PUBLISHED ON : அக் 15, 2022

நாடான நகரம்!
ஐரோப்பிய நாடான இத்தாலியில் வாடிகன் சிட்டி, 1929ல் தனி நாடானது. இத்தாலி சர்வாதிகாரியாக இருந்த முசோலினி, கர்த்தோலிக்க மதத்தலைவர் போப் ஆண்டவருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை அடுத்து, வாடிகன் நகரம் தனி நாடானது.
உலகிலேயே மிகச்சிறிய நாடு. இங்கு வறுமை, எல்லைப் பிரச்னை என எதுவுமில்லை.
பிக்கப் டிரக்!
ஆட்டோ ரிக் ஷா என்றதும் நினைவுக்கு வருவது, 'மீட்டருக்கு மேல் என்ன கொடுப்பீங்க...' என பேரம் பேசும் வார்த்தை தான். அதை தாண்டி ஆட்டோ ரிக் ஷா பற்றிய சுவாரசியத் தகவல்களைப் பார்க்கலாம்...
மூன்று சக்கரங்களுடன் அடக்கமான வடிவமைப்பில் உள்ளது ஆட்டோ ரிக் ஷா. தவிர்க்க முடியாத பொது போக்குவரத்து வாகனம். இதன் வடிவமைப்புக்கு அடித்தளமாக இருந்தது, ஒருவகை மினி பிக்கப் டிரக் வாகனம். கிழக்காசிய நாடான ஜப்பானில் உருவாக்கப்பட்ட, 'மிட்ஜெட்' என்ற மூன்று சக்கர வாகனம் தான் இதற்கு முன்னோடி.
ஒவ்வொரு நாட்டிலும், இதற்கு ஒவ்வொரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமோசா, டுக் டுக், பேபி டாக்சி, மோட்டோ டாக்சி, லபா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இந்த வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமே கேள்விக்குறியாக உள்ளன. எனவே இதற்கு மாற்றாக, 'குவாட்ரி சைக்கிள்' என்ற பெயரில், நான்கு சக்கர வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர, பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
செயற்கை உயிரி!
தாவரம் மற்றும் விலங்குகளின் மரபணுவில் மாற்றம் செய்து, மருத்துவத்தில் சாதனை நிகழ்த்தி வருகின்றனர் விஞ்ஞானிகள். இதன் அடுத்த நிலையாக, செயற்கையாக உயிரினத்தை உருவாக்கவும் முயற்சி நடக்கிறது.
இந்த நிலையில் ஒரு செல் உயிரியான, 'பாக்டீரியா' மரபணு கட்டமைப்பை, கணினி மென்பொருளில் வடிவமைத்து, சில ரசாயனங்களை கலந்து செயற்கையாக உயிரியை உருவாக்கி உள்ளனர் விஞ்ஞானிகள். இதற்கு, 'சிந்தியா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, செயற்கை பாக்டீரியாவை உருவாக்கி, மருந்துகள் தயாரிக்க உதவும். அதே நேரம், தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பால் உலகுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எதிர்ப்பும் எழுந்துள்ளது. செயற்கையாக உயிரினம் உருவாக்குவது சரியா என விவாதம் சூடு பிடித்துள்ளது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
