PUBLISHED ON : ஜூன் 21, 2019

ஒருமுறை, ஐரோப்பா கண்டத்தில் உள்ள, பிரான்ஸ் சக்கரவர்த்தி நெப்போலியனுக்கு, செல்வந்தர்கள், பெரிய வரவேற்பு கொடுத்தனர். சக்கரவர்த்தி, ஆசனத்தில் அமர்ந்து, முன்னால் இருந்தவர்களை, கண்ணுற்றார்.
முதல் வரிசையில் அமர்ந்திருந்த, ஒரு பெண் மீது, அவரது பார்வை விழுந்தது. அந்த சீமாட்டி, வைரம், வைடூரியம், முத்துக்களாலான அணிகலன்கள் அணிந்து வசீகரமாக வீற்றிருந்தாள்.
அதிகாரியை அழைத்த மன்னர், 'அந்த பெண்ணின் கணவர் என்ன தொழில் செய்கிறார்...' என, அறியும்படி உத்தரவிட்டார்.
'அவரின் கணவர், ஒரு புகையிலை வியாபாரி. பெரும் செல்வந்தர்; புகையிலை வியாபாரத்தில், அவருக்கு ஏக போக உரிமை உண்டு...' என்ற விவரத்தை அதிகாரி கூறினார்.
அடுத்த நாள் -
மன்னர் ஒரு கட்டளை பிறப்பித்தார். 'இனிமேல் புகையிலை வியாபாராத்தில் யாருக்கும், ஏக போக உரிமை கிடையாது. யார் வேண்டுமானாலும், வியாபாரம் செய்யலாம்...' என்பதே அக்கட்டளை.
ஆடம்பரமாக நகை அணிந்ததால், வந்த வினை இது!
இப்போதும், பெண்கள் பலர், ஆடம்பரமாக நகை அணிந்து, ஆபத்தை வர வைக்கின்றனர்!
