தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திக்... திக்... பங்களா... (11)

திக்... திக்... பங்களா... (11)

திக்... திக்... பங்களா... (11)


PUBLISHED ON : ஜூன் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த இரட்டையரான வினுவும், மதுவும் மர்மங்களை கண்டு துப்பறிய முயன்றனர். அருவியில் குளித்த போது, ரயிலில் எச்சரித்த கொளஞ்சியை கண்டு திடுக்கிட்டான் வினு. இனி -

குளிப்பதை நிறுத்தி, அரக்க பரக்க ஓடினான் வினு; உடம்பிலும், தலையிலும் சொட்டச் சொட்ட ஈரம்; பாறையில் ஏறிய போது, 'தம்பி... அங்கே போகாத... ஈரப்பாறை வழுக்கும்...' என்றது குரல்.

வினு கேட்டால் தானே... தொடர்ந்து ஏறி பாறை உச்சிக்கு போய்விட்டான்; கீழே எட்டினால் தலை சுற்றியது.

அண்ணாந்து நின்று, 'கொளஞ்சி... எங்கய்யா மறைஞ்ச... நீ பாட்டுக்கு வர்ற மிரட்ற மறைஞ்சிடுற... பழையக் குற்றாலத்துல அப்படி என்ன தான் ஆபத்து... என்னை மலை மேல நிக்க வெச்சு புலம்ப விட்டுட்டியே' என்று எண்ணினான்.

சிறுவன் பரபரவென மலையில் ஏறுவதை கண்ட சிலர், பதறி சென்று பாதுகாப்பாய் தரை இறக்கினர். கீழே வரும் போது, 'விடுங்கய்யா... விடுங்கய்யா...' என்று முரண்டினான் வினு.

'மேல எதுக்கு தம்பி போன...'

'மலை மேல ரஜினியை பார்க்க போனேன்...'

'பையன் பைத்தியம் போல... ஏதோ உளர்றான்...' என்று கூட்டம் கலைந்தது.

உண்மையை கேட்டான் சுப்பையன்.

'சும்மா ஒரு த்ரிலுக்காக ஏறினேன்...' என்று கூறியபடி தலை துவட்டினான் வினு.

தலையாட்டியபடி நகர்ந்தான் சுப்பையன்.

முகத்தில் கவலை மேகங்களுடன், 'நான் நிஜம் போலவே பயந்துட்டேன்டா...' என்றாள் மது.

'மீண்டும் கொளஞ்சியை பாத்தேன்...'

'எதுவும் சொன்னாரா...'

'ஆமாம்... வழக்கம் போல எச்சரிச்சிட்டு மறைஞ்சு போயிட்டார்...'

'அடுத்து என்ன செய்யலாம்...'

'குதிரை வண்டிக்கு நட...'

புறப்படும் முன் வினு குரல் கொடுத்தான். வண்டி சக்கரத்தின் கடையாணியை பார்த்தான்.

வலது பக்கத்து கடையாணியைக் காணவில்லை!

'யார் செய்யும் சதி இது...' என்றான் சுப்பையன்.

அக்கம் பக்கத்தில் விசாரித்தான் வினு. எல்லாருமே உதடு பிதுக்கினர்.

கண் கலங்கினான் சுப்பையன்.

'ஏன் அழற...'

'வண்டி பக்கத்துல நான் தான் இருந்தேன்; வேற யாரும் கடையாணியை கழட்டினதை பார்க்கலன்னா நானே கழட்டின மாதிரி அல்லவா ஆய்டும்...'

'நீ விசுவாசமான வேலைக்காரன்... உன்னை சந்தேகப்படுவோமா...'

'தப்பை செஞ்ச ஆளை மோப்பம் பிடிக்காம, கல்லு குண்டாட்டம் நின்னது மகா தப்புத்தானே...'

'விடு சுப்பையன்... இருட்டிருச்சு; தாத்தா, பாட்டி தேடுவாங்க...'

அடுத்த, 10 நிமிடத்தில் புது கடையாணி பொருத்தப்பட்டது. பழையக் குற்றாலம் சாலையில் குதிரை வண்டி பறந்தது. முன்னர் வண்டி கவிழ்ந்த இடத்தில் நிறுத்தச் சொன்னான் வினு.

டார்ச்சால் சுற்றுப்புறம் அளந்தான். தரையில் இரு கடையாணிகள் கிடந்தன. போன தடவை களவாடப்பட்டதும், இப்ப களவாடப்பட்டதும் எப்படி இங்கே... ஒரு கடையாணி நுனியில் மண் ஒட்டியிருந்தது. அதை வைத்து மண்ணில் ஏதோ எழுதியிருந்தனர். மண்ணை உற்று நோக்கினான் வினு.

அங்கு -

'அல்பாயுசு குட்டிகளா... உங்க கல்லறை பழைய குற்றாலத்தில் தான்' என கிறுக்கப்பட்டிருந்தது.

'இது யார் வேலையாக இருக்கும்...'

வேதனையைாய் சிரித்தாள் மது.

'தாத்தா... பாட்டி... கொளஞ்சி, சுப்பையன், ஜெய்சீலிமா தவிர, ஒரு மர்மயோகியும் இருக்கான்...'

'கண்டிப்பா; பூச்சாண்டிக்கெல்லாம், 20ம் நுாற்றாண்டு பசங்க தான் பயப்படும். நாம, 21ம் நுாற்றாண்டு கிட்ஸ். அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே... சரி புறப்படுவோம்...'

தரையில் எழுதியிருந்த எச்சரிக்கை வாசகங்களை, சதுப்பு நிலத்தை புகைப்படமெடுத்தான் வினு.

மீண்டும் வண்டி பறந்தது.

மலை மாளிகைக்குள் குதிரை வண்டி பிரவேசித்த போது இரவு, 8:00 மணி. முதலில் வினு குதிக்க, அடுத்து மது குதித்தான். வண்டியை நடத்திச் சென்றான் சுப்பையன். வண்டியிலிருந்து குதிரையை பிரித்தெடுத்தான். சேணம் அகற்றி, லாயத்தில் விட்டான்; மாளிகைக்குள் மதுவும், வினுவும் நடந்தனர்.

என்ன ஆச்சரியம்!

வெளியே இரவு; உள்ளே பகல் போன்ற வெளிச்சம். ஈசி சேரில் கொள்ளு தாத்தா அமர்ந்திருந்தார். காலடியில் கொள்ளுப் பாட்டி.

தாத்தா நிமிர்ந்தார்; அவரது கண்களில் அமானுஷ்யம் மிளிர்ந்தது.

மதுவும், வினுவும் முறுவலித்தனர். இரு மூங்கில் கூடைகள் நிறைய சமையல் கழிவுகளை எடுத்து, கொல்லைப்புறம் போனாள் செண்பா. கொட்டிவிட்டு திரும்பியவள் ஒரு நொடி நின்று பார்த்து மறைந்தாள்.

'செண்பா... குழந்தைகளுக்கு சாப்பாடு போடு...' என்றார் தாத்தா.

இடியாப்பமும், பாயாவும் சுடசுட வந்தது.

'ஐந்தருவி போனீங்க போல... சுப்பையன் குளிச்சானா...'

'இல்லையே தாத்தா...'

வாய்விட்டு சத்தமாய் சிரித்து, 'அழுக்குப்பய... கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் குளிக்க மாட்டான்.

'பச்சை தண்ணி உடம்புல பட்டா, ஒவ்வாமை போல. குற்றாலத்துல இருந்துக்கிட்டு அருவில குளிக்காதவன் இவன் ஒருத்தனாத்தான் இருக்கும். யாரும் கேட்டா சிரிப்பாங்க...' என்றார் தாத்தா.

'மசாஜ் செய்துக்கிட்டேன் தாத்தா...'

'முன்ன மாதிரி தொழில் தெரிஞ்சவன்கள் இல்லை; நம்பி மசாஜ் செய்ய போக கூடாது; முதுகெலும்புல பிரச்னை வந்திடும்...'

'அப்புறம்...'

'அப்புறமென்ன... சுப்பையன் காவல் காக்க, நானும் மதுவும் குளிக்கப் போனோம்...'

'போனோம்முன்னு இழுக்கற...'

'அங்க தான் விஷயமே இருக்கு; நான் குளிச்சிக்கிட்டு இருக்கறப்ப மலை மேல ஒரு உருவம் நின்னு சமிக்ஞையால மிரட்டுச்சு...' என்று கொளஞ்சி சம்பதந்தப்பட்ட அனைத்தையும் சொல்லி முடித்தான். இருமுறை கடையாணி களவாடப்பட்டதையும் கூறினான் வினு.

ஒரு நொடி ஸ்தம்பித்து இயல்புநிலைக்கு மீண்டார் தாத்தா.

'இவ்வளவு துாரம் நடந்திருக்கா... பார்த்தாயா பார்வதி...'

'கொளஞ்சியா இப்படி நடந்துக்கிட்டான்...' என அங்கலாயத்தார் பாட்டி; பரபரப்பானான் வினு.

'ஏற்கனவே கொளஞ்சியை தெரியுமா... யார் அவர்...'

'நம்ம பண்ணையாள் தான்; 30 வருஷத்துக்கு முன்னாடி செய்த தவறுக்கு, மலை வாழ் மக்கள் விஷ அம்பு செலுத்தி கொன்னுட்டாங்க...'

'கொன்னுட்டாங்களா...'

'ஆமா... நீங்க பார்த்தது கொளஞ்சியோட துர் ஆவி. இப்படித்தான் பல வருஷமா பழையக் குற்றாலம் வரவங்களை, பொய் சொல்லி மிரட்டிக்கிட்டு இருக்கு. பார்க்க தாடி மீசை வைச்சு, காவி அணிஞ்சு, நல்லவன் மாதிரி காட்சியளிக்கும். சமயம் பார்த்து உங்க கழுத்தை புடிச்சு கடிச்சிரும்; ஜாக்கிரதையா இருங்க...'

மதுவும், வினுவும் திகிலுற்றனர்.

கொளஞ்சி கெட்ட ஆவியா... நினைக்க நினைக்க கிலி பரவியது.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us