தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடல் கன்னி நகரம்! (7)

கடல் கன்னி நகரம்! (7)

கடல் கன்னி நகரம்! (7)


PUBLISHED ON : செப் 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்றுக்கொண்ட சிறுவன் மிகிரன், பக்கத்து ஊரில் பெரிய குளத்தில் நடந்த போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்று வென்றான். இனி -

நீச்சல் போட்டியில் வென்றதற்கு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு அளித்து, தங்கப் பதக்கத்தை மிகிரன் கழுத்தில் அணிவித்தனர் விழா குழுவினர்.

தங்கப்பதக்கத்தை கணேசனின் காலடியில் வைத்தான் மிகிரன். உடன் நின்றாள் தோழி சிற்பிகா.

''மாஸ்டர்...இது உங்களுக்கு தான்...'' என்றபடி பாதங்களில் விழுந்து, சேவித்த மிகிரனை ஆசிர்வதித்தார் கணேசன்.

''இவற்றை உன் பெற்றோரிடம் கொடு...'' என்றார்.

''மாஸ்டர்... என் பெற்றோர், நீச்சல் போட்டியை பார்க்க வரவில்லையே...''

''அதனால் என்ன... வீட்டில் இருந்தபடியே, உன் வெற்றிக்காக, கடவுளிடம் வேண்டியிருப்பர். நீ, படிப்பை விட்டுட்டு நீச்சல் பக்கம் மூழ்கி விடுவியோ என பயம்...''

''மாஸ்டர்... படிப்பும், நீச்சலும் என் இரு கண்கள்...''

''அப்படி சொல்லுடா சிங்கக்குட்டி...''

''உங்களை, என் வாழ்க்கையில் சந்தித்தது கடவுளோட அனுக்கிரஹம்...'' இடைமறித்தபடி, ''மாஸ்டர்... எனக்கொரு வருத்தம்...'' என்றாள் சிற்பிகா.

''என்னம்மா...''

''மிகிரனுக்கும், எனக்கும் ஒரே நாளில் தான், நீச்சல் கற்றுக் கொடுத்தீர்; என் நண்பன் முன்னேறி செல்கிறான். ஆனால், நான், பின்தங்கி இருப்பதாக உணர்கிறேன்...''

''சிற்பிகா... தொடர்ந்து முயற்சித்தால், நீச்சலில் பெரிதாக சாதிப்பாய்...''

''அப்படியா...''

''ஆமாம்... நீச்சல் வீரர், கேஸ்டல்டெலோ, உலகில், மிக வேகமாக நீந்தக் கூடியவர். உன்னிடம் இருக்கும், 'ஸ்டைல்' அவரை நினைவூட்டுகிறது...''

''மாஸ்டர்... உதாரணத்துக்கு கூட, சாதாரணமானவர்களை சொல்வதில்லை...''

''ஆமாம்... கற்பனையை கூட, எதுக்கு சிறியதாக செய்யணும்; பெரிய நிலையில் எண்ணி, துாண்டில் போட்டால் தானே, விண்மீன் பிடிக்க முடியும்...''

''மாஸ்டர்... நீங்கள் மிகப் பெரிய ஜாம்பவான்...''

''முயற்சி செய்தால், இங்கு அனைவரும் மிகச்சிறந்தவர்கள் தான்...'' வாத்திய கோஷ்டி இசைப்புடன், ஊர்வலமாக வீட்டுக்கு சென்றான் மிகிரன். மகன் வெற்றி பெற்று, மகிழ்ச்சியோடு வருவதைப் பார்த்து, ஆரத்தி எடுத்து, கட்டி அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் மிகிரனின் அம்மா.

''அம்மா... அப்பா... இருவரும் சேர்ந்து நின்று, என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்...'' என்றான் மிகிரன்.

மிகிரனை வாழ்த்தினர் பெற்றோர்.

''இந்தாங்கப்பா... தங்கப்பதக்கமும், 50 ஆயிரம் ரூபாய் பரிசு பணமும்...''

''மகனே... பரிசுப் பெற்ற தொகையை நீயே வெச்சுக்கோ...''

''அப்பா... இதுநாள் வரை, உங்களுக்கென எதுவும் வாங்கி கொடுத்ததில்லை. தற்சமயம், வாங்கிக் கொடுக்க, எனக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு...''

''அப்படி என்னடா அப்பாவுக்கு வாங்கித் தரப் போற...'' என்றாள் மிகிரனின் அம்மா.

''அப்பா, தபால்காரராக பணியில் சேர்ந்த நாள் முதல், ஒரு ஓட்டை மிதிவண்டியில் தான் செல்வார். அவருக்கு, ஒரு மோட்டார் வாகனம், தலை கவசம் இரண்டையும் வாங்கித் தரப்போறேன்...''

''அதிக விலை இருக்குமே...''

''இல்லம்மா... மோட்டார் வாகனம், 50 ஆயிரம் ரூபாய் தான்...''

''மகனே... இந்த பரிசு தொகையை, தபால் நிலையத்தில் உள்ள, சேமிப்பு கணக்கில், உன் பெயரில் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தலாம்...''

''அப்பா... நான், ஆசையா வாங்கி தருவதை வேண்டாம் என மறுக்காதீங்க. படிப்பு, நீச்சல் இரண்டிலும், பெரிய நிலைக்கு செல்வேன்; உங்கள் இருவரையும், நன்றாக பார்த்துக் கொள்வேன்...''

''மகனே... நீ, நன்றாக இருந்தாலே போதும்...''

''பெற்றோர், இந்த காலத்தில், குழந்தைகளிடம் இருந்து, எதுவும் எதிர்பார்க்க கூடாது என, தெளிவாக தான் இருக்கிறீர்கள். அதற்காக, உங்கள் இருவரையும், நான் அப்படியே விட முடியுமா... ''இருவருக்கும், சொந்த வீடு கட்டிக் கொடுப்பேன். வேலைக்கு சென்றதும், அப்பாவிற்கு விருப்ப ஓய்வு பெற செய்வேன். ஓய்வு காலத்தில், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இரண்டு பேரும் இருக்கணும்; நீங்க எனக்கு கொடுத்த அன்பை, பன் மடங்காக திருப்பித் தருவேன்...''

'மிகிரா... கேட்குறதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது...' என்றனர் பெற்றோர்.

''வாங்கப்பா... 'ஷோ ரூம்' சென்று, மோட்டார் வாகனத்தை, 'டெலிவரி' எடுப்போம்...''

இருவரும் புறப்பட்டு சென்றனர்.

பச்சை நிறத்தில், டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., 100 ஹெவிட்யூட்டியை தேர்ந்தெடுத்தனர்; தந்தையின் தலையில், தலைகவசத்தை அணிவித்தான்.

''இந்தாங்கப்பா... சிறு பரிசு...'' என கூறி, வண்டி சாவியை அளித்தான்.

வண்டியில் அமர்ந்து, 'ஸ்டார்ட்' செய்தார்.

''மிகிரா... வண்டியில் உட்காரு...'' என்றார்.

சீறி பாய்ந்தது மோட்டார் வாகனம். அவர் மனதில், ஆனந்தமும், திருப்தியும் கூத்தாடின. பச்சைப்பசேல் என, இருக்கும் வயல்வெளிக்கு குறுக்கே வாகனம் வழுக்கி ஓடியது.

''வண்டி ஓட்டும் போது, எப்படிப்பா இருக்கு...''

''தொடை வலிக்க, 'பெடல்' போட்டு, மிதிவண்டி ஓட்டிய காலம் போய் விட்டது; பச்சை நிற, தேசிங்கு ராஜா குதிரை வாங்கிக் கொடுத்துள்ளாய். குதிரை துள்ளி குதித்து, தாவி அல்லவா ஓடுகிறது; வண்டி வாங்கின சந்தோஷம் இருக்கட்டும். எந்நிலையிலும், படிப்பை கை விட கூடாது...''

''கட்டாயமாக உயர் கல்வி படித்து, உங்க ஆசையை நிறைவேற்றுவேன்...'' உறுதி கூறினான் மிகிரன்.

அப்போது -

'மிகிரா... வா... பாஸ்போர்ட்டும், விசாவும் இல்லாமல், எங்கள் உலகத்தை சுற்றி பார்...' என்று, வலது கையை ஆட்டி, அழைத்தது மனித உடம்பும், மீன் வாலும் உடைய ஒரு அழகிய பெண் உருவம்.

மிகிரனின் நாசியை மெல்ல தாக்கியது மீன் வாசனை.



- தொடரும்...

ஆர்னிகா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us