PUBLISHED ON : பிப் 19, 2022

பெரிய பஸ் நிலையம்!
உலகில் மிகப்பெரிய பஸ் நிலையம் அமைந்துள்ள நாடு, மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல். இந்தப் பெருமையை பல ஆண்டுகளாக தக்க வைத்திருந்தது. இந்திய தலைநகர் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நடந்ததை ஒட்டி, 2010ல் மிகப்பெரிய பஸ்நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டது.
கிழக்கு டில்லி, யமுனை நதிக்கரையில் இந்திரப்பிரஸ்தா பூங்கா அருகே காமன்வெல்த் கிராமத்தில் அமைந்தது. ஆனால், நான்கே ஆண்டுகளில், 'மிகப்பெரியது' என்ற பெருமையை இழந்தது.
அதற்கான காரணத்தை பார்ப்போம்...
டில்லி பஸ் நிலையம், 61 ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்தள பஸ்களை நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்து. அதனால், 'மில்லினியம் பஸ் டெப்போ' என அழைத்தனர்.
இங்கு பஸ்களில் எற்படும் பழுது நீக்க வசதியாக ஐந்து பணிமனைகள் இயங்கின. பொருட்களை வைக்க சரக்கு மையம் ஒன்று இருந்தது. அதிநவீன கண்காணிப்பு வசதியுடன் திகழ்ந்தது.
பிரம்மாண்டமான இந்த பஸ் நிலையத்தால், சுற்றுச்சூழல் மாசு பிரச்னை ஏற்பட்டது. யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததால், நதி மாசு படுத்துவதாக புகார் எழுந்தது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற, 2014ல் உத்தரவிட்டது, நீதிமன்றம்.
அதன்படி, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பஸ் நிலையம் என்ற பெருமையை, துவங்கிய நான்கே ஆண்டுகளில் பறிகொடுத்தது.
தற்போதைய நிலவரப்படி, இஸ்ரேல் டெல்அவி நகர மத்திய பஸ் நிலையம் தான் உலகிலேயே மிகப்பெரியது. இது, 57 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரே நேரத்தில், 800 பஸ்கள் நிறுத்த முடியும்.
இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது, சென்னை, கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையம். சென்னை புறநகர் பஸ்களுக்காக கட்டப்பட்டது. இது, 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில், 500 பஸ்களை நிறுத்த முடியும். இந்தியாவின் மிகப்பெரிய பஸ் நிலையமாகவும் உள்ளது.
நேரம்!
பணம் உள்ளவர் - இல்லாதவர், வயதில் சிறியவர் - பெரியவர்,
இந்நாட்டில் வாழ்பவர், ஆண் - பெண் என ஆயிரம் வேறுபாடுகள் இருப்பினும், ஒரு நாள் என்பது அனைவருக்கும், 24 மணி நேரம் தான்.
நேரத்தை முறையாக கடைபிடித்து வாழ்பவர் தோற்க மாட்டார். உலகத்தில் எதை இழந்தாலும் மறுபடி கிடைத்துவிடும்; ஆனால், 24 மணி நேரம் போய்விட்டால் அதில் ஒரு நொடி கூட திரும்பக் கிடைக்காது.
இதை தான், 'பொன்னான நேரம்' என்கிறோம். இந்தியர் நேரத்தை பார்ப்பர். ஜப்பானியர் நிமிடத்தை பார்ப்பர். ஐரோப்பியர் நொடியை பார்ப்பர்.
காலம் கண் போன்றது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு
