PUBLISHED ON : பிப் 19, 2022

சட்டைக் காலரில் படிந்துள்ள அழுக்கு, எந்த சோப் போட்டு தேய்த்தாலும், போக மறுக்கிறதா... சிறிது, வெள்ளை சர்க்கரையை தேய்த்துப் பாருங்கள்; நிச்சயம் நீங்கும்.
சட்டையில் படிந்துள்ள அழுக்கை போக்கும் வேதிப்பொருளை, அன்றாடம் உணவாக கொள்கிறோம். காலை எழுந்தவுடன் குடிக்கும் காபி முதல், இரவு படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கும் பால் வரை, உணவில் சர்க்கரை கலந்துள்ளது. உடல் நலத்தை கெடுக்கிறது.
வெள்ளை சர்க்கரை என்ற சீனி எப்படி தயாரிக்கப்படுகிறது என பார்ப்போம்...
கரும்பிலிருந்து சாறு பிழியும் போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. பிழிந்த சாறில் லிட்டருக்கு, 200 மி.லி., வீதம் பாஸ்போரிக் அமிலம் கலந்து, 70 சென்டிகிரேட் அளவு சூடாக்கப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாக பயன் படுகிறது. பின் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து, சல்பர் டை ஆக்சைடு செலுத்துகின்றனர்.
இதை கொதிகலனில் அதிக வெப்பநிலையில் சூடாக்கும் போது, மண், சக்கை போன்ற கசடுகள் பிரிந்து, தெளிந்த கரும்பு சாறு கிடைக்கிறது. ஆனால், அது சத்துக்களை இழந்துவிடுகிறது.
அந்த சாறில், காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா கலந்து கொதிகலனில் அடர்த்தியாக்கப் படுகிறது. அதில், 'சல்பர் டை ஆக்சைடு' மற்றும் 'சோடியம் ஹைட்ரோ சல்பேட்' போன்ற ரசாயனங்களை சேர்க்கின்றனர். அப்போது, படிக நிலையில் வெள்ளை சர்க்கரை உருவாகிறது.
இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது வெள்ளை சர்க்கரை. இதை உணவாக்கும் போது, குடலில் பாதிப்பு ஏற்படும். பல்வலி, தலைவலி, உடல்பருமன், இதயநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு வாய்ப்பு ஏற்படும்.
வெள்ளை சர்க்கரையை உணவாக்குவதைத் தவிர்த்து, வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றை இனிப்பு சுவைக்காக அளவுடன் பயன்படுத்தி, வியாதிகளை தவிர்க்கலாம்.
- பி.சி.ரகு
