PUBLISHED ON : பிப் 19, 2022

முன்கதை: அன்டார்டிகா உறை பனியில் கிடந்த டைனோசர் உடல் பாகத்திலிருந்து, டைனோ குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அதன் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சை அளிக்க முடிவு செய்தான், சந்திரஜெயன். இனி -
அலைபேசியில், ''ஹலோ டாக்டர் வணக்கம்... நான் சந்திரஜெயன் பேசுறேன்; ஏற்கெனவே, என் டைனோவுக்கு, சிகிச்சை அளித்தது ஞாபகம் இருக்கா...'' என்றான்.
''ஆமாம் தம்பி... சொல்லுங்க...'' என்றார் மருத்துவர்.
''காலையில் இருந்து, டைனோ ரொம்ப சுகவீனமாயிருக்கு; நீங்க தான் வந்து, சிகிச்சை செய்யணும்...'' என்றான் சந்திரஜெயன்.
''இதோ வருகிறேன்...''
அலைபேசியை துண்டித்து விரைந்து வந்தார் கால்நடை மருத்துவர்.
டைனோவின் நாக்கு, பற்கள், உடல் மற்றும் கண்களை சோதித்தார். அதன் உடல் வெப்பத்தை அளந்தபடி, ''அடிப்படையில் மாமிச பட்சினியான டைனோவைக் கட்டாயப்படுத்தி, காய்கறி உணவு கொடுக்கிறீங்க... அதன் உடல் சோர்ந்து போக, இதுவும் அடிப்படை காரணம்...'' என்றார்.
''தாவர உணவிலும் நிறைய சத்துக்கள் இருக்கிறதே; ஊட்டச்சத்துக்கு, ஏதாவது ஊசியிருந்தா போடுங்க டாக்டர்...'' என்றான் சந்திரஜெயன்.
''சரி... இன்னொரு முக்கிய செய்தி... டைனோ, வனத்தில் வாழும் விலங்கு; காட்டில் மிருகங்களுக்கு சுதந்திரம் அதிகம். நீயோ, அதை துாக்கியபடி பொது இடங்களில் சுற்றுகிறாய்; அதனால், எளிதில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்...''
''சரி டாக்டர்... இனி டைனோவை வெளியே எங்கும் எடுத்துச் செல்ல மாட்டேன்...''
''கவனம் தேவை... திரும்பவும் சொல்றேன்... மிருகங்கள், தங்கள் இனத்துடன் கூட்டமாக வசிக்கும்; உன் தோட்டத்தில், பல மிருகம், பறவை என இருந்தாலும், அதன் இனம் இல்லையே என்ற வருத்தம் டைனோவுக்கு கட்டாயம் இருக்கும்...''
''அதற்கு நான் என்ன செய்ய முடியும்...''
''டைனோவை உனக்கு பரிசளித்தது யார்...''
''என் மாமா விஞ்ஞானி யோகிபாபு...''
''நான் சொன்னதை, அவரிடம் எடுத்து கூறு... ஏதேனும் தீர்வு இருந்தால், முயற்சி செய்வார்; டைனோவுக்கு ஊசி போடுறேன்; டானிக்கும், மாத்திரையும் தருகிறேன்; அதை கொடு...''
''சரி...''
ஊசி போட்டதும், டைனோவை தடவிக் கொடுத்தார்; அதன் முகத்தில் ஒரு முத்தம் கொடுத்து, ''உன் அவஸ்தையை உணர்கிறேன்; சீக்கிரமே குணமடைவாய்...'' என்றபடி புறப்பட்டார் மருத்துவர்.
அடுத்த கணமே, காவல் துறை ஜீப் அங்கு வந்து நின்றது.
அதிலிருந்து, மிடுக்காக இறங்கினார் போலீஸ் கமிஷனர்; அதிர்ச்சி செய்தி ஒன்றை, சந்திரஜெயன் நெஞ்சில் இறக்க தயாராக இருந்தார். அவரை தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட துணை காவல் அதிகாரிகள் படைபோல் திரண்டு வந்தனர்.
சந்திரஜெயனின் பெற்றோரிடம், அறிமுகம் செய்து கொண்டார் கமிஷனர்.
''என்ன கமிஷனர் ஐயா... டைனோவை பார்க்க வந்தீர்களா...''
குறும்பாய் வினவினான் சந்திரஜெயன்.
''நான் வந்தது டைனோ தொடர்பாக தான் தம்பி...'' என்றார் கமிஷனர்.
''சொல்லுங்க ஐயா...'' என்றான் சந்திரஜெயன்.
''தம்பி... உங்க டைனோ, பொதுமக்கள் உயிருக்கு, ஆபத்தும், குந்தகமும் விளைவிக்கும் என புகார் வந்துள்ளது. விண்கல் தாக்குதல் கூட டைனோவால் தான் நடந்திருக்கிறது என நம்புகிறேன்...
''டைனோவை பார்க்க, ஆயிரக்கணக்கில் பார்வையாளர் வருவதால், தெரு மக்களின் நிம்மதி கெடுகிறது. காட்டு மிருகத்தை, வளர்ப்பு மிருகம் என துாக்கியபடி, பொது இடங்களில் சுற்றுறீங்க...
''அந்த மிருகத்தை பார்க்க மக்கள் கூடுகின்றனர்; அதனால் போக்குவரத்து சீர் குலைகிறது; உங்க செயல்பாடு, மக்களின் அன்றாட பணிக்கு பெரும் தொந்தரவாய் இருக்கிறது; டைனோசர் கடித்து, மக்கள் உயிர் போனால் என்ன செய்வது...
''மனித ரத்தத்தின் ருசியை டைனோ பார்த்தால், தொடர்ந்து மக்களை தாக்குமே...'' என்றார் கமிஷனர்.
''இது குறித்து தெரு மக்கள் புகார் கொடுத்துள்ளனரா...'' என்றான் சந்திரஜெயன்.
''ஆம்... புகார் கடிதத்தில் உங்க தெருவை சேர்ந்த, 38 பேர் கையெழுத்து போட்டிருக்காங்க...''
''டைனோவை, குழந்தைக்கு விளையாட்டு காட்ட அழைத்தது அவர்கள்தான்; பிரச்னையை நேருக்கு நேர் சொல்லாமல், காவல்துறை கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளனரே; பொது இடங்களில் டைனோவுடன் சுற்றுவதாக யார் புகார் செய்தார்...'' என்றான் சந்திரஜெயன்.
''நீங்கள், டைனோவை கையில் துாக்கி சுத்துறது, சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது; அதில் இருந்து, புகைப்படம் எடுத்துள்ளோம்... பார்க்கிறீங்களா...'' என்றார் கமிஷனர்.
- தொடரும்...
- வஹித்தா நாசர்
