PUBLISHED ON : செப் 12, 2020

மாடு மேய்க்கும் சிறுவனிடம், ஓரு உண்டி வில் இருந்தது. ஆற்றங்கரை ஓரம், ஈரக்களிமண்ணை சிறு உருண்டைகளாக்கி, வில்லில் வைத்து, மரத்தில் தொங்கும் மாங்காய்களை குறி தவறாமல் அடித்து வீழ்த்துவான்.
ஒருநாள் மாமரத்திலிருந்த ஆந்தையை தாக்கி விட்டது களிமண் உருண்டை. வலி தாங்க முடியாமல், தோழன் காகத்திடம் விரைந்து, 'மாட்டுக்கார சிறுவன் அடித்து விட்டான்; வலி தாங்கமுடியவில்லை...' என்று கண்ணீருடன் கதறியது.
'கவலைப்படாதே... குயில் அண்ணன் கைதேர்ந்த வைத்தியர்; அவரிடம் வைத்தியம் செய்யலாம்...'
அழைத்துப் போனது காகம்.
ஆந்தையின் உடலை சோதித்து, களிமண் உருண்டை, விலாப்புறத்தில் ஒட்டியிருந்ததைக் கண்டது குயில். வலிக்கு காரணம் புரிந்தது. ஆந்தையின் ஏமாற்று குணம் நினைவுக்கு வர, 'உபாதையைக் குணப்படுத்தலாம்; அதற்கான ஊதியத்தை தந்து விட வேண்டும்...' என்றது குயில்.
'தராமல் இருப்பேனா... சீக்கிரம் கவனியும் வைத்தியரே...' என்றது ஆந்தை.
'ஊதியம் தந்தால் தான் வைத்தியம் செய்வேன்...'
உறுதியாக சொன்னது குயில்.
'முதலில் வைத்தியம் பாருங்கள்; ஆந்தையின் பணத்துக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்...'
காக்கையின் உறுதிமொழியை ஏற்று, 'ஆந்தையே... ஒரு நீர்நிலையில், கழுத்தளவு தண்ணீரில், சிறிது நேரம் உட்கார்ந்திரும்... வலி பறந்துவிடும்...' என்று அனுப்பியது குயில்.
ஆந்தையும், காகமும் அருகிலுள்ள குட்டைக்கு பறந்தன; கழுத்தளவு நீரில் மூழ்கியதும், களிமண் உருண்டை கரைந்தது; வலி பறந்தது.
மறுநாள் -
ஊதியத்தை வசூல் செய்ய போனது குயில்.
'நீ என்ன வைத்தியம் செய்தாய்... ஒரு மருந்தும் கொடுக்கவில்லை... தண்ணீர் சிகிச்சைக்கு ஊதியமா... போ... போ...' என, அலட்சியாக விரட்டியது ஆந்தை.
பணத்துக்கு பொறுப்பேற்றிருந்த காகத்திடம் கேட்டது குயில்.
'என்னிடம் கால்காசு கூட கிடையாது...'
இறக்கையை விரித்தது காகம்.
வழக்கை நரியாரிடம் எடுத்து போனது குயில்.
'வைத்தியத்துக்கு உரிய பணத்தை தராவிட்டால், பொறுப்பேற்ற காக்கை தான் கொடுக்க கடமைப் பட்டது...' என்று நரி.
தீர்ப்பை ஏற்பதை தவிர வேறு வழியில்லாததால், 'எதுவுமே இல்லையே... நான் என்ன செய்வேன்...' என்றது காகம்.
உடனே உத்தரவை மாற்றியது நரி. அதன்படி, 'இனி, குயில் இடும் முட்டைகளைக் காப்பாற்றும் வேலையை காகம் மேற்கொள்ள வேண்டும்...' என்று தீர்ப்பு சொன்னது.
'ஜாமீன் கொடுத்ததால், சங்கடம் ஏற்பட்டதே!' என்று கோபமடைந்த காகம், ஆந்தையை தேடியது. பயந்து மரப்பொந்துக்குள் புகுந்த ஆந்தை, இரவுகளில் மட்டும் வெளியே வந்தது.
இன்றுவரை இதே நிலைதான் நீடிக்கிறது.
குயில் இடும் முட்டைகளை, அடை காத்துவருகிறது காகம்.
குழந்தைகளே... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது உன்னதமான அறம். அதை வாழ்வில் கடைபிடியுங்கள்!
வாண்டுமாமா
