PUBLISHED ON : அக் 08, 2022

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, 15 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. கடலால் சூழப்பட்டு, வில் வடிவில் காட்சியளிப்பதால் தனுஷ்கோடி என பெயர் வந்தது. வங்கக் கடலில் பாக்ஜலசந்தியும், மன்னார் வளைகுடாவும் சங்கமிக்கும் பகுதி இது. கடும் புயல், சூறாவளியால், 1964ல் கடல் கொந்தளித்து, தனுஷ்கோடி அழிந்தது. தற்போது, கடலும், மணலுமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
தனுஷ்கோடியில் திடீரென வீசும் காற்று, ஒரு பக்கத்தில் குவிந்திருக்கும் மணலை வாரி, மறுபக்கத்தில் குவிக்கும். இப்படி குவியும் மணலின் உயரம், பெரிய பனை மர உயரத்தை தாண்டும். இதை, 'நகரும் மணல் குன்று' என்பர். தனுஷ்கோடி புயலால் மட்டும் அழியவில்லை; நகரும் மணல் குன்றுகளாலும் அழிந்தது. கடல் கொந்தளிப்பு, கடல் அரிப்பு மற்றும் மணல் மழை இவற்றால், மனிதன் வாழ ஒத்து வராத இடமாக இருந்தது. இப்போது மீன் பிடித்தொழிலை செய்யும் சிலர் வசிக்கின்றனர். பிடித்த மீன்களை ராமேஸ்வரத்திற்கு எடுத்து வந்து விற்கின்றனர்.
இங்குள்ள கடல் பாலம், ரயில் பாதையை, நிறுவிய ஆங்கிலேயர், வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே நகரப் பேருந்து, ஜீப் மற்றும் வேன் போக்குவரத்து தற்போது நடக்கிறது. முன்பு, மண்டபம், பாம்பன் வழியாகவும் ரயில் போக்குவரத்து நடந்தது. கடும் புயல் காரணமாக அது அடியோடு நிறுத்தப்பட்டது.தற்போது, தனுஷ்கோடிக்கு ரயில் விடும் திட்டத்தை அமல்படுத்த முன் வந்துள்ளது அரசு. இதனால், மீண்டும் பெருமை பெறும் நிலை உருவாகியுள்ளது.
