PUBLISHED ON : அக் 15, 2022

சூரிய ஒளிக்கற்றை வைரபுரி நகரத்தில் இருந்து மறைந்தது. இளம் குளிரை போர்த்தி இனிதே துவங்கியது இரவு. உற்சாகத்துடன் பறந்து கூடுகளை அடைந்தன பறவைகள். மரம் விட்டு, மரம் தாவுவதை நிறுத்தி அமைதியாயின குரங்குகள்.
பட்டுத்துணி வியாபாரி ஒருவர் நகர வாயிலுக்குள் நுழைந்தார். வாயில் காப்பாளர்களிடம், செய்தியை கூறினார். மன்னர் உத்தரவு கிடைத்ததும் உள்ளே அனுமதித்தனர்.
வைரபுரி மன்னர் அஜானுபாகுவாக காட்சி தந்தார்.
அவரது தோற்றம் ஒருவித பயத்தையும், மரியாதையும் தந்தது.
'வணங்குகிறேன் மன்னா... என் பெயர் செம்பன். ஊர் ஊராய் சென்று துணி வியாபாரம் செய்பவன்; இந்நகரில் பிழைப்பதற்கு அனுமதி தர வேண்டும்...' என, பணிந்து கேட்டார்.
'நீ வியாபாரம் செய்யலாம்... நாட்டு மக்கள் நல்ல பலன் அடையவேண்டும்...'
மன்னரின் ஆணையை ஏற்று, வியாபாரியை அழைத்து சென்றார் அமைச்சர்.
ஒதுக்கப்பட்ட அறையில் தங்கினார் வியாபாரி.
இரவிலும் நகர வீதிகள் வெளிச்சமாக இருந்தன.
அரண்மனை ஒளியில் மின்னியது. அறுசுவை உணவு வந்தது. எங்கும் சாப்பிடாத ருசி அந்த உணவில் இருந்தது. உண்டபின், ஊரை சுற்றி நடக்க துவங்கினார் வியாபாரி.
வழியில் எதிர்ப்பட்டார் அமைச்சர். இருவரும் பேசியபடியே வீதியில் நடந்தனர்.
'அமைச்சரே... எந்தவொரு தீப்பந்தமும், விளக்கும் இன்றி, இந்நகரம் இரவிலும் ஜொலிக்கிறது. நாட்டு மக்கள் சண்டை, சச்சரவு இல்லாமல் வேலைகளை செய்கின்றனர்...
'பறவை, விலங்குகள் எந்த துன்புறுத்தலும் இல்லாமல் இருக்கின்றன; சமத்தாக இருக்கின்றனர் குழந்தைகள். இவை எல்லாம் எப்படி சாத்தியம்...'
வினவினார் வியாபாரி.
'மக்களின் மனமும், வயிறும் நிரம்பி இருக்கிறது; அதனால், சண்டை சச்சரவுகள் ஏற்படுவது இல்லை...'
எடுத்து கூறினார் அமைச்சர்.
'அது சரி... இரவு வேளையிலும் இந்நகரம் எப்படி ஜொலிக்கிறது...'
'பல ஆண்டுகளுக்கு முன், கொள்ளையர்கள் வைரபுரி நாட்டு செல்வங்களை திருடிச் சென்றனர். நாடு, பெரும் பஞ்சத்தில் தவித்தது; மன்னர், கவலையில் ஆழ்ந்தார். அச்சமயம், மகாராணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது; அன்று, வானிலிருந்து ஒரு வெள்ளை குதிரை பறந்து வந்தது; அதன் மீது, ஒளியுடன் அமர்ந்திருந்தாள் தங்க தேவதை... தலையில் சூடியிருந்த மலரை எடுத்து, மகரந்தத்தை அரண்மனையை சுற்றி துாவினாள்...
'கார் மேகங்கள் கூடி, மழை கொட்டத் துவங்கியது; மழைத்துளி பூமியில் பட்டதும், தங்க நிற செடிகள் முளைத்தன... இவற்றில் பூக்கும், தங்க பூக்களை மக்கள் நலனுக்கு மட்டுமே பறிக்க இயலும்; பசி, பஞ்சத்தை போக்கும்...
'சுயநலனுக்கு பறித்தால், தக்க தண்டனை கிடைக்கும்... பகலில் தங்க பூக்களாக இருக்கும்; இரவானதும் வைரங்களாய் மாறி ஒளிவீசும்...' என்றார் அமைச்சர்.
இதை கேட்டதும், வியாபாரி மனதில் பேராசை வந்தது.
அவற்றை திருட திட்டமிட்டார். சந்தேகம் ஏற்படாதவாறு, வைரமாய் ஜொலித்தவற்றை பறித்து துணி மூட்டையில் கட்டினார். பின், அறைக்குள் படுத்து உறங்கினார்.
மறுநாள் விடிந்தது -
பறித்தவை தங்க மலராய் மாறிவிட்டதா என அறிய மூட்டைக்குள், கையை நுழைத்தார் வியாபாரி. மறுகணமே, சுண்டெலியாய் உருமாறி பொறியில் சிக்கினார்.
வியாபாரியை காணவில்லை என்ற செய்தி அமைச்சருக்கு தெரிய வந்தது. அரண்மனை முழுதும் தேடி பார்த்தனர்; எங்கும் அகப்படவில்லை. வியாபாரி தங்கியிருந்த அறையில், நான்கு மூட்டைகள் இருந்தன.
ஒவ்வொரு மூட்டையாக பிரித்தனர் பணியாளர்கள். இறுதியாய் இருந்த துணி மூட்டையை பிரித்ததும் மின்னின தங்க மலர்கள். அவற்றின் இடையில் ஒரு சுண்டெலி துள்ளி குதித்து ஓடியது.
செய்தியை மன்னரிடம் தெரிவித்தார் அமைச்சர்.
திரைச் சீலையின் பின்புறம் ஒளிந்திருந்த சுண்டெலி மன்னர் அருகே ஓடி வந்து, 'ஐயா... நான் திருட்டு வியாபாரி. பெரும் தவறு இழைத்து விட்டேன்; என் பேராசையால், சுண்டெலியாய் மாறி இருக்கிறேன்; மன்னியுங்கள்...' என, கதறி அழுதது.
தவறை உணர்ந்ததால் அங்கே, தங்க தேவதை தோன்றினாள்.
சுண்டெலியை மீண்டும் வியாபாரியாக மாற்றி மன்னித்தாள்.
குழந்தைகளே... சுயநலத்தை விட்டு பொது சொத்துக்களை பாதுகாத்து வாழ வேண்டும்.
- எஸ்.தேவி
