வயது 17;
எல்.கே.ஜி.,யிலிருந்து பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் தான் படிக்கிறான்.
கடந்த, ஐந்து ஆண்டுகளாக, என்னை, 'ஆயா' என்றே அழைக்கிறான்.
உன் அம்மா யாரென்று கேட்டால், பள்ளி ஆசிரியை பெயரை கூறுகிறான்; அலைபேசியிலும், வாட்ஸ் ஆப்பிலும் கூட, ஆசிரியை படத்தை தான், 'டிபி'யாக வைத்திருக்கிறான்.
விடுமுறை நாட்களில், ஆசிரியை வீட்டுக்கு காலையில் சென்று, மாலையில் திரும்பி வருவான்; பண்டிகைகளுக்கு ஆசிரியைக்கு புத்தாடை எடுத்து கொடுப்பான்.
அந்த ஆசிரியையிடம் தொலைபேசியில் பேசினேன்.
என் மகன் வயதில், அவருக்கு மகன் இருந்ததாகவும், மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாகவும், அவன் ஞாபகமாய் என் மகன் மேல் பாசத்தை கொட்டி பழகுவதாகவும் கூறினார்.
இதை ஒரு சாதாரண, 'சென்டிமென்ட்' விஷயம் என விடுவதா அல்லது ஆசிரியைக்கும், என் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை வெட்டி விடுவதா... என்ன செய்யலாம் பிளாரன்ஸ்...
அன்புள்ள அம்மா...
உங்களுக்கு தற்சமயம் வயது, 52 இருக்கும்; முதிர்ந்த தோற்றத்தில் இருப்பதால், ஆயா என்கிறானோ... உங்கள் மகன். எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, ஏறக்குறைய, 12 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே பள்ளியில் படித்து வருகிறான்.
அந்த ஆசிரியையின் அன்பு மழையிலும் நனைந்து வருகிறான்; மிக சிறந்த முறையில் கல்வி புகட்டுகிறார். மதிய நேரத்தில் உங்கள் மகன் எடுத்துப் போன உணவையோ, தன் உணவையோ உங்கள் மகனுக்கு ஆசையாய் ஊட்டியும் விடுவார்.
உங்கள் மகன் மனத் தராசின் ஒரு தட்டில், உங்களையும், இன்னொரு தட்டில் ஆசிரியையும் நிறுத்திப் பார்க்கிறான்; ஆசிரியை நிற்கும் தட்டு கனக்கிறது.
இது தற்காலிகம் தான். உங்கள் குறைபாட்டை போக்கி, மகனின் மீது முழுமையாக அன்பை செலுத்திப் பாருங்கள்.
பிளஸ் 2 முடித்த பின், கல்லுாரிக்கு படிக்க போவான்; அப்போது, அவனுக்கு, ஆசிரியையுடன் நேரடி தொடர்பு அறுந்து போகும். இடைவெளி உருவாகும்; மகன் வாழ்வில் புதிய பெண்கள் அறிமுகமாவர்.
டீனேஜ் முடிவில், மனப்பக்குவம் வந்து விடும்; பெற்று வளர்த்து படிக்க வைக்கும் அம்மாவின் அருமை புரியும்; ஆசிரியையை, தாயின் ஸ்தானத்திலிருந்து விலக்கி, குருவின் ஸ்தானத்துக்கு கொண்டு போய் வழிபடுவான்.
தாயாக, ஆசிரியையை மதிப்பவன் போற்றுதலுக்குரியவன்; வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்துக்கு வருவான். பெண்களை மதிக்க தெரிந்தவன் சிறப்பானவன்.
சகோதரி... அந்த ஆசிரியை மீது பொறாமை பட வேண்டாம்; அவரை உங்கள் வீட்டுக்கு வரவேற்று விருந்தளித்து உபசரியுங்கள்.
மகனுக்கு செய்ய வேண்டிய கடமையில் ஏதேனும் குறையிருக்கிறதா என கேட்டறிந்து நிவர்த்தி செய்யுங்கள்; ஆசிரியையின் இழப்புக்கு தகுந்த ஆறுதல் வார்த்தை கூறுங்கள்.
மகன் எதை படித்தால், எதிர்காலம் அமையும் என்பதை கேட்டறியுங்கள்; கல்லுாரி படிப்புக்கு பிறகும், ஆசிரியையை அம்மா என்றும், உங்களை ஆயா என்றும் அழைத்தால் வருத்தப்பட வேண்டாம்.
ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தானே...
அம்மாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் அம்மா தானே...
மகனின் சந்தோஷத்துக்காக, ஒரு தாய் எல்லாவற்றையும் விட்டு கொடுப்பாள்; விட்டு கொடுங்கள் சகோதரி... நல்லதே நடக்கும்!
- அன்புடன், பிளாரன்ஸ்.

