PUBLISHED ON : மார் 03, 2017

அரசர் தமிழ்நிலவன், சாதுவான விலங்குகளை வேட்டையாடுவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். அடிக்கடி வீரர்களோடு வேட்டையாட சென்று விடுவார்.
ஒருநாள்-
அரசரும், வீரர்களும் காட்டுக்கு வேட்டையாட சென்றனர். அங்கு ஒரு அழகிய மான், புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.
அரசரோடு வந்த வீரர்கள் அனைவரும், அழகிய மானை கண்டு வியந்தனர். ஏனெனில் அது மிக உயரமாக, பொன் நிறத் தோலில் அழகிய புள்ளிகளோடு, கண்களை கவரும் விதத்தில் இருந்தது. அதன் கொம்புகள் நீண்டு, மிக வசீகரமாக அமைந்திருந்தன. அரசனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
“இந்த அழகிய மானை, நான் மட்டுமே வேட்டையாடிப் பிடிப்பேன்,” என்று தன்னோடு வந்த வீரர்களிடம் கூறிய அரசர், அதை குறி பார்த்து அம்பு எய்தார். நாண் ஏற்றும் ஒலியை கேட்ட மான், விரைவாக காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டது.
“எனக்காக நீங்கள் இங்கேயே காத்திருங்கள். நான் மட்டும், அந்த மானைத் தொடர்ந்து சென்று, வேட்டையாடி வருகிறேன்,” என்று கூறிவிட்டு மானை துரத்தி சென்றார்.
சிறிது நேரத்தில், அரசர் மிகவும் களைப்படைந்தார். அச்சமயத்தில், சற்று தொலைவில் மான் நிற்பதை கண்ட அரசர், உடனே அம்பு எய்ய ஒரு அடி எடுத்து வைத்தார். திடீரென்று அவரின் கால்கள் சேற்றுக்குள் சென்றது. அந்த இடமோ அபாயகரமான புதை குழி.
அந்த குழிக்குள் அரசர் மூழ்க துவங்கினார். மேலும் மேலும் அந்தக் குழி அவரை உள்ளுக்குள் இழுத்தது. தன்னுடன் வந்த வீரர்களை, உதவிக்கு அழைத்தார் அரசர். ஆனால், தொலைவில் இருந்த வீரர்களுக்கு, அரசரின் குரல் கேட்கவே இல்லை.
அவர் துரத்தி சென்ற மானுக்கு, அரசருடைய அபயக் குரல் கேட்டது. உடனே, அந்த புதைகுழியை நோக்கி ஓடி வந்தது. குழிக்குள் மூழ்கிக் கொண்டிருந்த அரசனை, குனிந்து பார்த்த மான், “அரசே, என்னுடைய கொம்புகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் உங்களை வெளியே இழுக்கிறேன்,” என்றது.
மான் கூறியபடியே அரசரும் செய்தார். மரணக் குழியான புதை குழியிலிருந்து அரசரை காப்பாற்றியது மான்.
“அரசே, நீங்கள் களைப்பாகவும், சேறுபட்டு அழுக்காகவும் இருக்கிறீர்கள். என் மீது ஏறிக் கொள்ளுங்கள்,”என்றது மான்.
அரசர், அதன் மீது ஏறி, அமர்ந்து கொண்டார். மான் அவரை தெளிந்த நீர் நிறைந்த ஒரு குளத்திற்கு கூட்டி சென்றது. குளத்தில் குளித்த அரசர், களைப்பு நீங்கி புத்துணர்வு பெற்றார். திரும்பவும் அரசரை தன் மீது ஏற்றிக் கொண்டது மான். ஆவலுடன் காத்திருந்த அவருடைய வீரர்களிடம் அழைத்து சென்றது.
தன் உயிரை காப்பாற்றிய, உயர்ந்த குணம் கொண்ட மானுக்கு, மிகுந்த அடக்கத்தோடு நன்றி கூறினார் அரசர்.
அதன் பின், மனம் திருந்திய மன்னர் கள்ளங்கபடமற்ற, சாதுவான, விலங்குகளை ஒரு பொழுதும் வேட்டையாடக்கூடாது என முடிவு செய்தார்.
குட்டீஸ்... தன் உயிரை கொல்ல வந்த அரசரை காப்பாற்றி எத்தனை அன்பு காட்டியது இந்த மான் என்பதை பார்த்தீர்களா. நீங்களும் உங்களது எதிரிகளுக்கு, ஆபத்து நேரும்போது, அவர்களிடம் அன்பு காட்டி உதவி செய்யுங்கள். அவர்கள் தவறை உணர்ந்து அப்படியே உங்கள் நண்பர்களாகி விடுவர். செய்வீர்கள் தானே!
