PUBLISHED ON : பிப் 19, 2022

தென்மேற்கு பருவமழை துவங்கியது!
தெருவில், 'குடை ரிப்பர்... குடை ரிப்பேர்...' என்ற நீண்ட குரல் கேட்டது.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள் வள்ளி. குரல் கொடுத்த முதியவரை அழைத்து, ''ஐயா... குடை ஒன்று உள்ளது; பழுது நீக்கணும்...'' என்றாள்.
வெளி திண்ணையில், தகர பெட்டியை இறக்கி பணியை துவக்கினார் முதியவர்.
வீட்டுக்குள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் வள்ளியின் மகன் ரூபன். சத்தம் கேட்டு வெளியே எட்டி பார்த்தான்; குடை பழுது நீக்குபவரின் தோற்றம் கண்டு முகம் சுளித்தான்.
'ஆளை பார்த்தாலே சகிக்கல; குளிச்சு எத்தன நாளாச்சோ... கிழிஞ்ச பனியன், வேஷ்டி, மேல் துண்டுடன் சரியான அழுக்கு மனிதர்; இவரிடமா குடையை பழுது நீக்க கொடுத்திருக்கிறார் அம்மா' என எண்ணியபடி, படிப்பில் ஆழ்ந்தான் ரூபன்.
கம்பிகள் உடைந்தும், துணி கிழிந்தும், நைந்தும் காட்சி தந்தது குடை.
'மூலையில் கிடந்த அந்த குடையை, குப்பையில் துாக்கி போட்டிருக்கலாம்; ஆனால், அழுக்கு மனிதரிடம் சீர் செய்ய கொடுத்து வீணாக செலவு செய்கிறார் அம்மா' என நினைத்தபடி மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தான் ரூபன்.
குடையை பழுது நீக்கி முடித்து, உரிய கூலியை பெற்றுக் கொண்டார் முதியவர்.
ஓரக் கண்ணால் அந்த குடையைப் பார்த்தான் ரூபன். நம்பவே முடியவில்லை; புத்தம் புதிதாக காட்சி தந்தது; மிக நேர்த்தியாக பழுது நீக்கியிருந்தார் முதியவர்.
'அழுக்கு உடையணிந்த மனிதருக்குள், இத்தனை திறமையா... தப்பு கணக்கு போட்டு விட்டோமே' என வருந்தி, மானசீகமாக மன்னிப்பு கேட்டான், ரூபன்.
அவன் எண்ண ஓட்டத்தை கவனித்த வள்ளி, ''அணிந்திருக்கும் உடையை வைத்து யாரையும் எடை போடக் கூடாது...'' என்றாள்.
பழுது நீக்கிய முதியவர், எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து, அடுத்த வாடிக்கையாளரைத் தேடி போனார்.
குழந்தைகளே... தோற்றம் கண்டு யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது; அவர்களுக்குள் நிறைய திறமைகள் ஒளிந்திருக்கும். அதை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
எஸ்.டேனியல் ஜூலியட்
