PUBLISHED ON : செப் 09, 2016

சென்றவாரம்: இளவரசன் இளங்குமரனை சோதிக்க கரடி வேடத்தில் வந்த தந்தை, அவனுடைய தைரியத்தை நேரில் கண்டு மகிழ்ந்தார். அரசரிடம் விடைபெற்ற இளங்குமரன், அடர்ந்த காடுகளிடையே குதிரையில் பயணித்தான். அப்போது, திடீரென ஒரு மனிதன் எதிரில் தோன்றினான். இனி-
மொட்டைத் தலையன். மழுமழுவென்ற முகம். ஒரு முடி கூட இல்லாமல், எண்ணெய் தடவியது போலப் பளபளவென்று முகமும், தலையும். தந்தை கூறியது நினைவுக்கு வந்தது இளவரசனுக்கு.
''வாலிபனே! ராஜகுமாரனைப் போல் இருக்கிறாய். ஆனால், இந்த பயங்கரமான கானகத்தில் தன்னந்தனியாகப் பயணம் செய்கிறாயே... கொடிய காட்டு விலங்குகள் தாக்கினால் என்ன செய்வாய்? இதுபோன்ற பயணங்களில் துணையோடு போவதுதான் புத்திசாலித்தனம். இக்கானகத்தின் வழிகளை நான் அறிவேன்,'' என்றான் அந்த விநோதமான மொட்டையன்.
''என் வழித்துணைக்கு நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. என் அதிர்ஷ்டத்தையும், ஆண்டவனின் ஆசியையுமே நான் துணையாகக் கொண்டுள்ளேன்,'' என்று கூறி குதிரையை முன்னேறிச் செல்லும்படி, 'சமிக்ஞை' செய்தான்.
அந்த மொட்டைத்தலை மனிதனை தாண்டியபடி சென்றது மின்னல் வீரன்.
வெகுதூரம் சென்றதும், பாதை குறுகலாக, இனி முன்னேறுவது முடியாதோ என்ற நிலையில், அதே மொட்டைத் தலையன் வழி மறித்து நின்றான். ஆனால் இப்போது அவன் வேறு மாதிரியான உடையணிந்திருந்தான். குரலையும் கூட மாற்றிப் பேசினான்.
''வருக, வருக, அழகிய வாலிபனே! இந்தப் பகுதிக்கு அந்நியன் போல் தெரிகிறாயே. எந்த நாட்டிலிருந்து வருகிறாய்?'' என்று கேட்டான் மொட்டை தலையன்.
''இந்த நாட்டுக்கு நான் புதியவன்தான் ஐயா. ஆனால், உங்களைப் போன்ற நல்லவர்கள் இருக்கும் போது எந்த நாடாக இருந்தாலென்ன?'' என்றான் இளங்குமரன்.
அந்த மனிதனின் முடியற்ற தலையும், முகமும் சற்றே உறுத்தத்தான் செய்தன. 'இந்தப் பிராந்தியத்தில் வாழும் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்களோ?' என்று சிந்தித்தான்.
அப்போது, புதியவனைப் போலத் தோற்றமளித்த மொட்டையன், பேசினான்.
''நல்லவனாக இருந்து என்ன பயன்? அதிர்ஷ்டமில்லையே! சின்ன வயதிலிருந்தே மற்றவர்களுக்காகவே உழைத்து வளர்ந்தது இந்த உடல். உழைப்பதற்கு நான் முகம் சுளிப்பதில்லை. ஏனென்றால், உழைக்கப் பிறந்தவன் நான். ஆனால், நல்ல எஜமானர்கள் எங்கே இருக்கின்றனர்? நானும் உன்னைப் போல பயணிதான்.
''என்னை உன் சகோதரன் போல் கருதலாம். உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரிகிறாய். இந்த காடு ரொம்பப் பொல்லாதது. எந்த ஆபத்து எப்போது வரும் என்று கூற முடியாது. உன் பணியாளனாக என்னை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? உன் போன்ற உயர் குடியில் பிறந்தவர்களுக்கு உதவுவதென்றால், எனக்கு ரொம்பவும் பிடிக்கும்,'' என்றான் மொட்டையன்.
தந்தையின் அறிவுரை காதில் ரீங்கரித்தது இளவரசனுக்கு.
''ஐயா, என்னை மன்னிக்க வேண்டும். நான் ஒரு போர் வீரன். தனித்தே சாகசம் புரிய நினைப்பவன்,'' என்று கூறி குதிரையை விலாவில் உதைத்து போகும்படி கூறினான்.
குதிரை மின்னல் வீரன், அந்த மொட்டை மனிதனைத் தாண்டி குதித்து சென்றது.
அடர்ந்து, செம்மி வளர்ந்திருந்த மரங்களிடையே புகுந்து, புகுந்து நெடுநேரம் பயணம் செய்தான் இளவரசன். வெளிச்சமே இல்லாமல் இருண்டு கிடந்தது கானகம். வழி வகையே தெரியாதபடி மரங்கள் நெருக்கமாக வளர்ந்திருந்தன. இளங்குமரனுக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. நகரமோ கிராமமோ, ஏன் ஒரு குடிசை கூட கண்ணில் படவில்லை.
'மொட்டைத் தலையர்களைத் தவிர வேறு மனித நடமாட்டத்தையே காணோம். யாரையாவது வழி கேட்கலாம் என்றால் இப்படியே திக்குத் திசை தெரியாமல் எத்தனை நாட்கள் பயணம் செய்வது? மொட்டைத்தலையனைத் துணைக்கு அழைத்து வந்திருக்கலாமோ? ஆனால், அப்பா எச்சரித்தாரே! ம்... இப்படி எல்லாரையும் சந்தேகப்பட்டு நம்பாமல் கைவிட்டால் எப்படி? சட்டி சுட்டதென்று துள்ளிப்போய் நெருப்பில் விழுந்த கதையாகிவிட்டால் என்ன செய்வது?' இப்படியாகச் சஞ்சலப்பட்டு இத்தனை நேரம் வந்த வழியை விட்டு, வேறு ஒரு ஒற்றையடிப்பாதையில் சென்றான். அந்தப் பாதையும் பீதியூட்டும்படி அமைதி நிறைந்தாக இருந்தது. பறவைகளின் ஓசையைக் கூடக் காணோம்.
இந்த இக்கட்டான வேளையில் இளவரசனுக்கு, மாயக் குதிரையான மின்னல் வீரன் ஏன் உதவவில்லை என்ற சந்தேகம் வருகிறதல்லவா உங்களுக்கு?
அரசர் அதன் சக்தியை கட்டிப்போட்டுவிட்டார். குதிரையின் மாய சக்தியால் கஷ்டங்களையும், சோதனைகளையும் சமாளிக்க முனைந்தால் தன் மகனிடம் முயற்சி இராது; துணிவு பிறக்காது; வீரம் வளராது; சகிப்புத்தன்மை ஏற்படாது என்று கருதினார் கந்தர்வபுரி மன்னர். ஆகவே, குதிரையை தட்டிக் கொடுத்து தடவி விடை தரும் போது, அதன் காதோடு ஒரு கட்டளையும் இட்டார்.
'மின்னல் வீரா! என் மகனை வீரனாக்கு. அடிக்கடி அவனுக்கு உதவி செய்யாதே! கஷ்டங்களையும், பிரச்னைகளையும் அவனே சமாளிக்கட்டும். சோதனையான வேளையில் அவனே முடிவு எடுக்கட்டும். அவனால் இயலாது என்ற போது மட்டும் நீ உதவினால் போதும்' என்று கூறி இருந்தார். அவர் வளர்த்த குதிரையாயிற்றே, அவர் பேச்சைக் கேட்காமல்இருக்குமா?
மற்றொரு பாதையும் மயக்கம் தரும்படி இருந்ததைக் கண்டு செய்வதறியாது தவித்தான் இளவரசன்.
அப்போது தூரத்தில் தட் தட் தடக்... ஓசை கேட்டது. இளவரசனுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி.
'அப்பாடா! யாரோ வழிபோக்கர் போலிருக்கிறது. நல்லவேளை! அவர் உதவியை நாடலாம்' என்று நிம்மதிப்பட்ட போது குதிரை அவனை நெருங்கி வந்தது. அதன் மீது ஒரு மனிதன். ஆனால்...
அவனும் மொட்டைத் தலையன்தான்! மழுமழு தலையிலும், மொழு மொழு முகத்திலும் ஒற்றை முடிகூட கிடையாது! வித்தியாசமான உடையில் குதிரை மீது வந்திருந்தது அதே பழைய மொட்டையன்தான்! ஆனால், இவன் வேறு ஆள் என்று இளவரசன் எண்ணினான்.
''அப்பாவி இளைஞனே! தவறான பாதையில் செல்கிறாயே. நல்லவேளை, கண்ணில் பட்டாய். உன்னை எச்சரிக்கவே ஓடோடி வந்தேன். இந்தப் பாதையில் சென்றால் செங்குத்தான மலையுச்சியிலிருந்து தலைகுப்புற விழுந்து மடிய வேண்டியதுதான். இதோ இந்த வழியில் போனால், பயங்கரமான மூர்க்க குணங்கொண்ட காட்டெருமைக் கூட்டத்தில் போய் சிக்கிக் கொள்வாய்.
''அவற்றிடமிருந்து தப்பவே முடியாது. நீ இந்தப் பக்கத்துக்கு புதியவன் போலிருக்கிறது. அதனால்தான் வழி தெரியாமல் தடுமாறுகிறாய். நீ விரும்பினால் உனக்குத் துணையாக, உதவியாக என்னை அமர்த்திக் கொள். இந்தப் பகுதியிலுள்ள எல்லா இடங்களும் எனக்குத் தெரியும்,'' என்றான் மொட்டைத் தலையன்.
தன்னந்தனியனாகத் தவித்து குழம்பிப் போயிருந்த இளவரசன் இளங்குமரனுக்கு, அந்த மொட்டையனின் பேச்சு ஆறுதலாக இருந்தது.
''ஐயா... நீங்கள் சொல்லுவது உண்மைதான். நான் இந்தப் பக்கத்துக்கு புதியவன்தான். என் உதவிக்கு துணையாக ஒரு ஆள் வேண்டுமென்றும் விரும்புகிறேன். ஆனால், என் தந்தை கூறிய ஒரு விஷயம்தான் அதற்கு குறுக்கே நிற்கிறது. உங்களிடம் உண்மையைக் கூறுகிறேனே.
''நான் ஊரிலிருந்து புறப்படும்போது என் தந்தை எச்சரித்து அனுப்பினார். செம்பட்டை முடி உள்ளவர்களையும், முகத்திலோ, தலையிலோ முடியே இல்லாதவர்களையும் நம்பாதே. நெருங்கிவிடாதே என்று. நீங்கள் மட்டும் இப்படி மொட்டை தலையாகவும், மழுமழு முகமாகவும் இல்லாதிருந்தால் உங்களையே என் உதவியாளராக ஏற்றுக் கொள்வேன்,'' என்றான்.
இதைக் கேட்டதும், அந்த மொட்டையன் கடகட வென்று சிரித்தான்.
- தொடரும்...
