PUBLISHED ON : செப் 24, 2022

விருதுநகர், கே.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 11ம் வகுப்பில் தொழிற் பயிற்சியுடனான படிப்பில் சேர்ந்திருந்தேன். இளம்பிள்ளை வாத நோய் கண்டதால், என் இடது கால் பாதிக்கப்பட்டிருந்தது. நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.
முதல் மாடியில் இருந்தது என் வகுப்பு. ஒன்பது அறைகளைக் கடந்து செல்ல வேண்டும். தொழிற் பயிற்சிக் கூடம் மற்றொரு கட்டடத்தில் இருந்தது. படிகளில் இறங்கி அங்கு செல்ல வேண்டும். ஒரு நாள், தொழிற் பயிற்சிக்கு செல்ல மாடிப்படிகளில் இறங்கி கொண்டிருந்தேன். அப்போது, அப்பாவு என்ற ஆசிரியர், 'நீ எந்த வகுப்பு படிக்கிறாய்...' என்றார். விபரத்தை கூறினேன்.
மிகுந்த பொறுமையுடன், 'படியேறி இறங்க கஷ்டமாக இருக்கிறதா...' என்று விசாரித்தார். சிரமத்தை கூறி சென்று விட்டேன். அன்று, தொழிற் பயிற்சியை முடித்து, திரும்பும் முன், தரைத்தளத்துக்கு என் வகுப்பறை மாறியிருந்தது. தலைமை ஆசிரியரிடம் விபரத்தைக் கூறி, பரிவுடன் மாற்றியிருந்தார் அந்த ஆசிரியர்.
மேலும், 12ம் வகுப்பும் அதே அறையில் தான் படித்தேன். எனக்காகவே மாற்றம் செய்யப்பட்டு இருந்ததால் நெகிழ்ந்து போனேன். படித்து முடித்து, ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு குடும்பத்துடன் உணவருந்த வந்திருந்தார், தலைமை ஆசிரியர். அறிமுகப்படுத்தியபடி, 12ம் வகுப்பில் குழுவாக எடுத்திருந்த புகைப்படத்தை காட்டினேன். கண் கலங்கியபடி, குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வாழ்த்தினார்.
தற்போது, என் வயது, 43; பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுகிறேன்.
- எஸ்.மாதவன், விருதுநகர்.
தொடர்புக்கு: 88837 28969
