தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நவராத்திரியின் நன்மை!

நவராத்திரியின் நன்மை!

நவராத்திரியின் நன்மை!


PUBLISHED ON : செப் 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் நவராத்திரி துவங்கும். பிரதமை என்னும் சொல்லிற்கு 'முதல்' என்று பொருள்.

நவராத்திரியில் முதல்வராக திகழ்பவர் அம்பாள். உலகத்துக்கே தாயான பார்வதிதேவியை, துர்க்கையாகக் கருதி, ஒன்பது நாள் பூஜை செய்வர். ஒன்பது என்ற சொல்லை சமஸ்கிருதத்தில், 'நவ' என்பர். ஒன்பது இரவுகள் பூஜை செய்வதால் நவராத்திரி ஆனது.பண்டிகை காலத்தில், அம்பாளை மட்டுமின்றி சிறுமியரையும் வணங்குவர். இதற்கு கன்னி பூஜை என பெயர். பெண்மை மதிக்கப்படுமிடத்தில், தவறாமல் மழை பெய்யும் என்பது ஆன்மிக விதி. இதன் அடிப்படையில் கன்னி பூஜை நடத்தப்படுகிறது. பண்டிகை நாட்களில் வீட்டில் கொலுமேடை அமைத்து, பிரதான பொம்மையாக அம்பாளை வைப்பர்.

முதல் மூன்று நாட்கள் அம்பாளை லட்சுமியாகவும், அடுத்த மூன்று நாட்கள், சக்தியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் கருதி பூஜை செய்வர். நவராத்திரி கொண்டாட்டத்துக்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன.

* தேவர்களை துன்புறுத்தினான், எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன். தேவர்கள் அம்பாளிடம் முறையிட்டனர். அவள் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் தாங்கி, ஒன்பது இரவுகள் அவனுடன் போரிட்டு அழித்தாள். போரிட்ட நாட்களில் அம்பாளை பூஜித்தனர் தேவர்கள். அதுவே நவராத்திரியானது. இது ஒரு புராணக்கதை

* பூலோகத்தில் தாமரைப் பூவில் பிறந்தாள் லட்சுமிதேவி. அலர்மேல் மங்கை என பெயர் பெற்றாள். இதற்கு, 'பூவின் மேல் அமர்ந்தவள்' என பொருள். இதனால் தான், லட்சுமியை செந்தாமரை மலருடன் வடிவமைக்கின்றனர். சீனிவாசன் என்ற பெயர் தாங்கி, திருப்பதியில் திருமால் அவதரித்த போது, ஒன்பது நாட்கள் தவமிருந்து அவரைக் கணவனாக அடைந்தாள் அம்பாள். இதனால் தான், திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்கிறது● சகல கலைகளுக்கும் அதிபதியாக விரும்பிய சரஸ்வதி, பிரம்மாவை வேண்டி, ஒன்பது நாட்கள் தவம் செய்தாள். நவராத்திரி காலத்தில் சிறப்பு பூஜை பெறும் வரத்தைப் பெற்றாள். பிரம்மாவை கணவராகவும் அடைந்தாள்

* மன்னன் சுகேதுவை, பகைவர்கள் விரட்டியதால், மனைவி சுவேதாவுடன் காட்டில் மறைந்து வாழ்ந்தான். அப்போது நவக்கிரகங்களில் ஒருவரான, குருவின் தந்தை ஆங்கிரசு முனிவரை சந்தித்தனர். அவர் தந்த அறிவுரைப்படி, இழந்த நாட்டை மீண்டும் பெற, சுவேதா முப்பெரும் தேவியரை வேண்டி, ஒன்பது இரவுகள் பூஜை செய்தாள். அவளுக்கு பிறந்த மகன் வீரனாக வளர்ந்து, எதிரியிடமிருந்து மீட்டு, நாட்டை பெற்றோரிடம் ஒப்படைத்தான்.

இதுவும் ஒரு புராணக்கதை.

நவராத்திரியை, 'கொலு திருநாள்' என்று கூறலாம். கொலு வைப்பதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியிருக்கிறது. பொம்மையை மண்ணில் செய்கின்றனர். அது உடைந்தால், மீண்டும் மண்ணாகி விடுகிறது. எங்கிருந்து வந்ததோ, அங்கேயே இணைந்து விடுகிறது. இதுபோல், மண்ணில் பிறக்கிறான் மனிதன். இறந்ததும், புதைந்து மண்ணாகி விடுகிறான். ஆக இந்த வாழ்க்கை தற்காலிகமானது. ஆனால், கொலுமேடை எப்படி அலங்கரிக்கப்படுகிறதோ, அதேபோல வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும். நல்லதை நினைக்கவும், பேசவும், பார்க்கவும், கேட்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

நவராத்திரி கொலு வைக்கும் வழக்கம், விஜயநகர ஆட்சி காலத்தில் தோன்றியது. படை பலத்தைக் காட்ட விஜயநகர மன்னர்கள், ஆயுதங்கள், குதிரைகள், யானைகள், வீரர்களின் உருவச்சிலைகளை கண்காட்சியாக அமைத்தனர். இதன் தொடர்ச்சியாக, நவராத்திரி விழா காலத்தில், மேடை அமைத்து பொம்மைகளை காட்சிப்படுத்தும் பழக்கம் தோன்றியது.

இந்த பண்டிகையை வட மாநிலங்களில், 'தசரா' என கொண்டாடுவர். இதை 'தசஹர' என்றுதான் உச்சரிக்க வேண்டும். அதாவது, 'தச' என்பது, 'பத்து' என்றும், 'ஹர' என்றால், 'அழித்தல்' என்றும் பொருள். அரக்கர்களுடன், ஒன்பது நாள் போராடி அழித்து வெற்றி பெற்ற அம்பாளைக் கொண்டாடுவதை குறிக்கிறது. இதை விஜயதசமி என்றும் சொல்வர். இதில், 'வி' என்றால், 'மேலான' என்று பொருள். 'ஜய' என்பது வெற்றியைக் குறிக்கும். மேலான வெற்றி கொண்டாட்டத்தை குறிக்கிறது. பத்து தலையுள்ள ராவணனை அழித்ததையும், தசரா என்பர். இந்த பண்டிகையின் அடிநாதமாக விளங்கும் கல்வி, செல்வம், வீரம் ஓங்கி வாழ்வை சிறப்பாக்கட்டும்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us