PUBLISHED ON : ஜூன் 20, 2020

மதுரை, பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில், 1978ல், 9ம் வகுப்பில் சேர்ந்த போது மாணவ,மாணவியர் இடையே பொறாமை நிலவியது. இதை போட்டியாக மாற்ற, ஆங்கில ஆசிரியை காளியம்மா முயற்சி எடுத்தார்.
பள்ளி வளாகத்தில் காய், கனி தோட்டம் அமைக்க தனித்தனியே இடம் ஒதுக்கினார். அதில், கடுமையாக உழைத்தோம். பொறாமை மறைந்து போட்டி வளர்ந்தது. பசுமை பொங்கும் வகையில் செடி, கொடிகள் வளர்த்தோம். அது குதுாகலம் தந்தது.
அதில் திட்டமிடுதல், வேலைப் பங்கீடு, கூடி உழைக்கும் மனப்பான்மை போன்ற பாடங்களைக் கற்றோம். தோட்டத்தில் விளைந்த காய், கனிகளை சந்தைப் படுத்தவும் கற்றோம்.
போட்டி, ஆற்றலாக மலர்ந்தது. வீண் விவாதம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. தோட்டத்தால் தன்னம்பிக்கை பெற்றோம். இதன் மூலம் நற்பண்புகள் வளர்ந்தன.
தற்போது, என் வயது, 58; எங்களை உயர்த்த அயராது உழைத்த ஆசிரியையை எண்ணி பெருமையால் நிறைகிறது மனம்.
- கு.பத்மா, மதுரை.
