
சந்தனகிரி என்ற ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவருக்கு நல்ல மனைவியும், அழகான ஒரு பெண் குழந்தை யும் இருந்தனர். குழந்தையைப் பார்த்தவர்கள் அதன் அழகு கண்டு மயங்கினர். சித்திரப் பதுமை போல அழகாக விளங்கியதால் அதற்கு, 'சித்ரா' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
ஒரு சமயம் திடீரென்று சித்ராவின் அம்மாவிற்குக் காய்ச்சல் வந்தது. அவ்வூரிலிருந்த மருத்துவர்கள் மருந்து கொடுத்தனர். ஆனால், அவள் வாய் பிதற்ற ஆரம்பித்தாள். பிறகு ஜன்னி ஏற்பட்டு இறந்து விட்டாள். சித்ராவிற்கு அழுதழுது கன்னங்கள் வீங்கி விட்டன. அவள் அப்பாவும், மனைவி இறந்த துக்கத்தால் மிகவும் இளைத்து விட்டார். சரியாகச் சாப்பிடவும் அவரால் முடியவில்லை. மனக்கவலையால் இருவரும் வாடினர்.
சித்ராவும், அவள் அப்பாவும் சிறிது கூட மகிழ்ச்சியாக இல்லாமல் எப்போதும் வருத்தப் பட்டுக் கிடப்பதை அவர்களுடைய உறவினர் கள் கண்டனர். இருவரையும் பார்த்துக் கொள்ள அவர் மறுமணம் செய்துகொள்ள வேண்டு மென்று யோசனை சொன்னார்கள். அதன் படியே, அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. சித்ரா தன்னுடைய இரண்டு தங்கைகளிடமும் மிகவும் அன்பாகவும், பிரியமாகவும் நடந்து கொண்டாள். ஆனால், அவளுடைய சின்னம்மா தன்னுடைய இரண்டு பெண்கள் மீதே மிகவும் அக்கறை காட்டினாள். சித்ரா வீட்டிலிருப்பதை வெறுத்தாள். அவளைத் திட்டிக் கொண்டே இருந்தாள்.
சித்ராவின் அப்பா அதைக் கண்டு வருத்தமுற்றார். மூத்த மகளிடமும் அன்பு காட்டுமாறு கூறினார். ஆனால், அவளோ அன்பு காட்டுவதற்குப் பதிலாக மேலும், சித்ராவை துன்புறுத்தினாள். இதனால் அவர் கவலை மிகுந்து உடல் நலம் குறைந்து நோய்வாய்ப்பட்டுச் சீக்கிரம் இறந்துவிட்டார்.
சித்ரா அனாதையானாள். அவளை அன்புடன் நேசிக்க இவ்வுலகில் யாரும் இல்லை. சின்னம்மாவைத் தவிர இவ்வுலகில் அவளுக்கு ஆதரவு சொல்பவர் யாரும் கிடையாது. ஆகவே, அவ்வீட்டில் ஒரு வேலைக்காரியைப் போலத் தன் வாழ்க்கையை நடத்தினாள்.
இரவு படுக்கும்போது ஒவ்வொரு நாளும் தன் தாயையும், தந்தையையும் நினைப்பாள். ஆடிப்பாடி மகிழ்ந்து அவர்களுடன் கொஞ்சிக் குலாவி இன்புற்றதை எண்ணுவாள். தாய், தந்தை இல்லாத நிலையில் தான் படும் துயரங்களை எண்ணுவாள். அவள் கண்களிலே கண்ணீர் வழிந்து ஓடும். அழுதுகொண்டே தூங்கிவிடுவாள்.
சில ஆண்டுகள் சென்றன-
சிறுமி சித்ரா வளர்ந்தாள். தன்னைப் போன்ற பெண்கள் அழகான உடை உடுத்திக்கொண்டு, உல்லாசமாக ஊர் சுற்றுவதைப் பார்ப்பாள். தான் கட்டியிருக்கும் கந்தையையும், அதில் படிந்துள்ள அழுக்கை யும் காண்பாள். தன் பெற்றோரையும் கடவுளை யும் எண்ணி ஆறுதல் பெறுவாள்.
திடீரென்று ஒருநாள் சின்னம்மா சித்ராவை அழைத்தாள்.
''நீ பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாய். திருமணம் ஆனால் நீ எப்படி வாழ்க்கை நடத்து வாய்? ஒட்டடை அடிக்கத் தெரியவில்லை, சாமானைத் துலக்கினால் கன்னங்கரேலென்று இருக்கிறது!
''துணியைத் துவைத்தால் பழுப்பு நிறம் மாறாமல் இருக்கிறது. என்ன பிரயோசனம்? நீ எப்படி ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு குடும்பம் நடத்துவாய்? ஒன்றுமே தெரியவில்லையே! பிள்ளை வீட்டார் நாளைக்கு என்னைத் தானே சபிப்பார்கள்! பெண்ணை வளர்க்கத் தெரியவில்லையே... என்று என்னத்தானே கேட்பார்கள்!''
இவ்வாறு ஒரு நீண்ட பிரசங்கம் செய்தாள். சித்ராவின் மூச்சே வெடித்து விடும் போலிருந்தது. ஒன்றும் பேசாமல் மவுன மாகவும், பொறுமையுடனும் கேட்டுக் கொண்டாள்.
அன்று இரவும் வழக்கம்போலத் தூங்கு வதற்கு முன்பு பெற்றவர்களை நினைத்தாள்.
'சுடுசொல் சொல்லிக் கேட்டதே இல்லை. எத்தனை அன்பாகவும், பிரியமாகவும் என் பெற்றோர் இருந்தனர். என் குறையை நான் யாரிடம் சொல்வேன்? நான் செய்கிற வேலை களில் தவறுகளையே அதிகமாகச் சொல் கிறார்களே!
இரவு பகலாய் பாடுபட்டுக் கைகால்கள் எல்லாம் ஓய்ந்து போகிறதே! கடவுளே! இந்த ஏழை மீது எப்போது உனக்குக் கருணை தோன்றும்?' என்று மனத்திற்குள்ளே வினவுவாள்.
என்றாவது ஒரு நாள் கடவுள் தோன்றுவார், நல்லவழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொண்டே தியானிப்பாள். பிறகு தூங்கிவிடுவாள்.
சித்ராவின் இரண்டு தங்கைகளும் எட்டு மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுந்து கொள்வர். பல் விளக்காமலேயே சுவைநீர் குடிப்பர். பெரிய பெண், ''வெந்நீர் கொண்டு வந்து வை,'' என்று கட்டளையிடுவாள்.
சிறியவள், ''என் துணிகளைத் துவைத்துப் போடு,'' என்பாள். இதற்கு இடையே சின்னம்மா, ''எனக்குப் பசி எடுக்கிறது. இன்னுமா சிற்றுண்டி ஆகவில்லை?'' என்று கேட்பாள். சித்ரா ஓடி ஓடி வேலை செய்வாள். அவளை எல்லாரும், ''சோம்பேறி நாயே! தரித்திரம் பிடித்தவளே!'' என்று பட்டம் சூட்டித் திட்டிக் கொண்டே இருப்பர்.
அவர்கள் வீட்டிற்கு வந்து போகிற விருந்தாளிகள் பலர், அவர்கள் சின்னம்மா வின் பெண்கள் அடக்கமில்லாமல் கண்டபடி பேசுவதையும், அமைதியே உருவான சித்ரா அதைப் பொறுமையுடன் கேட்டுக் கொள் வதையும் கவனிப்பர். வீட்டை விட்டுப் புறப் படும்போது, 'சித்ரா மிகவும் அழகான பெண். பண்புடன் நடந்துக் கொள்ளும் புத்திசாலி' என்று புகழ்ந்து சொல்வர். அவ்விரண்டு பெண்களுக்கும் இதைக் கேட்கச் சகிக்காது.
மேலும், கந்தைத் துணியையும், அதிக வேலையையும் கொடுத்து, அவள் அழகு குலைந்து, பார்ப்பதற்கு அருவருக்கத்தக்கவ ளாக மாற வேண்மென்று நினைத்தனர். ஆகவே, அவளைக் கரியும், சாம்பலும் கொட்டிக் கிடந்த குப்பைக்கு அருகில் தூங்கும்படி செய்தனர்.
தூங்கும்போது முகத்தில் கறுப்புப் புள்ளிகளையும், சிவப்புப் புள்ளிகளையும் குத்தி, பொழுது விடிந்ததும் அவளைப் பார்த்துக் கேலி செய்து சிரித்து மகிழ்வர். இக் கொடுமையையும் சித்ரா தாங்கிக் கொள்வாள்.
தூங்கி எழுந்தவுடன் சித்ரா தோட்டத் துக்குச் செல்வாள். கிணற்றிலிருந்து வாளியில் நீர் எடுப்பாள்; பிறகு தோட்டத்துச் செடி களுக்குத் தண்ணீர் ஊற்றுவாள்; அவள் வரவு கண்டு மகிழ்ந்து ஆடுகின்ற அழகிய மலர் களைப் பார்ப்பாள்; அம்மலர்கள் சூரியனை நோக்கி விரிந்து மலர்வதைக் கண்டு மகிழ் வாள். இருண்ட வானத்தில் சூரியன் தோன்றி இருள் நீங்குவது போலத் தன் வாழ்க்கை யிலும் ஒளி ஏற்படும் என்று நம்புவாள்.
மலர்களை நாடி வண்டுகள் எங்கெங் கிருந்தோ பறந்து வருவதைப் பார்த்து, நம்மைத் தேடியும் யாராவது வரலாம் என்று அப்பேதை எண்ணுவாள். தோட்டத்தில் ஒரு மூலையில் தண்ணீர் சிறிய குட்டையைப் போல் தேங்கியிருந்தது. அங்கே சில தவளைகள் இருந்தன.
அத்தவளைகளை அவள் தினமும் பார்த்து மகிழ்வாள். படபடவென்று இறக்கைகள் விரிந்து அடித்தபடி பறந்து செல்லும் பல பறவைகளைக் கண்ட போதெல்லாம், 'நாமும் ஒரு பறவையாக இருந்தால், வேதனையில்லா மல் சுதந்திரமாகப் பல இடங்களுக்கும் பறந்து செல்லலாம் அல்லவா?' என்று ஏங்குவாள்.
கிணற்றின் மேல் ஏறிச் செல்லும் பல்லிகள் கூடச் சித்ராவை ஒரு கணநேரம் நின்று பார்த்துச் செல்லும். வளைகளிலிருந்து ஓடி வரும் எலிகள் தண்ணீர் குடித்துக் கொண்டே அத்தண்ணீரைப் பாய்ச்சும் சித்ராவை ஓரக் கண்களால் பார்த்தவாறு ஓடும்.
அன்றாடம் பூக்கும் புதுமலர்கள், அவற்றைத் தேடும் வண்டுகள், மரத்தில் காய்த்துக் கனிந்து தொங்கும் பழங்கள், இப்படிப் பலவற்றைப் பார்த்தவாறு சித்ரா ஆறுதல் அடைவாள். சின்னம்மாவும், இரண்டு தங்கைகளும் தவிர, தோட்டத்துக்கு வரும் அனைத்து உயிரினங்களும் அவளையே நேசிப்பதாகக் கருதினாள்.
வீட்டின் பின்புறம் சுண்ணாம்பு பூசிய சுவரில் சித்ரா தன் கற்பனையால், பல படங்களை வரைவாள். அதிலே, அழகிய அரண்மனைகள் இருக்கும். அற்புதமான கோட்டையும் காணப்படும். அங்கே கம்பீரமாகக் கொடியும் பறக்கும்.
வீரர்கள் குதிரைகளின் மீது ஏறிச் செல்வது போல வரைந்திருப்பாள். அன்றாடம் இப்படி வரைகிற படங்களைப் பார்த்து அவளது சின்னம்மாவிற்கே ஆச்சரியமாகப் போய் விடும். தன்னையும் அறியாமல் சித்ராவை அவள் பாராட்டிவிடுவாள்.
தன் வீட்டு வாசலைப் பெருக்கிச் சாணமிட்டுச் சித்ரா வரையும் கோலங்களைப் பார்த்து அந்தத் தெருவிலிருக்கும் பெண்கள் யாவரும் ஆச்சரியப்படுவர். அவள் போடு கின்ற கோலங்களைப் பார்க்கிறவர்கள் ஒரு நிமிடம் நின்று அதில் உள்ள சித்திரங்களைப் பார்த்துப் பரவசமடையாமல் செல்ல முடியாது.
இவ்வாறு அவள் தரையில் வரையும் கோலங்களின் புகழ் ஊரெங்கும் பரவியது. ஆகவே, அடிக்கடி பல பேர் சித்ராவின் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். சித்ராவின் தாயார் தன் பெண்கள் மூவருமே சேர்ந்து இச்சித்திரங்களை வரைந்தனர் என்று சொல்வாள். உடனே வந்தவர்கள் அந்த வீட்டில் உள்ள மூன்று பெண் களையுமே பாராட்டிச் செல்வர்.
சுவர் மீது வரையப்படும் சித்திரங்களும், மிக நன்றாக இருக்க, வந்தவர்கள் அவர் களுடைய வீடு முழுவதை யுமே பார்த்து செல்ல ஆசைப்பட்டனர். சுவரில் சிலந்தி கட்டுகின்ற கூண்டைப் பார்த்த சித்ரா, தானும் அவ்வாறே ஊசியையும், நூலையும் கொண்டு பல வற்றைப் பின்னினாள். வாயிற் படியையும், ஜன்னலையும் தன்னுடைய கைத்திறன் விளங்கும் வேலைப்பாட்டால் அழகுப்படுத்தினாள்.
சித்ராவின் திறமை நாளுக்கு நாள் வளர்ந்தது. அவள் புகழ் ஊரெங்கும், நாடெங்கும் பரவியது.
அந்த ஊர் இளவரசன் சித்ராவின் திறமை களை பற்றி கேள்விப்பட்டான். ஆனால், அதேசமயம் சித்ரா அவளுடைய சின்னம்மா வின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு அடைப் பட்டுக் கிடக்கிறாள். சின்னம்மாவைத் திருப்திப்படுத்தி, அவள் உத்தரவு கிடைத் தால்தான் சித்ராவைப் பார்க்கவோ, பேசவோ முடியும் என்பதையும் அவன் அறிந் திருந்தான். இருந்தாலும் இளவரசன், எப்படி யாவது அவளைச் சந்திக்க விரும்பினான்.
ஒருநாள் இளவரசன், மாறுவேடம் போட்டுக் கொண்டு அவர்கள் ஊருக்கு வந்தான். தெருத் தெருவாக நடந்து சென்றான்.
- தொடரும்.

