PUBLISHED ON : செப் 24, 2022

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, அரசு நடுநிலைப் பள்ளியில், 1974ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...
ஒரு நாள், 'புறப்பாடு' என்ற நோய் கண்டு, என் கன்னத்தின் ஒரு புறம் வீங்கியிருந்தது. அதை பொருட்படுத்தாமல், வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது, 'பாடத்தை கவனிக்காமல், வாயில் வைத்து என்ன தின்று கொண்டிருக்கிறாய்...' என கோபத்தில் அடிக்க வந்தார், வகுப்பு ஆசிரியை ஜெயந்தி.
பயத்தில் நடுங்கி அழுது விட்டேன். அருகிலிருந்த தோழி அலமு, 'கன்னத்தில் நோய் கண்டதால் வீங்கியிருக்கிறது. எதுவும் சாப்பிட முடியாத நிலையிலும் பாடத்தை கவனிக்கிறாள்...' என எடுத்துரைத்தாள்.
பரிவுடன், என் கன்னத்தை தடவியபடி வருத்தம் தெரிவித்த ஆசிரியை, இரண்டு நாட்கள் விடுப்பு தந்து, உரிய துணையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். என் வயது, 60; எப்போதாவது உடல்நிலை சரியில்லாமல் போனால், பள்ளியில் நடந்த நிகழ்வு நினைவில் வருகிறது. அந்த ஆசிரியையின் பெருந்தன்மையை வணங்குகிறேன்.
- ஆர்.சாந்தி, புதுக்கோட்டை.
தொடர்புக்கு: 91501 19159
