PUBLISHED ON : நவ 18, 2011

சந்துருவுக்கு தாய் தந்தை இருந்தும் அனாதை போன்ற நிலை. வறுமைதான் காரணம். சந்துருவின் தாய் ஒரு வீட்டில் வேலைசெய்து பிழைக்க வேண்டிய நிலை. எனவே, ஹாஸ்டலில் சேர்த்து விட்டார் தாயார்.
ஹாஸ்டலில் உணவு, உடை, புத்தகம் எல்லாமே இலவசம். விடுமுறை விட்டால் ஒரு சில மாணவர்களின் பெற்றோர் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வர். சந்துருவை மட்டும் யாரும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். விடுமுறையில் அவன் மட்டும் ஹாஸ்டலில் தனியே இருப்பான்.
'என்னை படைத்த ஆண்டவா... என்னோட அம்மா அப்பாவை நான் பார்த்த தில்லை. நான் கைக்குழந்தையாக இருக்கும்போதே என்னை விட்டு விட்டு ஓடிவிட்டனர். நீதான் எனக்கு அப்பா, அம்மா, எல்லாமே... இந்த ஹாஸ்டலில் இருக்கிறேன். என் வாழ்க்கையை நீதான் காப்பாத் தணும்' என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டான்.
அந்த முறை பள்ளிக்கு லீவு விட்டனர்.
சந்துருவுடன் படிப்பவன் சுரேஷ். பணக்கார வீட்டுப் பையன், அவன் வீட்டில் தோட்டக்காரன், சமையல்காரன்; வீட்டு வேலைக்காரன்; கார் டிரைவர் என்று பணியாளர்களே நாலைந்து பேருக்கு மேல் இருப்பர்.
''சந்துரு விடுமுறைக்கு எங்கள் வீட்டுக்கு வந்துவிடேன்.என் அப்பா, அம்மாவிடம் சொல்லி அனுமதி வாங்கிவிடுகிறேன். ஒருமாத லீவையும் என் வீட்டிலேயே கழிக்கலாம்,'' என்று அழைப்பு விடுத்தான் சுரேஷ்.
''உனக்கு எதுக்குடா சிரமம்?'' என தயங்கினான் சந்துரு.
''இதுல சிரமமேயில்லை. வீட்டில் சமையற்காரர் இருக்கிறார். தனியாக அவுட் ஹவுஸ்' கார்ஷெட் என்று இருக்கிறது. குளித்துத் துணி துவைத்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டுக்குள் வராமலே நீ இருந்து கொள்ள வசதி உண்டு,'' என்று சொல்லி சந்துருவை அழைத்து வந்தான்.
சுரேஷ் தன் தாய், தகப்பன், அண்ணன், தம்பி, தங்கைகளிடம் அவனை அறிமுகப் படுத்தி வைத்தான்.
''இது உன் வீடு மாதிரி நினைத்துக் கொள். கூச்சப்படாதே... என்னவேண்டுமானாலும் சுரேஷிடம் தயங்காமல் கேள்,'' என்று சுரேஷின் பெற்றோர் கூறினர்.
சுரேஷின் தந்தை நகரில் பெரும் வர்த்தகர். பல வியாபாரங்கள் உண்டு. ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது.
சந்துருக்கு சுரேஷ் வீட்டு வாசம் ஒரு புதிய அனுபவம். ஒரு குறையும் இல்லை. வீட்டில் சுரேஷ் குடும்பத்தினருடன் அமர்ந்து 'டிவி' பார்க்க முடிந்தது. நிறைய புத்தங்களை படிக்க முடிந்தது.
சந்துரு தன்னால் முடிந்த உதவிகளை அந்த வீட்டிற்கு செய்து வந்தான். சமையறையில் சமைத்த உணவுப்பொருட்களை டைனிங் டேபிளில் எடுத்து வைப்பதும், சாப்பிட்ட பின் பாத்திரங்களை மீண்டும் சமையலறையில் எடுத்து வைப்பதுமாக சமையற்காரருக்கு உதவியாக இருந்தான்.
வீட்டைப் சுற்றி நிறைய பூச்செடிகள் பூத்துக் குலுங்கும். சந்துரு அவ்வளவையும் பறித்து பூஜைக்கு கொடுப்பான்.
சுரேஷ் குடும்பத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டான் சந்துரு.
''ரொம்ப தேங்க்ஸ் சுரேஷ். நாளை பள்ளிக்கூடம் திறக்க போகிறார்கள். நான் ஹாஸ்டலுக்கே சென்று விடுகிறேன். உங்கப்பாவை பார்த்து தேங்க்ஸ் சொல்ல வேண்டும்,'' என்றான் சந்துரு.
''இனி நீ ஹாஸ்டலுக்கு செல்லவேண்டாம்; எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குப் படிக்க செல்லலாம். இப்போது நீ அனாதையல்ல... நாங்கள்தான் இருக்கிறோமே,'' என்று ஹாஸ்டலுக்குச் செல்வதைத் தடுத்துவிட்டார் சுரேஷ் குடும்பத்தினர்.
சந்துரு அவர்கள் வீட்டிலேயே தங்கி படித்து எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் செய்தான். அவர்களுக்கு தெரிந்தவர்கள் கம்பெனியில் சந்துருவுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்து விட்டனர் சுரேஷ் குடும்பத்தினர்.
சந்துரு அவர்கள் வீட்டிலேயே தங்கி வேலைக்குப் போய்வருகிறான்.
சுரேஷ் கல்லூரியில் படித்து வருகிறான். இருந்தும் தினமும் ஒருமுறை சந்துருவை சந்தித்து அவன் தேவைகளை பற்றிக் கேட்டுக் கொள்வான்.
''நான் மோட்டார் பைக் வாங்கி விட்டேன். என் சைக்களில நீயே பயன்படுத்திக்கொள்,'' என்று சங்கர் தன் சைக்கிளையும் சந்துருவுக்கு கொடுத்துவிட்டான்.
பள்ளித்தோழன் இப்படி வாழ்க்கை தோழனாக விளங்குவான் என்று சந்துரு கனவில் கூட நினைக்கவில்லை.
தனக்கு பெற்றோர் ஆதரவும் இல்லாத நிலையிலும் நண்பன் மூலம் எல்லா நலங்களையும் வழங்கிய இறைவனை மனதார நினைத்து, 'நன்றி' சொல்வான் சந்துரு.
***
