PUBLISHED ON : நவ 06, 2021

சிங்க நடை!
உடற்பயிற்சி, மிக முக்கியமாக கருதப்படுகிறது இன்று. கடைபிடிக்க எளிதானதும், அதிக பலன்களை தருவதும், நடைபயிற்சி. இதை, எவரும் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
தினமும், 60 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆயுள், ஆரோக்கியத்துடன் நீடிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரோக்கிய குறைவுக்கு முக்கிய காரணம், சோம்பேறித்தனம். உடற்பயிற்சி செய்ய ஒரு நாள் உத்வேகம் இருக்கும்; மறுநாள் மனம் படுத்து விடும். பின், பயிற்சியை மறுத்துவிடும்.
இதற்கு மாற்று வழி ஒன்று உள்ளது. அது தான் நடை பயிற்சி. சிரமம் இன்றி பலன்களை தரக்கூடியது. கருவி வாங்கும் செலவும்,
அதை பராமரிக்கும் செலவும் இல்லை.
நடை பயிற்சி மேற்கொள்வதில் சில சிரமங்கள் உண்டு.
அவை...
* வழியில் வாகன புகையால் கெடுதல்
* சீர் மற்றும் ஒழுங்கற்ற பாதை
* தெருநாய் தொல்லை
* சுகாதாரமற்ற சூழல்
* வானிலை மாற்றத்தால் சிரமங்கள்
* உடை, காலணி செலவு.
இப்படி பல பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க, எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்வது மிகச்சிறந்தது.
வீட்டிலேயே, இதை மேற்கொள்ளலாம்; சிரமம், செலவுகள் இன்றி அதிக பலன்களை பெறலாம்.
இதுபற்றி பார்ப்போம்...
நல்ல காற்றோட்டம் உள்ள வெளியை தேர்ந்தெடுக்கவும். தரையில் எட்டு என்ற எண் வடிவத்தை வரையவும். அந்த வடிவத்தின் அகலம், ஆறு முதல், எட்டு அடிகள் வரை இருக்கலாம். நீளம், 12 முதல், 16 அடிகள் இருக்கலாம்.
மிக அதிக நீள அகலத்தால் சிரமம் வரும். எனவே, மேலே குறிப்பிட்டுள்ள அளவு முறையில், எட்டு வரைந்து, அதன் மீது நடப்பது, நல்ல பலன் தரும்.
நடக்கும் போது...
* உடலை விறைப்பாக வைத்திருக்கக் கூடாது
* இலகுவாக வைத்தபடி இயல்பாக நடக்கவும்
* ராணுவ வீரர்கள் போல் நடக்க வேண்டும் என்று கட்டாயமில்லை
* ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வரிசையாக நடக்கலாம்
* அரட்டையை தவிர்க்க வேண்டும்
* மிதமான வேகத்தில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* முடியும் வரை மவுனம் காக்க வேண்டும்
* வேடிக்கை பார்த்தபடி நடக்கக்கூடாது.
நடை பயற்சியின் போது, கவனம் உடல் நலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். தேவையற்ற கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில், காலையும், மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வது கூடுதல் பலன் கிடைக்க வழிசெய்யும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை...
எட்டு வடிவ பயிற்சியை ஆரம்பித்த முதல் நாள், 10 நிமிடங்கள் நடக்கலாம்; பின், நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி, யோகாசனம் என எதைச் செய்தாலும், துவங்கியதிலிருந்து, 4-5 நாட்களுக்கு வலியிருக்கும்; பின் சரியாகும். அதேபோல தான், எட்டு நடை பயிற்சியிலும் உடல் வலி போன்ற சிரமங்கள் இருக்கும். நடக்க, நடக்க அது சரியாகிவிடும்.
சிங்க நடை பயின்று நலத்தின் சிகரத்தில் ஏறுங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
