sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

டைனோ என் தோழன்! (4)

/

டைனோ என் தோழன்! (4)

டைனோ என் தோழன்! (4)

டைனோ என் தோழன்! (4)


PUBLISHED ON : செப் 25, 2021

Google News

PUBLISHED ON : செப் 25, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை : வீட்டில், பலவகை விலங்கு மற்றும் பறவைகளை பராமரித்து வந்தான் சிறுவன் சந்திரஜெயன். அவனுக்கு உதவினார் அப்பா. அங்கு விருந்தினராக வந்தார் அவன் மாமா விஞ்ஞானி யோகிபாபு. இனி -

சாப்பாட்டு மேஜையில் நால்வரும் அமர்ந்தனர்; உணவை பரிமாறினாள் பணிப்பெண்.

திருப்தியாக சாப்பிட்டதும், ''அக்காவின் கை பக்குவமே தனி...'' என்றபடி, படுக்கையறைக்கு நகர்ந்தார் யோகிபாபு.

அவரை பின் தொடர்ந்து, ''மாமா... ஒரு சந்தேகம்... அழிந்து போன உயிரினங்களுக்கு மீண்டும் எப்படி உயிர் தருவீங்க...'' என்றான் சந்திரஜெயன்.

''பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், எரிமலை குழம்பு பாய்ந்த போது அதற்குள் சிக்கிய உயிரினங்கள், உறைந்த பாறைக்குள் அச்சுபோல் பதிந்திருக்கும்; அந்த பாறையை ஆராய்ந்தால் அதன் புதை படிவத்தை காணலாம். அதற்கு, 'பாஸில்' என பெயர்... சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதுாரில் கூட இப்படி படிவப் பாறைகள் உள்ளன. இறந்த உயிரினத்தின், சதை துணுக்கு கூட அதில் கிடைக்கும். அந்த துணுக்கை, பரிசோதனை கூடத்தில், 'ஜீன் கோடிங்' அல்லது 'ஜீன் மேப்பிங்' செய்வோம்...'' என்றார் யோகிபாபு.

''ஜீன் கோடிங் என்றால் என்ன...''

''ஒவ்வொரு உயிரினமும், தனித்துவமான மரபியல் அமைப்பு உடையவை; ஒன்றை போல் ஒன்று இருக்காது. ஒரு உயிரினத்தின் மரபியல் வரைப்படத்தை கண்டுப்பிடித்தால், அந்த உயிரினத்தை, மீண்டும், உயிரோடு கொண்டு வரலாம்...''

''தமிழகத்தில், அழிந்த உயிரினங்களில் ஒன்று, சிங்க முகம் உடைய யானை; கோவில்களில் வினோதமான யாளி உருவத்தை பார்க்கிறோம் இல்லையா... அது போன்ற உயிரினத்தை, மீண்டும் மீட்க முடியுமா...'' என்றான் சந்திரஜெயன்.

''முயன்றால் முடியும் மருமகனே...''

''உங்கள் ஆராய்ச்சிக்கு யார் நிதி கொடுக்கிறாங்க...''

''இந்திய அரசும் உதவுகிறது; சில வெளிநாட்டு நிறுவனங்களும் உதவி செய்கின்றன; எனக்கு, கோடிக்கணக்கில் ஆராய்ச்சி நிதி கிடைக்கிறது. அதை செலவழிக்க, 100 கைகள் போதாது...''

''உங்க ஆராய்ச்சியில் சலிப்பு ஏற்படுமா...''

''யார் கூறியது சலிப்பு வரும் என்று... மிகவும் சுவாரசியமாக இருக்கும்... அழிந்து போன உயிரினத்தின் மரபியல் வரைப்படத்தை கண்டுப்பிடிப்பது, ஒரு விடுகதை. புதிரை விடுவிப்பது போன்றது...

''ஒரு வீட்டுக்குள் எலி புகுந்தால், துரத்தி சென்று, வாலை பிடித்திழுத்து, அதன் தலையைப் பார்க்க விரும்புவது போல் ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. எழுத்தாளர் அகதா கிறிஸ்டி எழுதிய கதையை படிப்பது போல் சுகமானது...''

மாமாவின் பேச்சை ஆர்வமுடன் கவனித்தான் சந்திரஜெயன்.

''உன் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்...'' என்றார் யோகிபாபு.

''யாரும் கேக்காததா இருக்கணும்... அதேசமயம், யாரும் தராததாவும் இருக்கணும்; அப்படிப்பட்ட பரிசு வேணும்...''

''அன்டார்டிகா துருவ பகுதிக்கு, ஆராய்ச்சி செய்ய போறேன்... வரியா...''

ஆச்சர்யத்தில் கண்கள் விரிய, ''துருவப் பகுதிக்கா... இப்பவே வர தயாராக இருக்கிறேன்...'' என்றபடி துள்ளிக்குதித்தான்.

அன்டார்டிகாவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிகழ்வுகள் அதிகம். அது போன்ற விபரங்களை அறிந்திராத சந்திரஜெயன், தாவிக்குதித்து ஓடினான். ஆர்வம் மிகுதியால், பெற்றோரிடம் அதுபற்றி கூறினான்.

'அன்டார்டிகாவுக்கு போக வேண்டாம்; பயணம் செய்ய அது சரியான இடமல்ல; குறிப்பாக, சிறுவர்களுக்கு பொழுது போக்க ஒன்றுமில்லை...' தடைபோட முயன்றனர் பெற்றோர்.

அப்போது, அன்டார்டிகா பற்றி விவரித்தார் யோகிபாபு.

''ரஷ்ய நாட்டு மாலுமிகளால், ஜன., 27, 1820ல் கண்டுபிடிக்கப்பட்டது அன்டார்டிகா; அது, பூமியின் தென் துருவம். தனி நாடும் அல்ல; அதேசமயம், எந்த நாட்டுக்கும் சொந்தமும் இல்ல; அது, 14 மில்லியன் சதுர கி.மீ., பரப்பளவு உடையது...

''உலகில் ஐந்தாவது மிகப்பெரிய கண்டம்; வட துருவத்தை விட குளிர் அதிகம்; மக்கள் தொகை குளிர் காலத்தில் ஆயிரம்; கோடை காலத்தில் 4 ஆயிரம்; இந்தியாவிலிருந்து, 11 ஆயிரத்து, 835 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா கண்டப்பகுதி நாடான நியூசிலாந்து வழியாக செல்லலாம்...'' என்று விளக்கினார்.

''நேரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். மேலும் விபரங்களை சொல்லுங்க மாமா...''

''அங்கு டாலர் என்ற பணம் புழங்குகிறது. 20 விமான நிலையங்கள் உள்ளன; அந்த பகுதிக்குள் யாரும் நிலம் வாங்க முடியாது; 12 நாடுகளின் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ளன. இந்தியர்களில், 65 பேர் ஆராய்ச்சி பணியில் ஈடுப்பட்டுள்ளனர்...''

''என்ன மொழிகள் பேசுறாங்க...''

''ரஷ்ய மொழியும், ஆங்கிலமும்...''

''தலைநகர்...''

''உஷாய்யா...''

''வேற தகவல்கள் இருக்கா...''

''அங்கு எல்லா திசைகளும் வடக்கு தான்; குழம்பு கக்குகிற எரிமலைகள் உண்டு. பென்குவின், சிறுத்தை சீல், யானை சீல், ஆல்பட்ராஸ் பறவைகள் மற்றும் திமிங்கலங்கள் உள்ளன...''

அவரது பேச்சுக்கு இடையில் புகுந்து, ''மச்சான்... நீங்க ஆராய்ச்சி செய்ய போறீங்க... இதுல என் மகன் அங்கு வந்து என்ன செய்யபோறான்...'' என்றார் சந்திரஜெயனின் அப்பா.

- தொடரும்...

வஹித்தா நாசர்






      Dinamalar
      Follow us