தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெட்டி வேலை!

வெட்டி வேலை!

வெட்டி வேலை!


PUBLISHED ON : அக் 31, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ணைபுரத்தில் வசித்து வந்தான் குணசேகரன். சாதுக்கள், துறவிகளிடம் பற்றுதல் கொண்டவன்; அவர்களுக்கு சேவை செய்வதை பாக்கியமாக கருதினான்.

அவனிடம் ஒரு குறை இருந்தது.

எந்த பணி என்றாலும் மிகவும் ஆர்வம் காட்டுவான். ஆனால், எதை எடுத்தாலும் முழுமையாக செய்து முடிக்க மாட்டான்; திருப்தியின்றி தவிப்பான். பின், புதிய விஷயம் எதைக் கண்டாலும், அதை நோக்கி தாவிவிடுவான். இப்படி எதிலும் முழுமை காணாமல் தவிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான்.

ஒருமுறை -

மதிப்புமிக்க துறவி அந்த ஊருக்கு வந்தார். அவரை தேடி சென்று பணிந்தான். ஆர்வமாக வீட்டிற்கு அழைத்து வந்தான். வணங்கி பணிவிடைகள் செய்தான். சிறந்த உணவு தயாரித்து கொடுத்தான் குணசேகரன்.

அவன் உபசரிப்பில் மகிழ்ந்த துறவி, 'மகனே... உன் வாழ்க்கை நலம் பெறட்டும். என்னிடம் விரும்பியதை கேள்...' என்றார்.

'சுவாமி... சித்து வேலைகள் பற்றி கேள்வி பட்டுள்ளேன். உங்களைப் போன்ற ஞானிகள் இது போன்ற வித்தைகள் செய்வதாக அறிவேன். அதைக் கற்றுத்தர வேண்டுகிறேன். சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதவற்றை, சித்து என்ற தந்திரத்தால் நிறைவேற்றி புகழ்பெற எனக்கு அருள் புரிய வேண்டும்...'

'பல காலம் தவமிருந்து, கடும் பயிற்சிகளுக்கு பின், சித்து எனும் சக்தியை பெற்றுள்ளேன். முழு மனதுடன் உயரிய பண்புகளை கடைபிடித்தால் மட்டுமே கற்று பயன்படுத்த முடியும். பயிற்சியின்றி முயன்றால் விளைவு மோசமாகும். நன்றாக சிந்தித்து செயல்படு. உன் விருப்பதைக் கெடுக்க விரும்பவில்லை...'

'பரவாயில்லை... முயற்சிக்கிறேன்...'

'இதோ, இந்த ஓலைச் சுவடியில் சித்து விளையாட்டு பற்றிய குறிப்புகள் உள்ளன. கவனமாக படித்து, முறையாக நிறைவேற்ற முயற்சி செய்...' என்றார் துறவி.

ஆர்வமாக வாங்கி மேலோட்டமாக படித்தான் குணசேகரன். அந்த ஓலைச்சுவடியை, முறையாக பாதுகாக்காமல் ஒரு மூலையில் போட்டிருந்தான்.

அது, திடீர் என காணாமல் போனது.

பகீர் என்றாகி விட்டது.

வீடெல்லாம் தேடி பார்த்தான்; எங்கும் காணவில்லை.

'இரவில் எலிகள் இழுத்து சென்றிருக்கலாம்' என எண்ணி வருந்தினான்.

'போனது போகட்டும்; படித்தறிந்தவற்றை மட்டும் மக்களிடம் நிகழ்த்தி புகழ் பெறலாம்' என எண்ணியபடி, காட்டு வழியாக சென்றான்.

வழியில், சிங்கத்தை கூண்டில் அடைத்து, வண்டியில் ஏற்றி வந்தனர் வேட்டைக்காரர்கள்.

கூண்டிலிருக்கும் மிருகத்தை வெளிக்கொண்டு வரும் சித்து விளையாட்டு பற்றி ஓலைச் சுவடியில் படித்தது நினைவில் வந்தது. அதை சோதித்து பார்க்க விரும்பி, மந்திரத்தை உச்சரித்தான் குணசேகரன்.

அடுத்த கணம் -

கூண்டிலிருந்த சிங்கம், பயங்கர கர்ஜனையுடன் வெளியே பாய்ந்தது. ஆக்ரோஷம் கொண்டது. அதை அடக்க முடியவில்லை. வேட்டைக்காரர்களில் ஒருவன் மீது தாவியது. தப்ப முடியாதவன், தாக்குதலால் காயம் பட்டு இறந்தான்.

உடனிருந்த மற்ற வேட்டைக்காரர்கள், மிகக் கடினமாக முயன்று, சிங்கத்தை மறுபடியும் கூண்டில் அடைத்தனர்.

போராடி களைத்து பலவீனமாக இருந்த வேட்டைக்காரர்களிடம், 'என் மந்திர சக்தியால் சிங்கத்தை கூண்டிலிருந்து வெளியே வரச் செய்தேன்; மீண்டும் வெளியே வரவழைக்கட்டுமா...' என்று மார் தட்டினான் குணசேகரன்.

'ஐயா... நீங்கள் மந்திர வித்தையில் மிகவும் பலம் பொருந்தியவர் என்பதை கண்டோம். நாங்கள் மிகக் கடினமாக உழைத்து சிங்கத்தை பிடித்து கூண்டில் அடைத்துள்ளோம். உங்கள் சித்து வேலையை எங்களிடம் காட்ட வேண்டாம்...' என்றான் ஒரு வேட்டைக்காரன்.

'என் சித்து அறிவின் பலத்தை நீங்கள் அறிய வேண்டாமா... சற்று பொறுமையாக ஒதுங்கியிருங்கள்...' என்றான் குணசேகரன்.

'அறிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை ஐயா... உங்கள் சாகசத்தால், உடன் வந்த நண்பனை கொன்றுவிட்டது சிங்கம். இனியும் விளையாடாமல் உங்கள் வழியே போங்கள். இல்லாவிட்டால், விபரீதத்தை சந்திக்க வேண்டியிருக்கும்...'

எச்சரிக்கையை பொருட்படுத்தாத குணசேகரன், மீண்டும் சிங்கத்தை வெளியேற்றும் மந்திரத்தை உச்சரிக்க துவங்கினான்.

கடும் கோபம் கொண்ட வேட்டைக்காரர்கள், 'உன்னைச் சும்மா விட மாட்டோம்...' என்று நையப் புடைத்தனர். மந்திரம் உச்சரிக்க முடியாமல் மயக்கி விழுந்தான் குணசேகரன்.

சிங்கத்தை அடைத்திருந்த வண்டியை இழுத்தபடி விரைந்தனர் வேட்டைக்காரர்கள்.

வெகுநேரத்திற்குப் பின், கண் விழித்தான் குணசேகரன். நடுக்காட்டில் இருப்பதை உணர்ந்தான்; உடல் முழுவதும் வலி. உணவும் கிடைக்கவில்லை.

கொடிய மிருகம் தாக்கி விடும் என்ற பயம் வேறு. பதட்டத்தில் நடக்க ஆரம்பித்தான். சற்று துாரத்தில் ஒரு ஊர் தென்பட்டது; அதன் நடுவே ஒரு பெரிய மலை இருந்தது.

அங்கு வந்தான் குணசேகரன். மக்கள் உபசரித்தனர். உணவு கொடுத்தனர். நன்றாக சாப்பிட்டான். உடலில் தெம்பு வந்தது.

மீண்டும், மனதில் மந்திர சக்தி பற்றிய எண்ணம் தோன்றியது. அந்த கிராமவரிடம் சக்தியைக் காட்ட எண்ணினான். காட்டில், வேட்டைக்காரர்களிடம் உதை பட்டது மறந்துவிட்டது.

அரைகுறையாக கற்றதை சோதிக்க மீண்டும் முயன்றான்.

மந்திர சக்தியால் ஊர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக அறிவித்தான் குணசேகரன்.

அந்த ஊரில் விவசாயத்துக்கு தடையாக மலை இருந்தது. அது பற்றி கூறினர் மக்கள்.

'மலையை நகர்த்தி விட்டால் பெரும் புகழ் அடையலாம்' என மந்திரத்தை உச்சரித்தான்.

மறுகணம் மலை நகரத்துவங்கியது.

மரம், செடி, கொடிகள் எல்லாவற்றையும் நசுக்கி அழித்தது.

செய்வதறியாது திகைத்து, பீதியில் ஓடினர் மக்கள்.

நகர்ந்து கொண்டிருந்த மலை வழியில் எதையும் விட்டு வைக்கவில்லை; வீடு, ஆடு, மாடுகள் நாசமாயின. சிக்கிய மக்களில் பலர் மடிந்தனர். எங்கும் ஓலம் கேட்டது.

இதைப் பார்த்த குணசேகரன், 'நன்மை செய்ய நினைத்தால், இப்படி ஆகி விட்டதே' என பயத்தில் செய்வதறியாது திகைத்தான்.

நகரும் மலையை நிறுத்துவதற்குரிய மந்திரம் தெரியாமல் உளறினான். எதையும் முறையாக செய்யும் ஆற்றல் அவனிடம் இல்லை.

ஊர் மக்கள் கூடினர். அழிவுக்கு காரணமானவனை நையப் புடைத்தனர். தப்ப அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். திறனற்று வழியில் மூர்ச்சையாகி விழுந்தான்.

மயக்கம் தெளிந்து சிறிது துாரம் நடந்தான் குணசேகரன். எதிரே, எழில்மிகு ஆசிரமம் தெரிந்தது. அங்கு தவம் புரிந்து கொண்டிருந்தார் அந்த முனிவர்.

அவரது காலடியில் விழுந்து, 'ஐயனே... ஒருவராலும் செய்ய முடியாத சித்து வேலைகளை செய்தேன்; எவரும் பாராட்டவில்லை. மாறாக அடித்து நொறுக்கி விட்டனர்...' என்று கூறி கண்ணீர் வடித்தான் குணசேகரன்.

'மகனே... சித்து விளையாட்டைக் காட்டி, மக்களிடம் பாராட்டு பெற முடியாது. நல்ல சேவை புரிந்தால் வரவேற்பை பெறலாம். செய்யும் பணி, மக்களுக்கு நன்மை விளைவிக்க கூடியதாக இருக்க வேண்டும். அதே நேரம் முழுமையாக இருக்க வேண்டும்...

'இதை புரிந்து கொள்ளாததால் துன்பத்தில் உழல்கிறாய்... இனியாவது நல்ல வழியில் நடக்க பழகு. எதையும் முழுமையாக கற்றுக் கொள்ள முயற்சி செய்...' என அறிவுரைத்தார் முனிவர்.

எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி, மக்களுக்கு சேவை புரிவதையே கடமையாக கொண்டான் குணசேகரன். அனைவரும் புகழ்ந்து பாராட்டினர்.

குழந்தைகளே... பிறருக்கு நன்மை தரும் செயல்களை, விரும்பிச் செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us