PUBLISHED ON : செப் 21, 2018

சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தில், ஏழை குடும்பத்தில், எட்டு குழந்தைகளில், மூத்தவனாக பிறந்தேன். வறுமையால், 10ம் வகுப்பு படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
என் கணக்கு ஆசிரியர், கிருஷ்ண மூர்த்தி, இலவசமாக, 'டியூஷன்' எடுத்ததோடு, பள்ளி செலவை சமாளிக்க, மகத்தான உதவி செய்தார்.
என் குடும்பநிலை குறித்து, பலருக்கு கடிதங்கள் எழுதி, பொருளுதவி பெற்றுத்தந்தார். அந்த பணத்தில், என் படிப்புக்கு தேவையானதை வாங்கிக் கொண்டேன். நன்றாக படித்து, 1962ல், 10ம் வகுப்பு முடித்தேன்.
பின், தமிழக மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் காட்டிய வழியில், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவுகிறேன். ஒவ்வொரு தீபாவளியன்றும், ஏழைப் பெண்களுக்கு, இனிப்பு பொட்டலத்துடன், புதிய உடைகளும் வழங்குகிறேன்.
எந்த கோவிலுக்குச் சென்றாலும், தர்மம் செய்ய, பிரத்யேகமாக தொகை ஒதுக்கி வைத்திருக்கிறேன். இறுதிவரை, இந்த தொண்டைத் தொடர, இறைவனை இறைஞ்சுகிறேன்.
- சோமன், மதுரை.
