PUBLISHED ON : செப் 09, 2016

சிவகாசியில் உள்ள எஸ்.சி.எம்.எஸ்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, நடந்து செல்வேன். வழியில் ஒருவரின் வீட்டின் முன், சில வேண்டாத செடிகளை பிடிங்கி வெளியே போட்டிருந்தனர். வேரோடு இரண்டு செடிகளை எடுத்து என் பள்ளியின் நுழைவு வாசலில் நட்டு வைத்தேன்.
பள்ளி படிப்பு முடிந்து, விருதுநகரில் திருமணமாகி சென்றுவிட்டேன். பத்து வருடத்திற்கு பின், குடும்பத்தாருடன் ஒரு திருமணத்திற்குச் சென்றேன்.
என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று, 'இதுதான் நான் படித்த பள்ளி!' என்று கூறினேன். மரம் ஓங்கி வளர்ந்திருந்தது. வியப்புடன், குழந்தைகளுடன் வகுப்பு ஆசிரியரைச் சந்தித்தேன். எங்களைப் பார்த்து மிகுந்த மிகழ்ச்சியுடன், 'நீ வச்ச செடிதான் இவ்வளவு பெரிய மரமாகி உள்ளது' என்றார்.
'இது என்ன மரம் மிஸ்!' என்று கேட்டேன்.
'நெட்டு லிங்க மரம், இது அசோகர் நாட்டியதால், 'அசோக மரம்' என்று பெயர் வந்தது' என்றார்.
மூலிகை நிறைந்த மரம் என்று ஆசிரியையிடம் மீண்டும் பாடம் கற்றுக் கொண்டதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைகள் வீட்டில் வந்து, 'நாமும் மரம் நடுவோம்' என்று கூறினர்.
பழமையுடன் பசுமையான நினைவுகளை மீண்டும் சிறுவர்மலர் ஸ்கூல் கேம்பஸ் வழியாக அசை போட செய்தமைக்கு பலகோடி நன்றிகள்!
-பி.ஜெயலட்சுமி, அல்லம்பட்டி.
