PUBLISHED ON : அக் 15, 2022

கண்டோர் என்பது மிகப்பெரிய கழுகு இனம். வட, தென் அமெரிக்க கண்டப்பகுதியில் காணப்படுகிறது. இதில், கலிபோர்னிய கண்டோர் என்ற இனம், வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. ஆண்டியன் கண்டோர் என்ற இனம், தென் அமெரிக்க பகுதியில் உள்ளது. இரண்டுமே அரிய பறவையினம்.
இதன் விரிந்த இறக்கைகள், மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும்; எடை, 14 கிலோ வரையுள்ளது. உலகின் மிகப் பெரிய பறவையினமாகக் கருதப்படுகிறது.
ஆண்டியன் கண்டோர், பளபளப்பான கருப்பு நிறத்தில் காணப்படும். கழுத்தில் வெண்மை நிற வளையம் இருக்கும். தலையில் கொண்டை போன்ற தசை அமைப்பு இருக்கும். அழுகிய மாமிசம், கூடல் பறவைகளின் முட்டைகளை உண்ணும்.
ஆண்டியன் கண்டோர் கழுகு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு முட்டையிடும். பொரித்த குஞ்சு ஐந்து மாதம் வரை கூட்டிலே இருக்கும்; பறக்க இயலாது.
தென் அமெரிக்க நாடுகளில் இந்த பறவையினம் தெய்வமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 29ம் தேதி, கண்டோர் கழுகு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்று, இந்த கழுகை எருதின் முதுகில் கட்டி வேடிக்கை பார்ப்பர். விடுவித்துக் கொள்வதற்காக எருதை கொத்தி தாக்கும் கழுகு; முடிவில் எருது இறக்கும். அந்த எருது, சொர்க்கத்துக்கு போவதாக மகிழ்வர் மக்கள்.
இந்த கொடூர நிகழ்வுக்கு இப்போது, தடை விதிக்கப்பட்டுள்ளது.
