PUBLISHED ON : செப் 09, 2016

திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டி தாலுக்காவில் உள்ள இனாம் மணியாட்சி கிராமத்தில், அங்குள்ள ஆரம்பப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 'நம் ஊருக்கு நேரு மாமா வருகிறார். ஆகையால், எல்லாரும் கோவில்பட்டிக்குச் செல்ல வேண்டும். நாளை காலை, எல்லாரும், 8:00 மணிக்கு வகுப்பிற்கு வந்து விடுங்கள். நாம் அனைவரும் அங்கு செல்ல வேண்டும்' எனக் கூறினார் ஆசிரியர்.
மறுநாள் காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு சென்று, அங்கிருந்து நேருமாமாவைப் பார்க்கச் சென்றோம். 10:00 மணி அளவில் நேரு மாமா திறந்தவெளிக்காரில் வந்து கொண்டிருந்தார். எல்லாரும் அவருக்கு ரோஜா மாலைகள் அணிவித்தனர்.
காரில் போய்க் கொண்டிருந்தபோது, அவருடைய கழுத்தில் விழுந்த ஒரு ரோஜா மாலையை எடுத்து சிறுமியர்களாகிய எங்கள் பக்கம் வீசினார். அந்த மாலை என் பக்கத்தில் இருந்த லட்சுமி என்ற சிறுமியின் கழுத்தில் விழுந்தது.
நேரு மாமா சென்றவுடன், அந்த சிறுமியை எல்லாரும், 'நேரு பொண்டாட்டி... நேரு பொண்டாட்டி...' என கேலி செய்தோம்.
அவளோ, வெட்கப்பட்டு தலை குனிந்தாள். இச்சம்பவத்தை, இன்று நினைத்தாலும், சிரிக்க தோன்றும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
-டி.சீதாலட்சுமி, கோயம்புத்தூர்.
