PUBLISHED ON : ஜூன் 20, 2020

மூங்கில் காட்டில், மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தன முயல்கள். அந்த வழியே சென்ற நரிக்கு, இது எரிச்சல் தந்தது. 'உருவத்தில் சிறிதாக இருக்குதுங்க; எவ்வளவு திமிரா ஆட்டம் போடுது பாரு...' என, புலம்பியபடி ஓடியது.
எதிரே பாடியபடி வந்தது மான். அதனிடம், 'அண்ணே... காட்டில் நான் ஒருத்தன் இருக்குறது யாருக்கும் தெரியவில்லை...யாருமே என்னை மதிக்க மாட்டேங்கிறீங்களே...' என்றது.
நரிக்கு சலாம் வைத்தபடி, 'முயல்களுக்கு, இன்று திருமண நாளாம்; அதன் குடும்பத்தோட ஆடிப்பாடி கொண்டாடுறாங்க. அப்படியே, என்னை ஆட கூப்பிட்டாங்க; ஒரு கலக்கு கலக்கிட்டு வர்றேன்... உன்னை அழைக்கல்லையா...' என்றது மான்.
உதட்டை பிதுக்கியபடி நடந்தது நரி. அதன் மனதில் வஞ்சக எண்ணம் தலைதுாக்கியது. கொடிய திட்டம் போட்டபடி, திரும்பி முயல் வீட்டை அடைந்தது.
'வாங்க நரியாரே விருந்து சாப்பிடுங்க...' என்று, திராட்சை ரசமும், கேரட்டும் தந்து உபசரித்தன முயல் தம்பதி.
'காட்டிலே இதெல்லாம் விளையுதா...' என்றது நரி.
'ஆமாங்க... பக்கத்திலே ஒரு தோட்டம் இருக்கு; அங்கு தான் தினமும் பறித்து சாப்பிட்டு பசியாறுகிறோம்...' என்றது ஆண் முயல்.
'சரி, திருமண நாள் கொண்டாடுறீங்க... காட்டு ராஜா சிங்கத்திடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டாமா...' என்றது நரி.
'அவரைப் பார்த்தாலே பயமாயிருக்கு; நாங்க எப்படி ஆசி பெற முடியும்...'
'பயப்படாதீங்க... திராட்சையும், கேரட் கிழங்கும் எடுத்து போனால் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார் சிங்கம். நான் அழைத்து போகிறேன்...' என்றது நரி.
யோசித்த அப்பா முயலுக்கு அதன் தீய எண்ணம் புரிந்தது. தப்ப வழி தேடியது. பின் நிதானமாக, 'திராட்சையும், கேரட்டும் கையிருப்பில் இல்லையே... தோட்டத்தில் பறித்தால் தான் உண்டு...' என்றது.
'சரி... முதலில் தோட்டத்துக்கு போய் பறிக்கலாம்...' என உற்சாகமானது நரி.
'நீங்க எவ்வளவு பெரிய உருவம்; ரொம்ப அழகா வேற இருக்குறீங்க... உங்க முதுகில் ஏறிக் கொள்ளட்டுமா... வயலில், தோட்டக்காரன் இருந்தால், சிக்னல் தர உங்க முதுகை செல்லமா தட்டுவேன்; நீங்க சுதாரித்து கொள்ளணும்...' என்று ஒப்பந்தம் போட்டது ஆண் முயல்.
ஒப்புக் கொண்டது நரி; அவை புறப்பட்டன.
தோட்டம் அருகே, நரியின் கழுத்தை கூரிய நகத்தால் கிழித்தது முயல். வலி தாங்காமல் ஊளையிட்டது நரி. மறைந்திருந்த தோட்டக்காரன் தடியால் எறிந்தான்; சுருண்டு விழுந்து உயிரை விட்டது. தாவிக்குதித்து தப்பித்தன முயல்கள்.
குழந்தைகளே... வஞ்சக எண்ணத்துடன் போடும் திட்டம், அழிவுப் பாதைக்கு தான் அழைத்து செல்லும் என்பதை புரிந்து வாழுங்கள்.
த.கலா
